Home Blog

பைக் மீது கார் மோதிய விவகாரம் : விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

0

பைக் மீது கார் மோதிய விவகாரம் : விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

VCK  leader Thirumavalavan explains the incident of a car hitting a bike

  • திருமாவளவன் பேசுகையில், வழக்கறிஞர் வேண்டுமென்றே பைக்கை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்

  • எடப்பாடி பழனிசாமி முன்பு ஒருவர் சென்று பைக்கை நிறுத்தினால், இப்படி கேள்வி எழுப்புவார்களா?ஒரு நிமிடம் கூட இல்லை. என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

சென்னை, அக். 11

சாலையில் சென்ற பைக் மீது தனது கார் மோதியதாக எழுந்த விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார். டூ வீலரில் வந்த வழக்கறிஞர் ஒருவர், காவலர்கள் சொன்னதை கேட்காமல் ஆணவத்துடன் முறைத்ததால் , நான்கு தட்டுத் தட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து விசிக வழக்கறிஞர் அணி சார்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றிருந்தார். இந்த போராட்டத்தை முடித்து புறப்படும் போது, திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது உரசியதாக கூறப்படுகிறது.

இதனால் கார் ஓட்டுநருடன் வாக்குவாதம் ஏற்பட, திருமாவளவனின் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர் இடையில் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில், வழக்கறிஞர் வேண்டுமென்றே பைக்கை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை உள்ளிட்டோர் பேசியதால், பலரின் கவனம் திரும்பியது. இந்த நிலையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதில் திருமாவளவன் பேசுகையில், ஒரு கட்சித் தலைவர்.. அவரின் காரின் முன்பு சென்று ஒருவர் பைக்கை நிறுத்துகிறார். அவரின் பாதுகாப்பு தொடர்பாக எவனும் கேள்வி கேட்கவில்லை. திருமாவளவன் ஏன் இறங்கி சென்று தடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி முன்பு ஒருவர் சென்று பைக்கை நிறுத்தினால், இப்படி கேள்வி எழுப்புவார்களா?ஒரு நிமிடம் கூட இல்லை. என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. அவன் வந்து நின்று முறைத்தான். யாராக இருந்தால் என்ன என்று கேட்டான்.. அவர்களிடம் முறைத்ததால் அவர்கள் அடித்தார்கள்.. அவன் என்ன சாதி, என்ன மதம் என்று கூட தெரியாது. ஓரமா நில்லுங்க என்று போலீசார் கேட்கிறார்கள்.

அவர்களிடமும் முறைக்கிறான்.. யாராக இருந்தால் என்ன என்று முறைத்தான்.. முறைத்து பார்த்ததால் தான் அடி வாங்கினான்.. அவ்வளவு திமிராடா உனக்கு.. ஆணவமாடா உனக்கு.. என்றுதான் அடித்தார்கள்.. வெறும் 4 அடிதான்.. ஒழுங்காக கூட அடிக்கவில்லை.. உடனே அவன் மயக்கம் போட்டு நெஞ்சு வலிக்கிறது என்று நாடகமாடுகிறான்.. என்ன நாடகம் பாருங்க.. போலீசாரிடம் நானே தெரியாமல் பண்ணிவிட்டான் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.. நமது ஆட்களையும் அமைதிப்படுத்தினேன்.. உடனே திருமாவளவன் தான் அடிக்க சொன்னாரு என்கிறார்கள். அடங்க மறு என்று தான் சொல்லி இருக்கிறேன். எந்த இடத்திலும் வன்முறையை தூண்டியதில்லை.. அடங்க மறு என்பது ஒரு அரசியல் என்று தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு

IT companies decide to lay off thousands of employees

  • (டிசிஎஸ்), 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை, அதாவது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது.

  • நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஹெச்.சி.எல் டெக் 2024 இல் 8,000 க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைத்துள்ளது.

சென்னை, அக். 08

டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளன

 டிசிஎஸ் பணிநீக்கங்கள்: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை, அதாவது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால், நிறுவனம் தற்போது மறுசீரமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

பணிநீக்கங்களைத் தவிர, 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான டிசிஎஸ்-இன் பணிவிலகல் விகிதம் முந்தைய காலாண்டின் 13.3% ஐ விட, கடந்த பன்னிரண்டு மாதங்களில் 13.8% ஆக சற்று அதிகரித்துள்ளது. கூகுள் பணிநீக்கங்கள்: உலகளாவிய சர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள், அதன் செயற்கை நுண்ணறிவு அமைப்பை விரைவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வடிவமைப்பு தொடர்பான பணிகளில் இருந்த 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் தனது பலத்தை அதிகரிக்கவும், மற்ற துறைகளில் செலவுகளைக் குறைக்கவும் முயன்றபோது இந்த பணிநீக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

 விப்ரோ பணிநீக்கங்கள்: விப்ரோவில் அதிகாரப்பூர்வ பணிநீக்கங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், செலவுத் திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த 24,516 வேலைகளை நிறுவனம் குறைத்துள்ளது. 2024-25 நிதியாண்டில், விப்ரோவின் பணிவிலகல் விகிதம் தொடர்ந்து 15% ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 614 அதிகரித்து 2,33,346 ஆக உயர்ந்துள்ளது என்று முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹெச்.சி.எல் டெக் பணிநீக்கங்கள்:  நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஹெச்.சி.எல் டெக் 2024 இல் 8,000 க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைத்துள்ளது. இது பெரும்பாலும் அதன் நிறுவனப் பங்குகளை விற்றதாலும், துறையில் நடந்த மறுசீரமைப்புகளாலும் நிகழ்ந்துள்ளது.

2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஹெச்.சி.எல் டெக்கின் பணிவிலகல் விகிதம் 20 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 12.8% ஆக இருந்தது, இது 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் குறைவு. பணிநீக்கங்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

ஆக்சென்ச்சர் பணிநீக்கங்கள்: உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆக்சென்ச்சர், அதன் உலகளாவிய பணியாளர்களில் 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கடந்த வாரம் அறிவித்தது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால் நிறுவனம் பெரிய மறுசீரமைப்புகளை மேற்கொள்வதால், வரவிருக்கும் மாதங்களில் மேலும் பணிநீக்கங்கள் ஏற்படலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

மைக்ரோசாஃப்ட் பணிநீக்கங்கள்: ‘ப்ளூம்பெர்க்’ அறிக்கையின்படி, மைக்ரோசாஃப்ட் அதன் மென்பொருள் பொறியியல் பிரிவில் 40% க்கும் அதிகமாகவோ அல்லது கிட்டத்தட்ட 4,000 வேலைகளையோ குறைத்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக டிசிஎஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகின்றன. இதனால் ஊழியர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Tamil Nadu Chief Minister M.K. Stalin announces the name of the Avinashi Road flyover in Coimbatore after G.D. Naidu

  • திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

  • புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்’

சென்னை, அக். 07

கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ 2020-ல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவிநாசி சாலை மேம்பாலம், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் (09.10.2025) மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன் தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்’ எனத்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தென்னிந்தியாவில் பிற்போக்குச் சக்திகளைப் பிடரிபிடித்துத் தடுத்து நிறுத்தியதைப்போல வடஇந்தியாவில் செய்யத் தவறிவிட்டார்கள் – வைரமுத்து கண்டனம்

தென்னிந்தியாவில் பிற்போக்குச் சக்திகளைப் பிடரிபிடித்துத் தடுத்து நிறுத்தியதைப்போல வடஇந்தியாவில் செய்யத் தவறிவிட்டார்கள் – வைரமுத்து கண்டனம்

North India failed to curb and stop the reactionary forces as in South India – Vairamuthu condemns

  • நீதித்துறையைக் கறைசெய்யும் களங்கமாகும் வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன் பிற்போக்குத்தனம்தான் இந்த அவமானச் செயலுக்கு அடிப்படை

  • நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும் பழையன கழிய வேண்டாமா?

சென்னை, அக். 07

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், ‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’ என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ”இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது” என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் @JusticeBRGavai மீது அநாகரிகத்தை வீசமுயன்றது கண்டு அதிர்ந்துபோனேன் இது முறைசெய்யும் நீதித்துறையைக் கறைசெய்யும் களங்கமாகும் வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன் பிற்போக்குத்தனம்தான் இந்த அவமானச் செயலுக்கு அடிப்படை என்று அறிகிறேன் தென்னிந்தியாவில் பிற்போக்குச் சக்திகளைப் பிடரிபிடித்துத் தடுத்து நிறுத்தியதைப்போல வடஇந்தியாவில் செய்யத் தவறிவிட்டார்கள் அந்தச் சாத்திரத்தின் ஆத்திரம்தான் இது காலில் அணியவேண்டியதைக் கையில் அணிந்தபோதே அவர் அறிவழிந்துபோனார் என்று அறிய முடிகிறது அதை மென்மையாகக் கையாண்ட நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம் நீதியரசரின் மாண்பு அவரை மன்னித்துவிட்டது வீச முயன்ற பொருளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம் அவர் பேசியபொருளை மறந்துவிட முடியாது அது நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும் பழையன கழிய வேண்டாமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

சிஐடியு கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

சிஐடியு கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Tamil Nadu Government Transport Employees Federation announces Fort blockade protest on October 9th, urging the government to resolve CITU demands

  • தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 பேர் அளவிற்கு ஓய்வுப் பெற்ற மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் இன்றுடன் (அக்.6ம் தேதி) 50ம் நாள் நிறைவு

  • கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அரசின் இந்நடவடிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.

சென்னை, அக். 06

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (அக்.9) கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது குறித்து சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் மற்றும் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சார்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 பேர் அளவிற்கு ஓய்வுப் பெற்ற மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் இன்றுடன் (அக்.6ம் தேதி) 50ம் நாள் நிறைவு பெற்றுள்ளது. அமைதியான முறையில் பொதுமக்கள் சேவையும் பாதிக்கப்படாமல் கடந்த 50 நாட்களாக நடைபெறும் தொடர் போராட்டத்தின் கோரிக்கைகளைப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த செப்டம்பர் 1ம் தேதி போக்குவரத்து அமைச்சர் அழைத்து பேசினார். சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். நிதித் துறையுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறிய அமைச்சர் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

நடைபெறும் போராட்டம் புதிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறவில்லை. தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அரசின் இந்நடவடிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.
சிஐடியு முன்வைத்துள்ள கோரிக்கைகளில் அரசு நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காணும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும். கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி வியாழக்கிழமை அன்று கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டும் என சம்மேளனத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

சென்னை தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதி

சென்னை தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதி

PMK founder Ramadoss admitted to private hospital in Chennai

  • அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்தும் தொடர்ந்து அறிவிப்பு

  • ராமதாஸின் ஆதரவாளர்களை நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்புகளில் நியமித்தும் அன்புமணி பதிலடி

சென்னை, அக். 06

சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதயம் தொடர்பான பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி,

“ நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இதயத்துக்கு செல்லும் ரத்துக்குழாய்கள் நன்றாக உள்ளன. பயப்படும்படி அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இதய சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அவர் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார் அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார். மருத்துவர்களிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தேன்” என்றார்.

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால் பாமகவில் கடந்த சில மாதங்களாக குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். மேலும், அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்தும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார் ராமதாஸ்.

அதேபோல, ராமதாஸின் ஆதரவாளர்களை நீக்கியும், தனது ஆதரவாளர்களை பொறுப்புகளில் நியமித்தும் அன்புமணியும் பதிலடி கொடுத்து வந்தார். இந்த சூழலில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை, அன்புமணி நேரில் சென்று நலம் விசாரித்தது பாமக வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 டார்ஜிலிங்கில் பேய் மழை : நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி

டார்ஜிலிங்கில் பேய் மழை : நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி

Heavy rain in Darjeeling: 17 killed in landslide

  • “மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.”

  • டார்ஜிலிங்குக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்த நிலையில் நிலச்சரிவால் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உதவிக்காக காவல் கட்டுப்பாட்டு அறை 91478 89078 என்ற தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.

டார்ஜிலிங், அக். 5

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுகியா போரியா, மிரியா போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாயினர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜி நாளை நேரில் பார்வையிடுகிறார்.

கடந்த மாதம் டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இப்போது, மேற்குவங்க மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இமயமலையை ஒட்டி உள்ள மலைப் பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதில், டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17  பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவானது டார்ஜிலிங்கின் மிரிக் – சுகியாபோக்ரி சாலையில் உள்ள மலைப்பாதைகளில் நிகழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும், வீடுகள், சாலைகள் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. தொலைத் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் பற்றிய மேலதிக துல்லிய விவரங்கள் வந்து சேர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டார்ஜிலிங் மாவட்ட நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் அளித்தப் பேட்டியில், “மீட்பு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.” என்றார்.

டார்ஜிலிங்கின் சார்ஸ்லே, ஜெஸ்பீர்கான், மிரிக் பஸ்தி, தார் கான், மிரிக் லேக் ஏரியா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தான் கார் பகுதியில் மட்டும் மண்ணில் புதைந்த 4 பேர் மீட்கப்பட்டனர்.

நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்பு: 

இதற்கிடையில், மேற்கு வங்கம், டார்ஜிலிங், கலிம்பாங் ஆகிய பகுதிகளில் நாளை (அக்.6) வரை அதிகனமழைக்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல் இன்னும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

தசரா விடுமுறையை ஒட்டி டார்ஜிலிங்குக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்த நிலையில் நிலச்சரிவால் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உதவிக்காக காவல் கட்டுப்பாட்டு அறை 91478 89078 என்ற தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.

இந்நிலையில், டார்ஜிலிங் நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “டார்ஜிலிங் நிலச்சரிவில் பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்நு குணமாகட்டும்.

கனமழை, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவியையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Heavy rain likely in 4 districts of Tamil Nadu tomorrow – Chennai Meteorological Department announcement

  • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.6) முதல் அக்.11-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

சென்னை, அக். 05

தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே 820 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.6) முதல் அக்.11-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். 8-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

9-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி மதுரை மாவட்டம் எழுமலையில் 13 செமீ, கிருஷ்ணகிரியில் 12 செமீ, நாமக்கல்லில் 11 செமீ, சேலம் மாவட்டம் எடப்பாடியில் 10 செமீ, சங்கரி துர்க்கத்தில் 7 செமீ, தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் 6 செமீ, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, விருதுநகர், கரூர் மாவட்டம் தோகைமலை, மதுரை மாவட்டம் பேரையூர், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

கரூர் சம்பவம் : அரசு பொறுப்பேற்க வேண்டுமா ?  இது அரசியல் அல்ல, அசிங்கம் – சீமான்  சாடல்  

கரூர் சம்பவம் : அரசு பொறுப்பேற்க வேண்டுமா ?  இது அரசியல் அல்ல, அசிங்கம் – சீமான்  சாடல்

Karur incident: Should the government take responsibility? This is not politics, it is shame – Seeman Slams

  • கரூர் துயரம் ஓராண்டுக்கு முன்பு நடந்திருந்தால், இவ்வளவு அக்கறை காண்பித்திருக்க மாட்டார்கள்.

  • விஜய் பேசுவதை அவரின் ரசிகர்கள் கேட்பதே இல்லை, கத்திக்கொண்டே இருக்கிறார்கள். முதற்காட்சி சினிமாவுக்கு போவதுபோல விஜய் கூட்டத்துக்கு வருகிறார்கள், இது தெருக்கூத்து.

தூத்துக்குடி, அக. 03

“கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். ஆனால், விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல அசிங்கம்.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திமுகவுக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திமுக தனது கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளதாக சொல்கிறது. இந்த தேர்தலில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களின் வாக்கை எளிதாக திமுகவால் பெற முடியாது.

ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அதற்கு விசாரணைக் குழுவை பாஜக அனுப்பியுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் மக்களே போராடிய போது ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது?. அப்போது காவல்துறை, மாவட்ட ஆட்சியர் போராடியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே?. வன்முறை ஏற்பட்டாலும் கூட கண்ணீர் புகைக்குண்டு வீசித்தானே கூட்டத்தை கலைத்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் பாஜக விசாரணைக்குழு வந்திருக்க வேண்டியதுதானே?.

கரூர் துயரம் ஓராண்டுக்கு முன்பு நடந்திருந்தால், இவ்வளவு அக்கறை காண்பித்திருக்க மாட்டார்கள். இப்போது சில மாதத்தில் தேர்தல் வருவதால், அரசியல் செய்வதற்காக உண்மை கண்டறியும் குழுவை உடனே அனுப்பியுள்ளார்கள்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விஜய் வருகையால் ஏற்பட்டதுதான். அதற்கு அவர் பொறுப்பேற்கவே இல்லையே?. ‘இந்த சம்பவத்துக்கு காரணமாகிவிட்டேன், மன்னித்துக்கொள்ளுங்கள், இது வலிமிகுந்ததாக உள்ளது, இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அவர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ‘அங்கு நடக்காதது இங்கு ஏன் நடந்தது, அரசுதான் பொறுப்பேற்க வேண்டும், சின்ன இடத்தை கொடுத்தார்கள்’ என விஜய் சொல்கிறார்.

நீங்கள் கேட்ட இடம்தானே இது. அங்குதானே எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு முன்னர் கூட்டம் நடத்தினார். சிறிய இடமாக இருந்தால், அந்த இடம் வேண்டாம் என சொல்லியிருக்க வேண்டியதுதானே. கரூருக்கு அன்று வந்தவுடனே காவல்துறைக்கு நன்றி தெரிவித்து விஜய் பேசினார். சாவு விழுந்தவுடன் அந்த காவல்துறை மீது ஏன் பழிபோடுகிறார். இதனை கேட்கும் போது கடுமையான கோபம் வருகிறது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கல்வியாளர்களை, சாதனையாளர்களை அழைத்து பேச வைக்காத தமிழக அரசு, திரைப்பட நடிகர்களை, இயக்குநர்களை பேச வைக்கிறார்கள். கல்வி விழாவுக்கு கூட நடிகர்களை அரசு அழைத்தால், அப்புறம் நடிகர்கள் ஏன் நாடாள துடிக்க மாட்டார்கள். நடிகர்களுக்கு கூட்டம் கூடுவதற்கு இவர்கள்தான் முக்கிய காரணம்.

விஜய் பேசுவதை அவரின் ரசிகர்கள் கேட்பதே இல்லை, கத்திக்கொண்டே இருக்கிறார்கள். முதற்காட்சி சினிமாவுக்கு போவதுபோல விஜய் கூட்டத்துக்கு வருகிறார்கள், இது தெருக்கூத்து.

விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, கரூர் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சொல்கிறது. இது அரசியல் அல்ல, அசிங்கம்.

நாங்கள் வரும் தேர்தலில் தனித்தே போட்டியிட உள்ளோம், 150 வேட்பாளர்களை அறிவித்துவிட்டேன். இப்போது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் சொல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் எங்கே போனார். அப்போது நாங்கள்தான் களத்தில் நின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

வணிக சிலிண்டரின் விலை உயர்வு ; வீட்டு எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை 

வணிக சிலிண்டரின் விலை உயர்வு ; வீட்டு எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

Commercial cylinder price hike; domestic gas cylinder price unchanged

  •  வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து விற்கப்படுகிறது. அதன்படி ஒரு சிலிண்டர் ரூ.1,754க்கு விற்பனை

  • தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது

சென்னை, அக். 01

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நீண்ட காலமாக நிலையானதாக உள்ளது. இந்த முறையும் சிலிண்டரின் விலை குறைந்தால் நல்லது என்று நுகர்வோர் கருதி வருகிறார்கள்.  மேலும், தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது, பெரும் அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. அதாவது ஒரு சிலிண்டர் ரூ.1,754க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அதாவது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானித்து வருகின்றன.

ஆனால், சிலிண்டர்களின் விலை நீண்ட காலமாகவே மாறாமல் அப்படியே நிலையானதாக உள்ளது.  கேஸ் விலை குறையும் என்று நீண்ட காலமாகவே வாடிக்கையாளர்கள் காத்திருக்கும்போது, இந்த முறையாவது சிலிண்டரின் விலை குறையாதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுமட்டுமல்ல, தீபாவளி பண்டிகையும் வரப் போவதால், மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்து இல்லத்தரசிகளுக்கு மத்திய அரசு சர்ப்ரைஸ் தரும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தபடியே இருந்தன.  இந்நிலையில், இன்று அக்டோபர் 1ம் தேதி கேஸ் சிலிண்டர் விலை வெளியிடப்பட்டுள்ளன. அதில், வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து விற்கப்படுகிறது. அதன்படி ஒரு சிலிண்டர் ரூ.1,754க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 1ம் தேதி 51.50 ரூபாயும், ஆகஸ்ட் 1ம் தேதி 33.50 ரூபாயும், ஜூலை 1ம் தேதி 58.50 ரூபாயும், ஜூன் மாதம் 24 ரூபாயும் விலை குறைந்தது.  எனவே இந்த மாதமும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  மாறாக, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை 6 மாதங்களுக்கு பிறகு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. இந்த மாதம் அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வணிக சிலிண்டரின் விலையில் மாற்றம் இருந்தாலும், வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இது இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை தந்து வருகிறது.. எனினும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வீட்டு சிலிண்டரின் குறைந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்