மக்களவைத் தேர்தல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
Lok Sabha election : Tamilnadu, Puducherry polling in single phase on April 19
-
ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழ்நாடுஉட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல்
-
ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி, மார்ச். 17
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:
18-வது மக்களவைத் தேர்தல்
நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும். இதன்படி ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
ஏப்ரல் 19-ம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழ்நாடுஉட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். அன்றைய தினம் தமிழ்நாட்டின் 39, புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படும்.
ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்டதேர்தலில் 89 தொகுதிகள், மே 7-ம்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 94 தொகுதிகள், மே 13-ம் தேதி 4-ம் கட்ட தேர்தலில் 96 தொகுதிகள், மே 20-ம் தேதி 5-ம் கட்ட தேர்தலில் 49 தொகுதிகள், மே 25-ம் தேதி 6-ம் கட்ட தேர்தலில் 57தொகுதிகள், ஜூன் 1-ம் தேதி 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 26-ம் தேதி 14 தொகுதிகளுக்கும், மே 7-ம் தேதி 14 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கேரளா
கேரளாவின் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ம் தேதிஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறஉள்ளது. ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13-ம் தேதிவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
உ.பி., மே.வங்கம், பிஹார்: உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். இதன்படி ஏப்ரல் 19-ம்தேதி 8 தொகுதிகள், 26-ம் தேதி 8 தொகுதிகள், மே 7-ம் தேதி 10 தொகுதிகள், மே 13-ம் தேதி 13 தொகுதிகள், மே 20-ம் தேதி 14 தொகுதிகள், மே 25-ம் தேதி 14 தொகுதிகள், ஜூன் 1-ம்தேதி 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேற்கு வங்கம்
இதேபோல் மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19-ம் தேதி 3 தொகுதிகள், ஏப்ரல்26-ம் தேதி 3 தொகுதிகள், மே 7-ம்தேதி 4 தொகுதிகள், மே 13-ம் தேதி 8 தொகுதிகள், மே 20-ம் தேதி 7 தொகுதிகள், மே 25-ம் தேதி 8 தொகுதிகள், ஜூன் 1 -ம் தேதி 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிஹார்
பிஹாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்திலும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 19-ம்தேதி 4 தொகுதிகள், ஏப்ரல் 26-ம்தேதி 5 தொகுதிகள், மே 7-ம் தேதி 5 தொகுதிகள், மே13-ம் தேதி 5 தொகுதிகள், மே 20-ம் தேதி 5 தொகுதிகள், மே 25-ம் தேதி 8 தொகுதிகள், ஜூன் 1 -ம் தேதி 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள் : சென்னையில் 2025-ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி ஏப்ரல்19-ம் தேதி 5 தொகுதிகள், ஏப்ரல் 26-ம்தேதி 8 தொகுதிகள், மே 7-ம் தேதி 11 தொகுதிகள், மே 13-ம் தேதி 11 தொகுதிகள், மே 20-ம் தேதி 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
குஜராத்
குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம்ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன்படி ஆந்திராவில் 175பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13-லும், ஒடிசாவின் 147 தொகுதிகளுக்கு மே 13, 20, 25 மற்றும்ஜூன் 1 ஆகிய தேதிகளிலும், அருணாச்சல பிரதேசத்தின் 60 தொகுதிகளுக்கும், சிக்கிமின் 32 தொகுதிகளுக்கும் ஏப். 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
விளவங்கோடு இடைத்தேர்தல்: மக்களவைத் தேர்தளோடு *தமிழ்நாடு, கர்நாடகா, பிஹார், குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா, இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தைவிதி உடனடியாக அமலுக்கு வருகிறது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்