21.4 C
New York
September 15, 2019
Breaking News தமிழ்நாடு மாவட்டம்

அலுவலகப்பணி என ஓமன் நாட்டிற்கு அழைத்து சென்று தமிழக பட்டதாரி பெண் அடித்து சித்ரவதை – விஞ்ஞானி பொன்ராஜ் முயற்சியால் மீட்பு

சென்னை, ஆக. 30

புதுக்கோட்டையை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரை அலுவலக பணி எனக்கூறி வேலைக்கு அழைத்துச்சென்ற போலி ஏஜெண்டுகள், வீட்டுவேலை செய்யச்சொல்லி, நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்தும், தன்னை மீட்கக்கோரியும் அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டியான விஞ்ஞானி பொன்ராஜ் வேலுச்சாமிக்கு, அந்த பட்டதாரிப்பெண் கண்ணீர் வேண்டுகோள்விடுத்துள்ளார். உடனடியாக அவர், ஓமனில் உள்ள தமது இயக்க நிர்வாகிகள் உதவியுடன் பட்டதாரி பெண்ணை மீட்டு ஓமனில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விஞ்ஞானி பொன்ராஜ் வேலுச்சாமியே விரிவாக விவரிக்கிறார்.

“காவல்துறையை அணுகினால் தனக்கு நீதி கிடைக்கும் என்று ஒரு சாதாரண மனிதன் என்றைக்கு நம்புகிறானோ, அன்றைக்குத்தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா?” என்று நம்மிடம் ஆதங்கத்தோடு கேட்டு ஆரம்பித்தார் அவர்.

ஏதோ ஒரு ‘சீரியஸ்’ விவகாரத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான்,  அவரை இந்த அளவுக்குப் பேச வைத்திருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது. தொடர்ந்து பேசிய பொன்ராஜ்….

“புதுக்கோட்டையைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகள் ராஜாத்தி. எம்.காம். படித்த இவருக்கு, ஓமனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி
திருவாரூரைச் சேர்ந்த பாத்திமா பேகம் என்ற பெண் அழைத்துச் சென்றுள்ளார் .  

ஓமன் நாட்டிற்குச் சென்றதும் ராஜாத்தியை  சமையல் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர். முடியாது என்று மறுத்திருக்கிறார் ராஜாத்தி.

இதனால் ஆத்திரம் அடைந்த அல் மஸ்டாக் மேன் பவர் சப்ளை என்ற பெயரில் இயங்கிவரும் ஏஜென்ஸியின் மேனேஜர் ஜலால், ராஜாத்தியை அடித்து துன்புறுத்தி, அரை நிர்வாணப்படுத்தி, கட்டாயப்படுத்தி சமையல் வேலை செய்ய வைத்திருக்கிறார்.

அங்கு அந்தப்பெண் பலவிதத்தில் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.  துணி துவைக்க வேண்டும், ஆறு கழிப்பறைகளைக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நாளில் 16 மணி நேரம் வேலை என கடுமையான வேலைகளை செய்யவைத்து, ஒருவேளை உணவையும் சாப்பிடவிடாமல் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

தனக்கு ஏற்பட்ட அவல நிலையை, அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் மகேந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு  கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் ராஜாத்தி.

இதுகுறித்து தகவல் அறிந்த நான், உடனே,  ராஜாத்தியிடம் பேசி, ஓமனில் வசிக்கும் நண்பர் சுரேஷ் பாரதியிடமும் பேசி, அனைத்து விபரங்களையும் பெற்று, ராஜாத்தியின் தாயார் சரஸ்வதி மூலம் மனுவைத் தயார் செய்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், ஓமன் இந்திய தூதரகத்திற்கும் அனுப்பினேன்.

தமிழக முதலமைச்சருக்கும் அந்த மனு அனுப்பப்பட்டது. ஓமன் நண்பர் சுரேஷ் பாரதி மூலமாக கடந்த 10 நாட்களாக ராஜாத்தியிடம் தொடர்புகொண்டு பல்வேறு மீட்பு முயற்சிகளை எடுத்தேன்.  தூதரகம் மூலமாக அந்த வீட்டு உரிமையாளரிடம் பேசி, ராஜாத்தியை விடுவிக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த வீட்டு உரிமையாளரோ, ராஜாத்தியை அந்த மேன்பவர் ஏஜென்ஸி பாத்திமா பேகத்திடமே கொண்டுபோய் விட்டுவிட்டார்.

