
-
அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதி சாலையில் விழுந்த இளம் பெண்
-
பின்னால் வந்த மாநகர பேருந்து மோதி உடல் நசுங்கினார் ப்ரியங்கா
சென்னை, பிப். 11
சென்னையில் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும் போது திடீரென விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
சென்னையில் மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் உரசியதன் காரணமாக பின்னால் அமர்ந்து சென்ற பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறி இறங்கியதில் அந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவில் வசித்து வந்தவர் பிரியங்கா. இவருக்கு வயது 22. பிரியங்கா சென்னை கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் பைக்கில் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர்களது இருசக்கர வாகனம் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும் போது, முன் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர் திசையில் அடையாளம் தெரியாத மற்றோரு இருசக்கர வாகனம் வேகமாக வந்து உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வாகனம் நிலைதடுமாறியது.
இதில் பின்னால் அமர்ந்து சென்ற பிரியங்கா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது திடீரென வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பிரியங்கா படுகாயம் அடைந்து துடிதுடித்தார்.
இதையும் படியுங்கள் : ஈரோடு இடைத்தேர்தல் : 816 புதிய வாக்காளர்கள்; இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
அதேநேரம் அதிர்ஷ்டவசமாக பிரியங்காவின் அண்ணன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர்.
அதேநேரம் படுகாயமடைந்த பிரியங்காவை காப்பாற்ற ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரியங்காவை போலீசார் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்தை ஏற்படுத்த பதிவு எண் இல்லாமல் வந்த இருசக்கர வாகனம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த மோசமான விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர். சென்னையில் அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவரின் அவசரமான மற்றும் அலட்சியமான வேகம் மற்றொருவரின் உயிரையே பறித்துள்ளது. சாலையில் செல்வோர் கவனமாகவும் பொறுமையாக செல்வது அவர்களுக்கு மட்டுமல்ல அந்த சாலையில் செல்வோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.