Wednesday, December 18, 2024

கலாக்ஷேத்ரா பாலியல் விவகாரம் ; மாணவ மாணவிகள் திடுக்கிடும் கண்ணீர் பேட்டி

லாக்ஷேத்ரா  பாலியல் விவகாரம் ; மாணவ மாணவிகள் திடுக்கிடும் கண்ணீர் பேட்டி

Kalakshetra Sex Affair; The students burst into tears

 

  • மோசமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் தெரிவித்தபோதும் கூட எந்த நடவடிக்கையும் இல்லாததால், பலர் படிப்பைப் பாதியில் நிறுத்திச்சென்றதாகவும்  மாணவர்கள் தெரிவித்தனர்

  • புகார் தெரிவித்தபோது, ‘நல்ல குடும்பத்தில்’ இருந்து வந்தவர்கள் இதுபோன்ற புகார்களைத் தரமாட்டார்கள் என்று கூறி அவமானப்படுத்தினார்கள் என்று மாணவிகளும், பணியாளர் ஒருவரும் தெரிவித்தனர்.

சென்னை, ஏப். 03

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகக் கூறிக் கடந்த வாரம் மாணவர்களின் போராட்டம் நடைபெற்ற நிலையில், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் புகார் செய்ய முன்வந்த பல மாணவிகளிடம், புகாரைப் பெறுவதற்குப் பதிலாக, அவர்கள் படிப்பதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அச்சுறுத்தப்பட்டதாக மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கலாக்ஷேத்ராவில் குரு-சிஷ்யா வழியில் கற்பதால், புகார் அளிக்கவரும் மாணவ,மாணவிகள் ‘நல்ல குடுமபங்களில்’ இருந்து வந்தவர்களாக இருக்கமாட்டார்கள் என்று நிர்வாகத்தினர் அவமானப்படுத்தியதாக மாணவிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவ,மாணவிகளின் பல குற்றச்சாடுகள் குறித்துப் பதில் பெற முயற்சித்தபோது, கலாக்ஷேத்ரா நிர்வாகத்தினர் எந்தப் பதிலும் தரவில்லை

பல காலமாக, மாணவ,மாணவிகள் அடக்கி வைக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதால்தான் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய தேவை ஏற்பட்டது என்று பணியாளர்களும் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் தற்போது கலாக்ஷேத்ரா நிர்வாகத்தில் உயர்பதவியில் உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்டவர்கள் மீதான காழ்ப்புணர்வில் வெளிநபர்கள் சிலர், மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபட வைத்ததாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் சென்னைக் காவல் துறை அதிகாரிகள் ஒரு நடனப் பிரிவு ஆசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கலாக்ஷேத்ராவில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹரிபத்மன் உள்ளிட்ட நான்கு நபர்களைப் பதவியில் இருந்து நீக்கவேண்டும், அங்குள்ள சூழல் அச்சுறுத்தல் இல்லாத சூழலாக மாறவேண்டும், பேச்சு சுதந்திரம் வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசின் மாநிலப் பெண்கள் ஆணையமும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

கலாக்ஷேத்ராவில் போராட்டம் நடக்க காரணம் என்ன? நிர்வாகத்தினர் ஏன் புகார்களை விசாரிக்கவில்லை? என கேட்டறிந்தது. மாணவ,மாணவிகள், பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது

மனம் திறந்த மாணவிகள்

சில  மாணவிகள் தங்களது பெயர்களை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அவர்களுக்கு நேர்ந்த பதறவைத்த நிகழ்வுகளைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டனர்.

இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகளவில், நடனப் படிப்பிற்குப் பெயர்போன நிறுவனமாகக் கருதப்படும் கலாக்ஷேத்ராவில் மாணவ,மாணவிகளுக்குப் பல ஆண்டுகளாக பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லை என்கிறார்கள். மோசமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் தெரிவித்தபோதும் கூட எந்த நடவடிக்கையும் இல்லாததால், பலர் படிப்பைப் பாதியில் நிறுத்திச்சென்றதாகவும்  மாணவர்கள் தெரிவித்தனர்

அத்துமீறல்களை ஏற்கும்படி தூண்டுவர் 

‘இங்கு ஒரு மாணவர் அல்லது மாணவி நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றுச் செல்கிறார் என்றால், வாழ்க்கையில் எந்தவிதமான மோசமான துன்புறுத்தலையும் அவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பார். அவ்வாறு தயார்படுத்தப்படுகிறார். ஒருகட்டத்தில் எல்லாவிதமான அத்துமீறல்களையும் சகித்துகொள்வது என்பதைவிட மனநிலைக்கு தள்ளப்படுவார். நாங்கள் எந்தக் கேள்வியும் கேட்டமுடியாது.

அவசர காரணங்களுக்காக விடுமுறை எடுக்கவேண்டும் என்ற நிலையில் கூட, ஒரு மாணவி முதலில் ஆசிரியர், துறைத் தலைவர் பின்னர் இயக்குநர் என மூன்று நபர்களின் அனுமதிக்காகக் காத்திருந்து, கடிதம் அளித்து பின்னர்தான் பெறமுடியும். அதேபோல, எந்தப் புகாரையும் வெளிப்படையாகப் பேசமுடியாது. மாணவ,மாணவிகளுக்கான ஒரு நியமன உறுப்பினரைத் தலைவராக வைத்திருக்கிறார்கள். ஆனால் மாணவர்களின் பிரச்சனைகளைக் களைவதற்கு பதிலாக, அந்த உறுப்பினரைக் கொண்டு மேலும் எங்களை அச்சத்தில் ஆழ்த்தும் சூழல்தான் இங்குள்ளது,” என வேதனையோடு தெரிவித்தனர்.

சமூகவலைத்தளத்திலும் துன்புறுத்தல்

கலை சார்ந்த படிப்பு என்பதால், மாணவ,மாணவிகள் பலரும் சமூகவலைதளத்தில் தங்களது நடன நிகழ்வுகள், முன்னேற்றங்கள் குறித்துப் பகிர்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆசிரியர் உள்பட நடனப் பிரிவில் இருந்த சில நபர்கள், மாணவ,மாணவிகளின் சமூகவலைதளக் கணக்குகளைப் பின்தொடர்வது, நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது என்கிறார்கள்.தொடர்ந்து பேசிய முன்னாள் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலைப் பொறுக்கமுடியாமல், மறுப்பு தெரிவித்தபோது, அவரது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் ; பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

”என் ஆசிரியரை எப்படி என் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பராக வைத்திருக்கமுடியும். அதனால் நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவர் எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்தார். என்னை ஏன் நண்பராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். பின்னர், நான் நண்பராக ஏற்றுக்கொண்டதும், எனக்குப் பாலியல் ரீதியாக மெசேஜ் அனுப்பத் தொடங்கினார். என் தோழிகளிடம் கூறுவதற்குக் கூட எனக்குக் கூச்சமாக இருக்கும் அளவுக்கு அந்தச் செய்திகள் இருந்தன.

நான் அவரை நட்பு நீக்கம் செய்ததும், என்னை மோசமாக நடத்தினர், என் மதிப்பெண்களைக் கூடக் குறைத்தார். நான் முதல் ஆண்டில் முதல் வகுப்பில்(First class) தேர்ச்சி பெற்றேன். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு என் மதிப்பெண்கள் குறைந்தது. இந்த நான்கு ஆண்டு படிப்பை முடித்துவிட்டு சென்றுவிடவேண்டும் என்று காத்திருக்கிறேன்,”என்கிறார் அந்த மாணவி.

தற்போது ஓர் ஆசிரியர் மீது முன்னாள் மாணவி அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவாகியுள்ளது. அவரைத் தொடர்ந்து நடனப் பிரிவில் மோசமாக நடந்துகொண்ட பிற மூன்று ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நல்ல குடும்பத்தில்’ இருந்து வந்தவர்கள் புகாரளிக்கமாட்டார்கள் 

இங்குள்ள பல மாணவிகள், மாணவர்கள் உட்படப் பலரும் ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்துப் புகார் தெரிவித்தபோது, ‘நல்ல குடும்பத்தில்’ இருந்து வந்தவர்கள் இதுபோன்ற புகார்களைத் தரமாட்டார்கள் என்று கூறி அவமானப்படுத்தினார்கள் என்று மாணவிகளும், பணியாளர் ஒருவரும் தெரிவித்தனர்.

மாணவர்கள் கேள்வி எழுப்பினால், அவர்கள் உடனடியாக டி சி வாங்கிக்கொள்ளுங்கள் என்று பலமுறை சொல்லப்பட்டதால், பலர் புகார் அளிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறிய அந்தப் பணியாளர். ”ஒரு முறை புகார் அளித்த மாணவர்களிடம், நீங்கள் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தால் புகார் கொடுக்க வரமாட்டீர்கள் என்று நிர்வாகத்தில் உயர்பதவியில் இருப்பவர் திட்டினார். அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகள் மனம் நொறுங்கிபோனதை எண்ணிப் பலமுறை எனக்கு மனம் மிகவும் கனத்தது,” என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் தொடங்கும்போது, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் இருந்ததாகக் கூறிய அந்தப் பணியாளர், ”வகுப்பு தொடங்கிய முதல் நாள் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். என்னால் முடிந்தவரையில் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன். சில சம்பவங்களைக் கேள்விப்பட்டபோது, குற்றஉணர்வுக்கு ஆளாகினேன். என்னால் எதுவும் செய்யமுடியவில்லை,” என்கிறார்.

முதல்,இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்குத் பாலியல் துன்புறுத்தல் 

ஆசிரியர்கள், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ,மாணவியரை மட்டும் குறிவைத்துத் துன்புறுத்தலில் ஈடுபட்டனர் என்றும் அந்தப் பணியாளர் தெரிவித்தார்.

”இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும், பேரும் புகழும் பெற்றவர்கள் என்பதால், ஆசிரியர் ஒருவர் தாமாக வந்து ஒரு சில மாணவிகளிடம் அளவுக்கு மீறிப் பேசமுற்பட்டால், அதனை எப்படிக் கையாளுவது என்று இளம் மாணவ,மாணவிகளுக்குத் தெரியாது. பள்ளிப்படிப்பு மட்டும் முடித்துவந்து சேரும் ஒரு மாணவிக்கு, ஒரு ஆசிரியர் பேஸ்புக் நண்பராக இணைய அனுமதி கேட்டால், அதை அவர் ஏற்றுக்கொள்வார். ஏற்றுக்கொள்ளவில்லை எனில், என்ன, நான் உனக்கு நண்பராக இருக்ககூடாதா என்று கேட்டால், அந்த மாணவி என்ன செய்யமுடியும்? இதுபோல, பேஸ்புக், வாட்சாப், இன்ஸ்டாகிராம் எனப் பல தளங்களில் மாணவ,மாணவிகளைப் பின்தொடருவது, தனியாகச் செய்திகள் அனுப்புவது ஆகியவை நடக்கும்,”என்கிறார் ஒரு மாணவி.

மாணவர்களுக்குத் பாலியல்தொல்லை கொடுத்த ஆசிரியர் 

மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்தால் , உடனடியாக வெளியில் தெரியும் என்பதால், நடனப் பிரிவில் உள்ள ஒரு ஆசிரியர், மாணவர்களை மட்டும் குறித்துவைத்துப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் கூறுகின்றனர். மிகுந்த வலியுடன் ஒரு மாணவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் குறித்துப் பேசினார்.