பாத்திமா பேகத்தால் மீண்டும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் ராஜாத்தி. தொடர்ந்து தலை, உதடு, கை, தொடை என உடலில் பல இடங்களிலும் தாக்கி ரத்தக்காயங்களை ஏற்படுத்தி சித்திரவதை செய்த பாத்திமா பேகம், கைரேகை வாங்கி ராஜத்தியை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.

அப்போது, சமயம் பார்த்து ராஜாத்தியை தப்பிவரச் செய்திருக்கிறார் சுரேஷ் பாரதி. அவர் மூலமாக கேரளா அசோசியேஷன் நண்பர்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த லெனின் மற்றும் முருகேசன் ஆகியோரின் உதவியோடு, தப்பி வந்த ராஜாத்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர் ஓமன் இந்திய தூதரகத்தில் அவர் பத்திரமாகச் சேர்க்கப்பட்டார்.

ராஜாத்தி மட்டுமல்ல. இப்படி பல பெண்கள் அங்கே அடிமைப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி, பிறகு மீட்கப்பட்டு இந்திய தூதரகத்தில் அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கூடிய சீக்கிரமே, ராஜாத்தி உள்ளிட்ட பெண்கள் அனைவரும் அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி விடுவார்கள்.  

புதுக்கோட்டை நண்பர் அசோக்குமார் மூலமாக, ராஜாத்தியின் தாயார் சரஸ்வதியின் புகார் மனுவை, எஸ்.பி. மூலமாக டி.எஸ்.பி.யிடம் சேர்த்திருக்கிறோம். தமிழகத்திலுள்ள பெண்களை ஏமாற்றி, அங்கு அழைத்துச்சென்று அடிமைகளாக நடத்துவதற்குக் காரணமாக இருக்கும் பாத்திமா பேகம் மற்றும் பார்வதி ஆகியோர் மீது தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இமிகிரேஷன் அலுவலகத்தில் லுக்-அவுட் நோட்டீஸ் தந்து, பாத்திமா பேகம் சென்னை வரும்போது, விமான நிலையத்திலேயே அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். இது நடந்தால்தான், அரபு நாடுகளில் துயரங்களைச் சந்தித்துவரும்  நூற்றுக்கணக்கான பெண்கள் தப்பிக்க முடியும்.

இதுபோன்ற இழிநிலைக்கு யார் காரணம்? பட்டப்படிப்பு, மேற்படிப்பு படித்தவர்களுக்கு  மாதம் ரூ.30 ஆயிரம் வரையாவது வாருமானம் ஈட்டுகின்ற வேலை கிடைத்திருந்தால், அந்தப் பெண்களுக்கு இப்படி ஒரு அவலம் ஏற்பட்டிருக்காது. சொந்த நாட்டில் அப்படி ஒரு வேலை வாய்ப்பினைக் கொடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகள்தான், இதுபோன்ற அவலங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.” என்றவர், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் அலட்சியப் போக்கினையும் சுட்டிக்காட்டினார்.

“ஓமனில் இருந்து மகள் ராஜாத்தியை மீட்கக்கோரி புகார் மனு அளிக்கச் சென்ற அவரது தாயார் சரஸ்வதியை காவல்துறையினர் தொடர்ந்து அலைக்கழித்திருக்கின்றனர். அதனால்,  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக பலமுறை அவர் செல்ல நேரிட்டது.  

