15 C
New York
October 22, 2019
சினிமா

விவேகம் – திரை விமர்ச்சனம்

 • :
  ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  அஜித் குமார் , காஜல் அகர்வால் , அக்ஷரா ஹாசன் , கருணாகரன் , விவேக் ஓபராய்
 • இயக்குனர்:
  சிவா
 • எழுதியவர்:
  சிவா, கபிலன் வைரமுத்து
 • பாடல்கள்:
  அனிருத் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் முக்கியமான ஒருவர், ‘தல’ அஜீத். திரையுலகில் 25 வருடங்களாக நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களைக் கொடுத்திருந்தாலும் இளைஞர்களிடையே மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தாலும் இவருக்கு ரஜினி, விஜய் அளவிற்கு குழந்தை ரசிகர்களோ ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிகர்களோ அதிகம் இருந்ததில்லை. அதை பெரிதளவில் மாற்றிய இரு திரைப்படங்கள் இயக்குனர் சிவாவின் ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’. இரண்டு படங்களுமே ஏகப்பட்ட குறைகளுடன் பெரும்பாலும் அஜீத் ரசிகர்களை மட்டுமே திருப்திபடுத்த முயற்சித்திருந்த சுமார் ரக படங்களாக இருந்தாலும் கூட, ‘ஆலுமா டோலுமா’ ‘தெறிக்க விடலாமா’ போன்ற கமர்ஷியல் விஷயங்கள் மூலம் குழந்தைகளுக்கு கூட அஜீத்தை பிடிக்க செய்தது. அதனாலோ என்னவோ தொடர்ந்து சிவா இயக்கத்தில் மூன்றாவது படத்தையும் நடித்து முடித்துள்ளார் அஜீத். முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டு ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘விவேகம்’ திரைப்படம், அஜீத்தின் கேரியரிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆகும். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ திரைப்படம், அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளதா? தொடர்ந்து படியுங்கள்.

‘விவேகம்’ திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை இப்படத்தின் டீசர் அல்லது டிரைலரைப் பார்த்தே ஓரளவாவது எளிதாகவே கணித்துவிட முடியும். உலகின் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவிருக்கும் ஒரு புளூட்டோனிய அணு ஆயுதத்தை தடுக்க, ஒரு நேர்மையான இன்டர்போல் அதிகாரி முயற்சிக்கையில் என்னென்ன தடைகளை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது, அதையெல்லாம் தாண்டி அவர் எப்படி அதை செய்து முடிக்கிறார் என்பதே படத்தின் கதை. இப்படத்தின் ஜானர் ஒரு சர்வதேச ஸ்பை த்ரில்லராக இருந்தாலும் கூட, அதை தன் பாணியிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா   . ‘வீரம்’ திரைப்படத்தில் ஒரு கிராமத்து ஆளாகவும், ‘வேதாளம்’ படத்தில் அடாவடியான லோக்கல் ரவுடியாகவும் அஜீத்தை அவரது வழக்கமான தோற்றம் மற்றும் உடல்மொழியிலிருந்து சற்றே வித்தியாசமாக காட்டியதை தொடர்ந்து, ‘விவேகம்’ திரைப்படத்திலும் ஒரு இன்டர்போல் அதிகாரியாக அஜீத் அவர்களை தன்னால் முடிந்த வரை ரசிகர்கள் பார்வைக்கு புதிதாக ரொம்பவே ஸ்டைலாக காட்ட முயற்சித்துள்ளார் இயக்குனர் சிவா. அஜீத்தின் ரசிகர்களை ஒவ்வொரு காட்சியிலுமே விசிலடித்து ரசிக்க வைக்க வேண்டுமென முயற்சித்து, படத்தில் கமர்ஷியல் அம்சங்களை சேர்த்துள்ளார். பைக் சேஸ், எக்கச்சக்க ஸ்டண்ட் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் என எல்லாவற்றையும் கொடுக்க நினைத்து, அதுவே ஒரு கட்டத்தில் திகட்ட திகட்ட நிறைந்துவிட்டதோ என தோன்றுகிறது.

