
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி : விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
aaruthra gold financial scam : charge sheet willbe filed soon- chief minister mk stalin
-
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது
-
மோசடியில் ஈடுபட்ட வேறு சில நிதி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை
சென்னை, ஏப். 21
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காவல் துறை, தீயணைப்புத் துறை
சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தளி ராமச்சந்திரன், “ஆணவப் படுகொலைகள் நிகழாமல் தடுக்க நடப்பு சட்டப்பேரவை கூட்டத்திலேயே சட்டம் இயற்ற வேண்டு்ம். ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனம்
அதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசியதாவது: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. பொதுமக்களின் முதலீடுகளுக்கு மாதம் 25 சதவீதம், 30 சதவீதம் வட்டி என கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு, 2020 செப்டம்பர் முதல் ஒரு லட்சம் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.2,438 கோடி முதலீடு மற்றும் வட்டியை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
இதையும் படியுங்கள் : சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச்செப்பேடுகளை கோயிலிலேயே வைக்க வேண்டும்- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை

ரெட் கார்னர் நோட்டீஸ்
அந்த புகார்கள் மீது திமுக ஆட்சி வந்த பின்னர்தான், பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகள் பதிவுசெய்து 22 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இயக்குநர்கள், ஏஜென்ட்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற இயக்குநர் ராஜசேகர், உஷா ஆகியோர் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ரொக்கம் மற்றும் வங்கிக்கணக்கில் இருந்த பணம் ரூ.96 கோடியும், 93 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
நிதி நிறுவனங்கள் கண்காணிப்பு
இதேபோல், மோசடியில் ஈடுபட்ட வேறு சில நிதி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துகள், வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து நிதி நிறுவனங்களையும் கண்காணிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல் அமைச்சர் பேசினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.