”இரவு 12 மணி சமயத்தில் ஒரு நாள் எனக்கு ஒரு ஆசிரியர் ‘குட் நைட்’ மெசேஜ் அனுப்பினார், நானும் அதற்கு குட் நைட் என்று பதில் அளித்தேன். திடீரென, அவர் நீ தனியாக இருக்கிறாயா, நான் உன் வீட்டுக்கு வரட்டுமா என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து, வீடியோ காலில் வா, உன்னைப் பாரக்கவேண்டும், உன்னை முழுமையாகப் பாரக்கவேண்டும்…எனப் பாலியல் ரீதியாகச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருந்தார். என்னால் இதைக் கையாள முடியவில்லை. எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது,” என்கிறார் அந்த மாணவர்.

மேலும், இந்தச் சம்பவத்தை அடுத்து வகுப்புக்குச் சென்றபோது அந்த ஆசிரியரை நேருக்கு நேராகச் சந்திக்க மிகவும் அசிங்கமாக இருந்ததால், வகுப்பில் ஓரமாக அமர்ந்திருந்ததாகவும், ஆனால் மீண்டும் தன்னை அழைத்து மோசமாக நடத்தியதாகவும் கூறுகிறார் அந்த மாணவர். ”எனக்கு ஆசிரியர் அனுப்பிய செய்திகளை நிர்வாகத்தில் உள்ள கமிட்டியிடம் புகார் செய்தேன், எந்த பதிலும் இல்லை. மாறாகத் துன்புறுத்தல் அதிகமானது. ஒரு கட்டத்தில், எனக்குப் பாடத்தில் கவனம் செலுத்தமுடியவில்லை. கலை என்பது மனம் ஒன்றி நாம் ஈடுபடவேண்டிய படிப்பு. ஆனால் இங்குள்ள பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக எங்களால் மனதை ஒருநிலைப்படுத்தமுடியவில்லை,” என்கிறார் அந்த மாணவர்.

புகார் கொடுத்த மாணவருக்கு மேலும் பாலியல் சீண்டல்கள் அதிகமானதால், பிறர் புகார் கொடுக்கக்கூட முன்வரவில்லை என்கிறார் அவர். ”நடன வகுப்பில், தொட்டுப் பேசுவது, மோசமான எண்ணத்துடன் சீண்டுவது போலப் பல செயல்கள் நடக்கும். அதுவும் எங்களின் நடன அசைவுகளை ஆசிரியர் மோசமான எண்ணத்துடன் பார்க்கிறார் என்ற எண்ணமே, எங்களுக்கு ஒருவிதமான கூச்சத்தை ஏற்படுத்தியது,” என்றும் அவர் கூறினார்.

எனது இடுப்பு அளவை ஆசிரியர் கேலி செய்தார்

நடனத்துறை மாணவ, மாணவிகள் பலருக்கும் அவர்களின் உடல்கட்டமைப்பு குறித்த மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டதாக கூறுகின்றனர்.

கலாக்ஷேத்ரா மாணவி ஒருவர் , ”என்னிடம் இடுப்பு அளவைக் குறைக்கவேண்டும் எனப் பலமுறை ஒரு ஆசிரியர் சொன்னார். அதைக் கேலியாகச் சொன்னதால், எனக்கு மிகவும் மனம் புண்பட்டது. சில சமயம், நான் நடனம் ஆடும்போது, மிகவும் கோபமான தொனியில், திட்டுவார், அதுவும் என் பெற்றோர்களை அவமானப்படுத்தும் விதத்திலான வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவார். ஒரு முறை நான் தனியாக இருந்த சமயத்தில், என்னிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். நான் தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தேன், அதற்கு மிகவும் மோசமான பாலியல் ரீதியான வாசகத்தை என்னிடம் பேசினார், அதை சொல்வதற்குக் கூட எனக்குக் கூச்சமாக உள்ளது,” எனக் கண்ணீருடன் பேசினார்.

