அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்று சி.டி.ரவி கூறியிருந்தார் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?
சென்னை, பிப். 03
ஈரோடு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த விஷயத்தில் பாஜக சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அவ்வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக மேலிடப்பொறுப்பாளர் சி.டி.ரவி தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் தனித்தனியே சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:-
1972-ல் அதிமுக உருவானபோது எம்.ஜி.ஆர். திமுகவை தீய சக்தி என்று அழைத்தார். அவரது கருத்து 2023-ம் ஆண்டும் மாறவில்லை. தான் உயிருடன் இருந்தவரை ‘அம்மாவும்’ திமுகவை தீயசக்தி என்று அழைத்தார். மக்களிடம் முக ஸ்டாலின் அரசின் பிரபலம் குறைந்துவரும் சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் உள்ளது. திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி திமுக. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, திமுக மந்திரிகள், எம்.பி.க்களால், மூத்த தலைவர்களால் தமிழ் கலாச்சாரம் மீது தொடர் தாக்குதல் நடைபெறுகிறது.
ஆகையால் தான் இந்த தீய சக்தியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, ஒன்றுபட்ட அதிமுக கட்டாயம் தேவை. இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்று கூறிய சி.டி.ரவியின் கருத்தை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமசச்சந்திரன் கடுமையாக சாடி உள்ளார்.
சி,டி.ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாமா? இதேபோல் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? திமுகவை எதிர்த்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவதா? இவ்வாறு சிங்கை ஜி.ராமசச்சந்திரன் கூறி உள்ளார்.