பிஹாரில் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியில் இருந்து 22 முக்கியத் தலைவர்கள் விலகி இண்டியா கூட்டணிக்கு ஆதரவு
22 prominent leaders quit Lok Jana Shakti (LJP) in Bihar to support INDIA Alliance
-
பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் இக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு. கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அன்றி வெளியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிராக் மீது புகார்
-
பிஹாரில் ஏப்ரல் 19-இல் துவங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தல் ஜூன்1-இல் முடிந்த பின் அதன் முடிவுகள் ஜூன்4-இல் வெளியாக உள்ளன.
புதுடெல்லி, ஏப். 04
பிஹாரில் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியில் இருந்து 22 முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத இவர்கள், இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக எல்ஜேபி உள்ளது. பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் இக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவை சமஸ்திபூர், ஹாஜிபூர், வைஷாலி, ககரியா மற்றும் ஜமுவாய் ஆகியன. இவற்றில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அன்றி வெளியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சிராக் மீது புகார் எழுந்துள்ளது.
எல்ஜேபியின் தலைவரான சிராக்கின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அக்கட்சியின் முன்னாள் எம்.பி., எம்எல்ஏ., உள்ளிட்ட 22 முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்கட்சியான இண்டியா கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தேர்தலுக்கு அளிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் எம்.பி.யும் எல்ஜேபியில் தேசியப் பொதுச்செயலாளராக இருந்த ரேணு குஷ்வாஹா கூறும்போது, ”கட்சியினருக்கு போட்டியிடும் வாய்ப்பளிக்காமல் வெளியிலிருந்து வந்தவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக தேர்தல் வேலை செய்ய மட்டுமே நாம் வேலையாட்களாக கட்சியில் இல்லை. எனவே, கட்சியிலிருந்து வெளியேறிய நாம் இனி இண்டியா கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : ஸ்டெர்லைட் ஆலை : மாசுவை அகற்றும் பணியை தனியாருக்கு வழங்குவது ஏன் ? – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
எல்ஜேபியின் நிர்வாக செயலாளராக இருந்து வெளியேறிய ஈ.ரவீந்திரா சிங் கூறும்போது, ”தனது மறைந்த தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் பெயரில் பிஹார்வாசிகளிடம் உணர்ச்சிகரமான அரசியல் செய்கிறார் சிராக். இதை வைத்து தம் கட்சிக்கு கிடைத்த போட்டிக்கு பணம் பெற்று வாய்ப்பளித்துள்ளார்.
இதற்கு பிஹார்வாசிகள் சிராக்குக்கு தக்க பதிலடி அளிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
பிஹாரில் ஏப்ரல் 19-இல் துவங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தல் ஜூன்1-இல் முடிந்த பின் அதன் முடிவுகள் ஜூன்4-இல் வெளியாக உள்ளன.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்