குமரி மாவட்டத்தில் நேற்று 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை
Heavy rainfall for two hours in kanyakumari
-
பேச்சிப்பாறை, சிற்றாறு-1, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
-
அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குமரி, நவ. 01
குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
தக்கலை, மாம்பழத்துறையாறு, ஆணை கிடங்கு பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. தக்கலையில் அதிகபட்சமாக 85.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மயிலாடி, கன்னிமார், பூதப்பாண்டி, இரணியல், ஆணைக்கிடங்கு, குழித்துறை, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
பேச்சிப்பாறை, சிற்றாறு-1, மாம்பழத்துறையாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.71 அடியாக உள்ளது. அணைக்கு 404 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 506 கன அடி தண்ணீரும், உபரிநீராக 492 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.16 அடியாக உள்ளது. அணைக்கு 422 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.04 அடியாக உள்ளது. அணைக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து அணையிலிருந்து 62 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 7, பெருச்சாணி 23.6, சிற்றார் 1-9.6, சிற்றார் 2-3.8, மயிலாடி 5.2, பூதப்பாண்டி 8.2, முக்கடல் 39.2, பாலமோர் 14.4, தக்கலை 85.4, குளச்சல் 8, இரணியல் 24, அடையாமடை 61.6, குருந்தன்கோடு 6, கோழிப்போர்விளை 10.8, மாம்பழத்துறையாறு 83, ஆனைக்கிடங்கு 82.2, களியல் 5.8, குழித்துறை 8, சுருளோடு 7.2, புத்தன் அணை 22.2, திற்பரப்பு 47.2, முள்ளங்கினாவிளை 8.6.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.