Sunday, January 5, 2025

‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Tamil Nadu Chief Minister M.K. Stalin announces that the birthday of ‘Tamil Thatha’ U.V. Swaminatha Iyer will now be celebrated as Tamil Literature Renaissance Day

  • புகழ்பெற்ற மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 17-ஆவது வயதில் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார்.

  • தமிழ் இலக்கியத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. இதைத் தவிர மகாமகோபாத்தியாய, தக்ஷிண கலாநிதி ஆகிய பட்டங்களும் பெற்றார்.

சென்னை, டிச.10

‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (டிச.10) பேசுகையில், “உறுப்பினர் கே.பி.முனுசாமி இங்கே ஒரு கோரிக்கையை வைத்து, அந்தத் துறையினுடைய அமைச்சர் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாளை ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அவர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டிருக்கிறார். அவருடைய கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டங்களில் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள், ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி’ நாளாகக் கொண்டாடப்படும் என்பதை நான் உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். முதல்வரின் அறிவிப்புக்கு அவையில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், “இன்று நம்முடைய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

உ.வே.சாமிநாத ஐயர் பற்றிய அரிய தகவல்கள்: கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (1855). தந்தை ஒரு இசைக் கலைஞர். அதே ஊரில் தொடக்கக் கல்வியும், இசையும் கற்றார்.

இவருக்கு தமிழில் இருந்த பேரார்வத்தைக் கண்டு, எங்கெல்லாம் தமிழ்ப் பாடம் கற்றுத் தருபவர்கள் இருந்தார் களோ அங்கெல்லாம் சென்று குடியேறி மகனுக்கு கல்வி கற்பிக்கச் செய்தார், தந்தை! புகழ்பெற்ற மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 17-ஆவது வயதில் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார்.

1880 முதல் 1903 வரை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1903 முதல் 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணி புரிந்தார்.

பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பல இடர்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் விடாப்பிடியாக முயன்று 1887-ல் சிந்தாமணியை வெளியிட்டார்.

அன்று முதல் இறுதி மூச்சு வரையில், ஆங்காங்கே மறைந்து கிடந்த தமிழ்த் தாயின் ஒவ்வொரு அணிகலனாகத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, புதுப்பித்து தமிழன்னையை அலங்கரித்தார். இவரது காலத்துக்கு முன்பு பெரும் புலவர்களின் படைப்புகள், சங்க நூல்கள், அகநானூறு, புறநானூறு, மணிமேகலை ஆகியவை வெறும் பெயரளவிலேயே இருந்தன.

அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டு, பதிப்பித்தார். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன் மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளார். 3000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து பிரதிகளையும் அரும்பாடுபட்டு சேகரித்தார்.

சமண இலக்கியங்களோடு சங்க இலக்கியங்கள், காப்பி யங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் அடங்கிய ஏராளமான ஓலைச் சுவடிகளையும் தேடித் தேடி , அவற்றை பகுத்து, வேறுபடுத்தி, தொகுத்து, பிழைதிருத்தி அச்சிலேற்றினார். இதன் மூலம் இவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

பின்னாளில் அவற்றுக்கு உரையும் எழுதினார். சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும், பழையதும் புதியதும், நல்லுரைக் கோவை உள்ளிட்ட பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். கருத்தாழமும், நகைச்சுவையும் கலந்து இழையோடப் பேசும் திறன் கொண்டவர்.

தமிழ் இலக்கியத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. இதைத் தவிர மகாமகோபாத்தியாய, தக்ஷிண கலாநிதி ஆகிய பட்டங்களும் பெற்றார்.

இவரைச் சிறப்பித்து இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. சென்னை பெசன்ட் நகரில் இவரது பெயரில் நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தாத்தா என்று போற்றப்படும் இவர், 1940-ஆம் ஆண்டு 84-ஆம் வயதில் மறைந்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles