மக்களவைத் தேர்தல்: விருதுநகர் தொகுதியில் மறைந்த விஜயகாந்தின் மகன் வி.விஜயபிரபாகரன் போட்டி
Lok Sabha Elections: Late Vijayakanth’s son V. Vijayaprabhakaran is contesting in Virudhunagar constituency
-
தங்களது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிரம் காட்டுவோம் என்றும், விருதுநகர் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
இந்த முறை டிஜிட்டல் பிரச்சாரம் மேற் கொள்ள முன்னாள் எம்எல்ஏ செந்தில்குமார் தலைமையில் தொழில்நுட்ப குழுவை ஏற்படுத்தி உள்ளோம். இதன்மூலம் டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மதுரை, மார்ச். 23
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ல் நடக்கிறது. திமுக, அதிமுக, பாஜக அணிகள் சார்பில், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிகவில் விருதுநகர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகன் வி.விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார்.
அவரை வெற்றி பெற செய்யும் நோக்கில் பிரச்சார வியூகங்களை அக்கட்சியினர் வகுத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் மாநில அளவில் தலா 2 நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் வழிகாட்டுதல்படி, தங்களது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிரம் காட்டுவோம் என்றும், விருதுநகர் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஒவ்வொரு தொகுதியிலும் மாநில நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்து பூத்கள் ஒப்படைக்கப்பட்டு தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
விருதுநகர் தொகுதியில் கே.கே.கிருஷ்ணன் உட்பட 2 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை டிஜிட்டல் பிரச்சாரம் மேற் கொள்ள முன்னாள் எம்எல்ஏ செந்தில்குமார் தலைமையில் தொழில்நுட்ப குழுவை ஏற்படுத்தி உள்ளோம். இதன்மூலம் டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞர்களை ஒருங்கிணைத்து 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் விருதுநகர் தொகுதியில் முழு வீச்சில் செயல்படுவர். தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒவ்வொரு பகுதியிலும் மெகா திரையில் விஜய பிரபாகரன் மக்களுடன் கலந்துரையாடல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மறைந்த விஜயகாந்தே மகனுக்காக வாக்கு சேகரிப்பது போன்று மெய்நிகர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
இத்தொகுதியில் பிரேமலதாவும் கூடுதலாக நேரம் ஒதுக்கி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 2011 தேர்தலை போன்று இத்தேர்தலிலும் முழு அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். பணத்தை எதிர்பார்க்காமல் செயல்படுவோம். மதுரையிலும் முழு மூச்சாக பணியாற்றுவோம் என்று கூறினர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்