அவர் மேலும், கலாக்ஷேத்ராவில் படிப்பது என்பது அவரது பல ஆண்டு கனவு என்றும் மோசமான பாலியல் துன்புறுத்தல்கள் இருந்ததால், படிப்பில் தனது ஆர்வம் குறைந்துபோனது என்றார். ”நடனம் என்ற படிப்பைத் தேர்வு செய்வது என்பது கடினமான தேர்வு, அதில் நிபுணர்கள் நமக்குக் கற்பிக்கபோகிறார்கள் என்ற ஆர்வத்துடன் இங்கு வந்தேன். தற்போது என் திறமை மீது சந்தேகமும், என் உடல் மீது குற்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது,” என்கிறார் அந்த மாணவி.

வதந்தி பரப்புவதாக கலாக்ஷேத்ரா நிர்வாகம் குற்றச்சாட்டு

ஆனால் மாணவர்களின் குற்றசாட்டுகள் குறித்துக் கருத்து கேட்க பலமுறை தொடர்பு கொண்டபோதும், கலாக்ஷேத்ரா நிர்வாகம் எந்தப் பதிலும் தரவில்லை. கலாக்ஷேத்ரா நிர்வாகத்தின் இணையதளத்தில் பாலியல் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள நிர்வாகம், ”கடந்த சில மாதங்களாகக் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில், சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளையும் குற்றச்சாட்டுகளையும் பரப்புவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளது.

மேலும், கலாக்ஷேத்ரா அறக்கட்டளையைப் பாதுகாப்பற்ற சூழல் என்று பொய்யாகக் காட்டி மாணவர்களையும் ஊழியர்களையும் குழப்பித் துன்புறுத்துவதன் மூலம் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையை அவமதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் வாயிலாக இந்தப் புகார்கள் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றியது என்று கூறியுள்ளது.

”உள்குழு சுயமாக விசாரணை செய்து, முழுமையான விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழு ரகசியத்தன்மையுடன் விசாரணைகள் நடத்தப்பட்டதன் அடிப்படையில், இக்குழு, இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாக அறியவில்லை” என்றும் தெரிவித்துள்ளது.

கலாக்ஷேத்ரா மாணவிகளின் கண்ணீர்க் கதை

மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிப்பது எப்படி ?

கலாக்ஷேத்ரா பள்ளியைப் போல பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகள் உள்ள இடங்களில் முதலில் அந்த நிர்வாகத்தில் உள்ள புகார் கமிட்டியிடம் எழுத்துபூர்வ புகார் அளிப்பதுதான் முதல் நிலை என்றும் அந்த கமிட்டியிடம் பதில் கிடைக்கவில்லை எனில் நேரடியாக மாநில,தேசிய பெண்கள் ஆணையத்தில் உள்ள கமிட்டியிடம் புகார் கொடுக்கலாம் என்கிறார் வழக்கறிஞர் காவியா.

”எல்லா கல்லூரிகளிலும் விஷாகா கமிட்டி என்ற கமிட்டி செயல்படவேண்டும் என்பது கட்டாயம் என்பதால், ஒரு மாணவர் தனது கல்லூரியில் உள்ள கமிட்டியிடம் முதலில் புகார் தரவேண்டும். அந்த கமிட்டியில் உள்ளவர்கள் சரியான விசாரணை நடத்துகிறார்கள் என்ற பட்சத்தில் அங்கேயே பாதிக்கப்பட்டநபரின் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். ஒரு சில நேரங்களில் மோசமான பாலியல் வன்கொடுமை நடந்துள்ள பட்சத்தில், அந்த கமிட்டி உள்ளூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து, சட்டப்படி, வழக்கு பதிவு செய்ய பாதிக்கப்பட்ட நபருக்கு உதவவேண்டும். ஆனால் பல இடங்களில் இது முறையாக நடைபெறுவதில்லை,”என்கிறார் வழக்கறிஞர் காவியா.

மேலும், கல்லூரிகளில் விஷாகா கமிட்டி இருப்பதை மாணவர்களிடம் தெரிவிப்பது, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது அவசியம். ஆனால் பல இடங்களில் இதுபோன்ற நடைமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்கிறார் காவியா.

– நன்றி பிபிசி தமிழ்

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles