Wednesday, December 18, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி நீக்கம்

RAGHUL GANDHI REMOVED FROM MP POST

  • குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

  • நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம்

புதுடெல்லி, மார்ச். 24

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத் தண்டனை

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : ஜி 20 : சென்னையில் நிதி கட்டமைப்பு மாநாடு

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது.

2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா அறிவித்திருந்தார்.

PURNESH MODI
PURNESH MODI

சட்ட விதிகள்

இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அனைத்துத் தரப்பினரும் ஆஜரான நிலையில் தீர்ப்பை வாசித்த மாஜிஸ்திரேட் வர்மா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து மனுதாரர் புர்னேஷ் மோடி தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, “சட்டங்களை இயற்றும் மக்களவையின் எம்.பி.யாக ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு சட்ட விதிகள் அனைத்தும் தெரியும். அவரே விதிகளை மீறியுள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்” என்றார்.

ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடும்போது, “வழக்கில் மன்னிப்பு கோர விரும்பவில்லை. ராகுல் காந்தி ஊழலுக்கு எதிராகவே பேசினார். அவர் தனது கடமையை மட்டுமே செய்தார்” என்றனர்.

30 நாட்கள் ஜாமீன்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.

ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பாபு கூறும்போது, “இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “எனது மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது கடவுள். அகிம்சை அதை அடையும் வழி. இது காந்தியடிகளின் பொன் மொழி” என்று தெரிவித்திருந்தார்.

RAGHUL GANDHI
RAGHUL GANDHI

தகுதி நீக்கம்

 இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ”குற்றவியல் வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 102(1)(e)-ன் கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் எனும் நிலையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம் தீர்ப்பு வெளியான நாளில் (23.03.2023) இருந்தே அமலுக்கு வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி. பதவி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிபோயுள்ளது. சூரத் நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையை ஒரு மாதத்துக்கு மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவரது தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நிரந்தரமாக பறிபோகுமா அல்லது தப்புமா என்பது தெரியவரும்.

இது தொடர்பாக பாஜகவினர் கூறும்போது, “வழக்கறிஞர் லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கில், 2013 ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. இதன்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்களை தீர்ப்பு வெளியான நாளில் இருந்தே பதவி நீக்கம் செய்யலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆசம் கான் உள்ளிட்டோர் தீர்ப்பு வெளியான நாளே பதவி நீக்கம் செய்யப்பட்டனர்” என்றனர்.

மேல்முறையீடு

இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, “ராகுல் வழக்கில், அவர் உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்ய முடியும். ஒருவேளை உச்ச நீதிமன்றமும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், கண்டிப்பாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். அவர் விடுதலையான நாள் முதல் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது” என்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles