
பற்களை பிடுங்கிய ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் வழக்கு சிபிசிஐடி.க்கு மாற்றம் : அமுதா ஐஏஎஸ் அறிக்கையால் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி
balveer singh tooth pulled issue; amutha ias report; transferred to cbcid- chief minister mk stalin
-
அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது
-
பணியிடை நீக்கம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது, 17.04.2023 அன்று குற்ற வழக்குப் பதிவு
சென்னை, ஏப். 20
“அம்பாசமுத்திரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா ஐஏஎஸ், அரசுக்கு இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள் : கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்: எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல் அமைச்சர் ஸ்டாலின், “அம்பாசமுத்திரம் நிகழ்வு குறித்து சமூகவலைதளங்களில் புகார்கள் வந்தவுடனே அங்கு பணியாற்றிய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், 26.03.2023 அன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து PSO பிரிவு 151-ன் இந்த புகார் நிர்வாகத்துறை நடுவர் எக்ஸிக்யூட்டிவ் மேஜிஸ்திரேட் மற்றும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதற்கிடையில் உதவி காவல் கண்காணிப்பாளர் 29.03.2023 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இந்த நிகழ்வு தொடர்பாக ஓர் உயர் அதிகாரி தலைமையில் விசாரணைக்குப் பரிந்துரைத்ததன் அடிப்படையில் அமுதா ஐஏஎஸ், உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இடைக்கால அறிக்கை
இதற்கிடையில் பணியிடை நீக்கம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது, 17.04.2023 அன்று குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா ஐஏஎஸ், 4 நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு நடத்திய விசாரணையின் அடிப்படையில், சிசிடிவி கேமராக்களில் எல்லாம் பதிவாகியிருக்கிற அந்த ஆதாரங்களை எல்லாம் அடிப்படையாக வைத்து நேற்றைய தினம் ஓர் இடைக்கால அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.
சிபிசிஐடி விசாரணை
அவரது அறிக்கையின் அடிப்படையில்தான், நேற்றிரவு சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கும் மற்றவர்களுக்கும் விளக்குகிறேன்” என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.