அஜீத்தின் அட்டகாசமான அறிமுகக் காட்சியோடு தொடங்கும் திரைப்படம், அதன் பின்னர் வரும் 15 நிமிடங்களில் சற்றே தடுமாறுகிறது. அந்த 15 நிமிடங்களைத் தவிர, முதல் பாதி முழுக்கவே எங்குமே சலிப்பை ஏற்படுத்தாமல் சுவாரஸ்யமாக நகர்கிறது. இப்படத்தின் முதல் பாதியின் திரைக்கதைக்கும் இயக்குனரின் முந்தைய படங்களான ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தின் திரைக்கதைக்கும் நிறையவே நல்ல வித்தியாசத்தை காண முடிந்தது.

முதல் பாதியில் வரும் காட்சிகளில் சின்ன சின்ன விஷயத்தையும் நம்பகத்தன்மையோடு அளிக்க ஆங்காங்கே இயக்குனர் சிவா எடுத்திருக்கும் மெனக்கெடல்கள் தெரிகிறது. மேக்கிங்கும் கூட, சிவாவின் முந்தையப் படங்களை விட பல மடங்கு சிறந்ததாய் இருந்தது. சண்டைக்காட்சிகளாகட்டும், ஒளிப்பதிவு ஆகட்டும், கலை இயக்கம் ஆகட்டும் – அனைத்துமே வெகுவாக பாராட்டும்படி அமைந்திருந்தது. முதல் பாதியில் வந்த காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் கூட படத்திற்கு பலம் சேர்க்கும்படி கதையோடு பின்னப்பட்டிருந்தது. கதைக்கு தேவையே இல்லாத காட்சிகள் எதுவும் இல்லாமல், நேர்கோட்டில் அமைக்கப்பட்டிருந்த முதல் பாதியின் திரைக்கதை படு வேகமாக நகர்ந்தது. ஆனால், இவற்றிற்கெல்லாம் நேர்மாறாக இரண்டாம் பாதி பெரும்பாலும் அயற்சியையே தந்தது. யாழினியை ஹீரோ காப்பாற்றும் வரை, சரியான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த திரைக்கதை அதன் பின் கடைசி 45 நிமிடங்கள் தடுமாறத் தொடங்கியது. திரும்ப திரும்ப ‘துரோகம், துரோகம்’ என ஹீரோ பஞ்ச் டயலாக் பேசுவதும், செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவது, மின்சார மையங்களை செயலிழக்க செய்வது என ரொம்பவே டெக்னிக்கலாக பேசிக்கொண்டே இருப்பது, வில்லன் உட்பட படத்தில் வரும் எல்லோருமே ‘ஹீரோ அப்படி, ஹீரோ இப்படி, அவரு எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா’  என விடாமல் ஹீரோ துதி பாடுவது என நம்மை கொட்டாவி விட செய்கிறார்கள். ஏற்கனவே ஆயிரம் படங்களில் பார்த்த பாணியிலான படு மந்தமான க்ளிஷே க்ளைமாக்ஸும், ‘வெறியேற’ பாடல் படமாக்கப்பட்ட விதமும் இன்னும் பெரிய மைனஸாக அமைந்து போனது.

‘விவேகம்’  படத்தின் மிகப்பெரிய பலம் – நடிகர் அஜீத்தும், அவரது அதிரவைக்கும் திரை ஆளுமையும்! ‘ஒன் மேன் ஆர்மி’யைப் போல தனியாளாக மொத்த படத்தையும் தூக்கித் திரிகிறார். உடல் எடையைக் குறைத்து ஃபிட் ஆனதில் தொடங்கி ஒவ்வொரு சண்டைக்காட்சிக்கும் ‘தலை விடுதலை’ பாடலுக்காகவும் அவர் எடுத்துள்ள சிரத்தை வரை, எல்லாமே இத்திரைப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ‘வரேன்ம்மா’ என யாழினியிடம் போனில் அலறுவது, ‘சுகர் இருக்கா’ என வில்லனை அடித்துக்கொண்டே ஸ்டைலாக கேட்பது, ஆர்யனுடனான தொலைபேசி உரையாடல் காட்சி, ‘பயத்திற்கு பாஷை தேவையில்ல’ போன்ற வசனங்களை உச்சிரிக்கையில் என பல காட்சிகளில் தன் ரசிகர்கள் தொடர்ந்து விசிலடிக்கும் வாய்ப்பை அஜீத் தர தவறுவதில்லை. உடல் எடையைக் குறைத்து அவ்வளவு அழகாக இருக்கிறார் ‘தல’ அஜீத்; அப்படியே அந்த ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கிற்கும் ஒரு கும்பிடு போட்டு தலைக்கு டை அடித்திருக்கலாமே தல. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டதால், அவரது சில அசாத்திய சண்டைக்காட்சிகள் கூட நம்பும்படி இருந்தது. அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தை இன்னும் சில படிகள் மேலேற்றியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. வெற்றியின் திறமிக்க ஒளிப்பதிவு, பல காட்சிகளில் கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி இருந்தது; படத்தின் சில கடினமான சண்டைக்காட்சிகளில் ஹீரோ கஷ்டப்பட்டதில் பாதியளவாவது அவரும் கஷ்டப்பட வேண்டியிருந்திருக்கும் என்பது படத்தைப் பார்க்கையில் தெரிந்தது.

‘லாஜிக்ன்னா கிலோ எவ்ளோ’ என கேட்கும் வகையிலான பல காட்சிகள் படத்தில் உண்டு. கைத்துப்பாக்கியால் ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்துவது முதல் உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் தேடும் குற்றவாளியான ஒருவன் எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு தனியாளாக ஜெயித்துக்கொண்டே இருப்பது வரை படம் நெடுக படம் பார்க்கும் நம் காதில் ‘பூ சுற்றல்’ உண்டு. சுற்றியும் கையில் லேசர் துப்பாக்கிகளோடு நூறு பேர், ஹெலிகாப்டர்கள் என நின்றிருக்கையில் தமிழே தெரியாதவர்களிடம் அவ்வளவு பெரிய பஞ்ச் டயலாக்கை யாருக்காக பேசுகிறார் அஜீத் என்பதில் தொடங்கி பாடல்களுக்கு கூட தமிழ் சப்டைட்டில் போடுவது வரை சில சீரியஸ் கணங்களில் நம்மையறியாமல் சிரிப்பு வந்துவிடுகிறது. முதல் பாதியின் திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் தன் முழு உழைப்பையும் கொடுத்திருக்கும் இயக்குனர் சிவா, இரண்டாம் பாதியிலும் அதே அளவு கவனத்தை செலுத்தியிருந்தால் ‘விவேகம்’ ஒரு நல்ல எண்டர்டெயினராக அமைந்திருக்கும்.

இதையெல்லாம் தாண்டி வேகமாக நகரும் முதல் பாதிக்காகவும், எக்கச்சக்க எனர்ஜியோடு இருக்கும் ‘தல’ அஜீத்துக்காகவும், டெக்கனிக்கல் அம்சங்களுக்காகவும் ‘விவேகம்’ திரைப்படத்தைக் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்!

Related posts

ரஜினியின் 167வது படத்தின் பெயர் தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Buhari Shareef

விஜயின் மெர்சல் படத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை எதிர்ப்பு

Buhari Shareef

பேட்ட படத்தின் 25வது நாள் கொண்டாட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ், அனிருத் ஆட்டம்-பாட்டம்

Buhari Shareef

27 வருடங்களுக்கு பின் இணைந்த எஸ்.பி.பி. – ஏசுதாஸ்: பாடல்: பழனி பாரதி

Buhari Shareef

OVER NIGHT STARDOM FOR RAKESH UNNI MEETS NAMAVAR…!!

Buhari Shareef

இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம்: கமல்ஹாசன் கருத்து

Buhari Shareef