பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு இனி 2 முறை
Plus one plus two public exam 2 times in one academic year
-
பொதுத்தேர்வுக்காக பல மாதங்கள் பயிற்சி, மனப்பாடம் ஆகியவற்றை செய்வதை தவிர்த்து, மாணவர்களின் புரிதல் மற்றும் திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு
-
வாரியத் தேர்வுகளை மேம்படுத்துவோர், மதிப்பீடு செய்வோர் அது சார்ந்து பல்கலைக்கழகம் நடத்தும் சான்றிதழ் படிப்பை இந்த பணிகளுக்கு முன்பாக முடித்திருக்க வேண்டும்
சென்னை, ஆக. 24
பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு இனி 2 முறை :மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. இந்த கல்விக்கொள்கை மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேசியக் கல்விக் கொள்கையின்படி, புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பு கலை மற்றும் அறிவியல், பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை கொண்டதாகவும், தொழிற்கல்வி மற்றும் கல்வித் துறைகளுக்கு இடையே பிரிவினைகள் இருக்கக்கூடாது என்ற வகையிலும், உயர்கல்வியில் சேருவதற்கான ஒரு வழிமுறையாக பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை பார்க்கும் நடைமுறையை தகர்த்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள் : விஜய் மக்கள் இயக்கம் | தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
புதிய பாடத்திட்டம்
அதன்படி, புதிய பாடத்திட்டம் தற்போது தயாராக இருப்பதாகவும், இதன் அடிப்படையில் 2024-ம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், மத்திய கல்வி அமைச்சகம் தயாரித்து இருக்கும் புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 2 மொழி பாடங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த 2 மொழி பாடங்களில் ஒரு பாடம் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பிளஸ்-1, பிளஸ்-2 வாரியத் தேர்வு
இதேபோல், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் இந்த பொதுத் தேர்வை (வாரியத் தேர்வு) சந்தித்து வந்த நிலையில், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் மூலம் இனி ஒவ்வொரு கல்வியாண்டிலும் 2 முறை பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2 முறை பொதுத்தேர்வுகள்
பொதுத்தேர்வுக்காக பல மாதங்கள் பயிற்சி, மனப்பாடம் ஆகியவற்றை செய்வதை தவிர்த்து, மாணவர்களின் புரிதல் மற்றும் திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு என எளிதாக மாற்றப்பட்டு உள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டாலும், மாணவர்கள் அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார்களோ, அதனை அவர்கள் வைத்துக்கொள்ளலாம் என்றும், தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு ஏதுவாக போதுமான நேரமும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழகம் நடத்தும் சான்றிதழ்
இதன் மூலம் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்து முடித்த பாடங்களில் இருந்து தேர்வுக்கு தயாராக வரலாம். மேலும் சிறந்த மதிப்பெண்களை தக்க வைக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதால், தற்போதுள்ள இடைவெளியில் பள்ளிக்கூட வாரியங்கள் தேவைப்படும் தேர்வுகளை நடத்துவதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும், வாரியத் தேர்வுகளை மேம்படுத்துவோர், மதிப்பீடு செய்வோர் அது சார்ந்து பல்கலைக்கழகம் நடத்தும் சான்றிதழ் படிப்பை இந்த பணிகளுக்கு முன்பாக முடித்திருக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சகம் கூறி இருக்கிறது.
பொதுத்தேர்வு நடைமுறைகள்
பொதுத்தேர்வு நடைமுறைகள் மாற்றப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2009-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு (சி.சி.இ.) தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. அது 2017-ம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பழைய முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல் கொரோனா தொற்று காலத்தில் கூட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் 2 காலங்களாக பிரிக்கப்பட்டு ஒருமுறை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, மீண்டும் பழைய முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.