அந்தக் காவல்நிலையம் புகாரை ஏற்க மறுத்த நிலையில், நமது வற்புறுத்தலின் பேரில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தனர். மேலதிகாரிகள் பரிந்துரை செய்தாலும், கீழ்நிலையில் உள்ள ஒருசில காவலர்கள் சாதாரண மக்களின் பிரச்சனையை எவ்வளவு அலட்சியமாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு சரஸ்வதியின் புகாரே ஒரு எடுத்துக்காட்டு.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையில், கொடுத்த புகாருக்குப் பதிலாக வேறொரு புகாருக்கு சி.எஸ்.ஆர். கொடுத்திருக்கின்றனர். அதில் சரஸ்வதியின் கையெழுத்தையும் பெற்று புகாரைப் பதிவு செய்திருக்கின்றனர். காவல் நிலையங்கள், சாதாரண மக்களின் பிரச்சனையை மிகமிகக் கேவலமாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு சாட்சியமாக இருக்கிறது தவறாக எழுதப்பட்ட அந்த சி.எஸ்.ஆர். பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்ட கணேஷ் நகர் காவல் நிலைய அதிகாரிகள் மீது தமிழக காவல்துறை தலைவர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மெத்தனமாகச் செயல்படும் கணேஷ் நகர் காவல் நிலைய அதிகாரிகள் பாத்திமா பேகம், ஜலால், பார்வதி போன்ற போலி ஏஜண்டுகள் மீது  எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? ராஜாத்தி போன்ற அபலைப் பெண்களுக்கு தமிழ்நாட்டில் எப்படி நீதி கிடைக்கும்? என்றெல்லாம் மனதுக்குள் கேள்விகள் எழுகின்றன.

தமிழகத்தில் நீதி மறுக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பல சம்பவங்கள் போல இதுவும் கடந்துபோகும் என்றால், தமிழக ஆட்சிமுறை நிர்வாகத்தின் மேல், சட்டம் ஒழுங்கின் மேல், சாதாரண மனிதர்களுக்கு உள்ள நம்பிக்கை தகர்ந்துபோகும். இனிவரும் காலங்களில்  இதற்கான விலையை ஆட்சிமுறை நிர்வாகத்தை தற்போது நடத்துபவர்கள் கொடுத்தே தீரவேண்டும்.” என்றார் பொன்ராஜ் கொதிப்புடன்.

தமிழரான ராஜாத்தி அனுபவித்த  கொடுமைகள், காலம் காலமாக இந்தியப் பெண்களுக்கு  ஓமன் போன்ற அரபு நாடுகளில் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண எந்த அரசாங்கமும் முனைந்ததில்லை. வாக்களிப்பதை ஜனநாயகக் கடமை என்கிறோம்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்பவர்கள், இந்திய மக்கள், குறிப்பாக பெண்கள் சந்தித்துவரும் இதுபோன்ற பிரச்சனைகளில் உரிய கவனம் செலுத்தாததை என்னவென்று சொல்வது? 

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புவோர், அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அலுவலக பணிக்கோ, தொழிற்சாலை பணிக்கோ அல்லது வீட்டு வேலைக்கோ செல்வதற்கான உரிய அழைப்பு ஆவணங்களை பெறாமல் வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும்.

வேலை வாங்கி தருகிறோம் என்று போலி ஏஜென்டுகள் கூறும் ஆசைவார்த்தைகளை கண்மூடித்தனமாக நம்பி பணத்தை கட்டி ஏமாறுவதுடன், இதுபோன்ற கொடுமைகளுக்கும் ஆளாகாமல் அரசின் வழிகாட்டலுடன் இளைஞர்கள் உஷாராக செயல்பட வேண்டும்.

இவ்வாறு விஞ்ஞானி பொன்ராஜ் வேலுச்சாமி தெரிவித்தார்.

Related posts

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் : மு.க.ஸ்டாலின்

Buhari Shareef

மு.க.ஸ்டாலின் – சீதாராம் யெச்சூரி சந்திப்பு : சென்னையில் நவ.13 மாலை நடைபெறுகிறது

Buhari Shareef

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : பெற்றோர் வாக்களித்தால் குழந்தைகளுக்கு கூடுதலாக 4 மதிப்பெண்கள்

Buhari Shareef

புயலில் சிக்கி மாயமான 952 தமிழக, கேரள மீனவர்கள் பத்திரமாக மீட்பு – மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

Buhari Shareef

இந்திய விமானங்கள் பறக்க தடையா? – பாகிஸ்தான் மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி மறுப்பு

Buhari Shareef

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டார்- டோக்கியோவில் நாளை நடைபெறும் இந்தியா-ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பு

Buhari Shareef