Sunday, December 22, 2024

உதயநிதி பேசியதை அரைகுறையாக கேட்டுவிட்டு மோடி பேசுவதா ? | முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் பதிலடி

உதயநிதி பேசியதை அரைகுறையாக கேட்டுவிட்டு மோடி பேசுவதா ? | முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் பதிலடி

Will Modi speak after half listening to Udhayanidhi’s speech? | Chief Minister M.K. Stalin’s response

  • பழமைவாத வர்ணாஸ்ரம- மனுவாத- சனாதன சிந்தனைகளுக்கு எதிராக, இந்திய துணைக்கண்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

  • பா.ஜ.க.வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா? என்ற அரசியல் கணக்கு.

சென்னை, செப்.07

உதயநிதி பேசியதை அரைகுறையாக கேட்டுவிட்டு மோடி பேசுவதா ? | முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் பதிலடி : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் குறித்த சில கருத்துகளைத் தெரிவித்தார்.

பிற்படுத்தப்பட்டோர்– பட்டியலினத்தவர்– பழங்குடியினர்– பெண்ணினத்திற்கு எதிரான ‘சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும்’ என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும்– மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை.

Will Modi speak after half listening to Udhayanidhi's speech? | Chief Minister M.K. Stalin's response
Will Modi speak after half listening to Udhayanidhi’s speech? | Chief Minister M.K. Stalin’s response

பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வையும் பெண்ணடிமைத் தனத்தையும் நியாயப்படுத்தும் பழமைவாத வர்ணாஸ்ரம- மனுவாத- சனாதன சிந்தனைகளுக்கு எதிராக, இந்திய துணைக்கண்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே, நாராயணகுரு, வள்ளலார், வைகுண்டர் என பல பெரியோர்கள் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

அந்த மரபின் நீட்சியாக, சாதியின் பெயராலும் சாஸ்திரங்களின் பெயராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை, பெண்களின் சமத்துவ வேட்கையை மறுத்து- சுரண்டலை நியாயப்படுத்துவதற்கு எதிரான கருத்தியல் ரீதியான வாதங்கள் இந்திய தேசத்தின் பல முனைகளில் இருந்தும் தொடர்ந்து ஒலிப்பதை சமூகவியல் ஆய்வாளர்கள் அறிவார்கள்.

நிலவுக்குச் சந்திராயன் விடும் இந்தக் காலத்திலும் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், வர்ணாசிரமக் கருத்துகளைச் சொல்லி பாகுபாடுகளை வலியுறுத்தியும், இந்தப் பிளவுபடுத்தும் எண்ணங்களுக்கு ஆதரவாக சாஸ்திரங்களையும், சில பழைய நூல்களையும் மேற்கோள் காட்டியும் சிலர் பிரச்சாரம் செய்து வரத்தான் செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள் : அயோத்தி சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி – சீமான்

குழந்தைத் திருமணத்தை ஆதரித்து மாநிலத்தின் ஆளுநரே பேசுகிறார். குழந்தைத் திருமணம் செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால், அதற்கும் தடை போடுகிறார். ‘நானே குழந்தைத் திருமணம் செய்து கொண்டவன்தான்’ என்றும், அந்த எண்ணங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார்.

பெண்களை இழிவுபடுத்தியும், அவர்கள் வேலைக்குப் போகக்கூடாது என்றும், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும், மறுமணத்துக்கு மந்திரமே கிடையாது என்றும் இன்னமும் சிலர் ஆன்மீக மேடைகளில் பேசி வருகிறார்கள். சமூகத்தின் சரிபாதிக்கும் அதிகமான பெண் இனத்தை ‘சனாதனம்’ என்ற சொல்லை வைத்துத்தான் அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்.

இத்தகைய அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார். இத்தகைய கொள்கைகளை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும் என்று சொன்னார். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத பா.ஜ.க. ஆதரவு சக்திகள், ‘சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி’ என்று பொய்யைப் பரப்பினார்கள்.

இத்தகைய பொய்யைப் பரப்புவதற்காக பா.ஜ.க.வினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக வலைத்தள கும்பலானது, இதனை வட மாநிலம் முழுவதும் பரப்பியது. ‘இனப்படுகொலை’ என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்னதாக பரப்பினார்கள்.

பொய்யர்கள்தான் இதனை பரப்புகிறார்கள் என்றால், பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ.க. முதலமைச்சர்கள்- உண்மையில் அமைச்சர் உதயநிதி என்ன பேசினார் என்பதைத் தெரிந்து கருத்து சொல்லி இருக்க வேண்டும். மாறாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் அதே பொய்ச் செய்தியையே பரப்பி உதயநிதியைக் கண்டித்துள்ளார்கள்.

‘நான் அப்படி பேசவில்லை’ என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துவிட்ட பிறகாவது தங்களது பேச்சுகளை ஒன்றிய அமைச்சர்கள் மாற்றி இருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஒருவர், அமைச்சர் உதயநிதியின் படத்தை எரித்து, ‘தலைக்கு 10 கோடி’ என்று விலை வைத்திருப்பதும்- அதனை பா.ஜ.க. ஆதரவு சக்திகள் பரப்புவதும்தான் இவர்களது பாணியா? அமைச்சரின் தலைக்கு விலை வைத்து ஒருவர் அறிவிக்கிறார் என்றால், அவர் மீது உத்தர பிரதேச மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததா? வழக்கு போட்டதா? மாறாக, உதயநிதி மேல் வழக்கு போட்டுள்ளார்கள்.

சனாதனப் போர்வை

இந்த நிலையில், ‘சனாதனத்தைப் பற்றி தவறாகப் பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பேசியதாக தேசிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு செய்தி வந்தால், அது உண்மையா- பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா? ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மையை அறியாமல் நாடாளுமன்றத்திலேயே பேசியிருந்தார் பிரதமர்.

இதையெல்லாம் பார்த்தால், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பிரதமர், இப்போது, மக்களைத் திசைதிருப்பி சனாதனப் போர்வையைப் போர்த்திக்கொண்டு குளிர்காய நினைப்பதாகவே தெரிகிறது.

மணிப்பூர் பற்றியோ- சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும்- ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை.

ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால், இவர்கள்தான் பிற்படுத்தபட்ட– பட்டியலின – பழங்குடியின மக்களைக் காப் பாற்றப் போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப் போகிறார்களா? அதனால்தான் நேற்று அம்பேத்கரின் பேரன் பிராகாஷ் அம்பேத்கர் கூட, “தீண்டாமையை ஆதரிக்கும் சனாதனத்தை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பிரதமர் பதில் என்ன?

அரசியல் கணக்கு

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணியானது பிரதமரை நிலைதடுமாற வைத்துவிட்டது. ‘ஒரே நாடு- ஒரே தேர்தல்’ என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பா.ஜ.க. தானே தவிர, ‘இந்தியா’ கூட்டணி அல்ல.

பா.ஜ.க.வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா? என்ற அரசியல் கணக்கு. இதைப் புரிந்துகொள்ள பெரிய அரசியல் வித்தகம் எதுவும் தேவையில்லை.

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்களே, “சமூக அமைப்பில் சக மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டோம். நாம் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் அது 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்புத் தீர்வுகள் இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’

எனவே, இதற்கு மேலும் உதயநிதி பேசியது தொடர்பாக பா.ஜ.க.வினருக்கு விளக்கம் வேண்டும் என்றால், மோகன் பாகவத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். அரசியலுக்காக மத உணர்வைக் கிளறி ஆதாயம் தேடும் அற்ப அரசியலை, பழுத்த அனுபவமும் நாட்டின் மீது மாறாப் பற்றும் கொண்ட தலைவர்கள் புறந்தள்ளி, பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காக்கும்

கடமையை மேலும் வேகப்படுத்துவார்கள். திமுக-வை பொறுத்தவரையில் அதனுடைய கொள்கை கோட்பாடுகள் என்பவை வெளிப்படையானவை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றும், ”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றும் இயங்கும் இயக்கம்.

பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட- பட்டியலின – பழங்குடி மக்களுக்கும்; சிறுபான்மைச் சமூகத்துக்கும்; பெண்ணினத்துக்கும்; ஏழை – எளிய மக்களுக்கும் ‘எல்லாம்’ கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களது உயர்வுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம்.

அதனால்தான் ஆறாவது முறையாக ஆட்சியைக் கொடுத்து அலங்கரித்துள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள். அதனால்தான், அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம்.

புதைகுழியில், பா.ஜ.க.தான் மூழ்கும்!

இந்தியாவிலேயே முதலில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுத்து, சனாதனம் மறுத்ததை சாத்தியம் ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். எந்தத் தனிமனிதர் உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களை சுயமரியாதை உள்ள மனிதர்களாக ஆக்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இனம், மொழி, சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒருதாய் மக்களாக வாழும் அமைதிமிகு வாழ்க்கையை உறுதிசெய்து வரும் இயக்கம்.

கொள்கையை அறிவுப்பிரச்சாரம் செய்தவர்களே தவிர, எந்தக் காலத்திலும் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம். அத்தகைய பழம்பெரும் பேரியக்கத்தின் மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அரசியல் செய்ய நினைத்தால் அந்தப் புதைகுழியில், பா.ஜ.க.தான் மூழ்கும்! இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles