முன்னாள் ராணுவ வீரர்கள், பொது ஓட்டுநர்களுக்கு இலவச ஓட்டுநர் வேலை வாய்ப்பு மேளா – தமிழ் நாடு அரசு நடத்தியது
Free Driver Job Mela for Ex-Servicemen and General Drivers – Tamil Nadu Govt Organized
சென்னை, டிச. 15
சென்னை கிண்டியில் உள்ள டான்சியா தொழிற்பயிற்சி அரங்கில் நேற்று (14-12-2024) காலை 11.00 முதல் 4.00 மணி வரை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், டான்சியா, ஐ.டி.கே. ஆட்டோமேட்டிவ் சொலுஷன்ஸ் மற்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கம் (AOBOOA) இணைந்து, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொது ஓட்டுநர்களுக்கு இலவச ஓட்டுநர் வேலை வாய்ப்பு சிறப்பு மேளா நடைபெற்றது.
மேளாவில் தமிழ் நாடு அபெக்ஸ் ஆட்டோ ஸ்கில்ஸ் அதிகாரி சிசில் பிரேமி, டான்சியா தலைவர் சி.கே.மோகன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக அதிகாரி டாக்டர் சார்லஸ், ஐ.டி.கே. ஆட்டோமோடிவ் சொலுஷன்ஸ் இயக்குநர் டாக்டர் ஜோசப், டி.எப்.எஸ்.சி. செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க தலைவர் எஸ். இளங்கோவன், நிறுவன தலைவர் பாண்டியன், சேர்மேன் டி. இளங்கோவன், கவுரவத்தலைவர் பொன் பாஸ்கர், செயலாளர் மகேந்திரன், தென் மண்டல செயலாளர் நைனார் ராவுத்தர், பொருளாளர் மன்சூர் ஷா, துணை தலைவர் மணிகண்டன், மூத்த உறுப்பினர் மெய்யப்பன், ஆதர்ஷனா டூர்ஸ் & டிராவல்ஸ் ஞானம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க பெத்தபெருமாள் உள்பட ஏராளமான ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
குத்து விளக்கு ஏற்றி துவங்கப்பட்ட விழாவில் ஏ.ஓ.பி.ஓ.ஓ.ஏ. தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் ஓட்டுநர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து சவுகரியங்களையும் செய்து கொடுக்கிறோம். இருப்பினும் ஓட்டுனநர் பற்றாக்குறை நீடிக்கிறது என்றார்.
செயலாளர் மகேந்திரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேசிய டான்சியா தலைவர் மோகன், இன்று வேலை தேடுவோரும், வேலை வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. ஆனால் வேலை தேடுவோரிடம் அதற்கான திறன் குறைவாக இருக்கிறது.
இதற்காகத்தான் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் இது போல் திறன் மேம்பாட்டு பயிற்சியினை வழங்கி வருகிறது. டான்சியா, ஐடிகே ஆட்டோமோடிவ் சொலுஷன்ஸ் நடத்தும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொது ஓட்டுனர்கள் பயிற்சியில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கம் முன்வந்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது என்று கூறினார்.
தமிழ் நாடு அபெக்ஸ் ஆட்டோ ஸ்கில்ஸ் அதிகாரி சிசில் பிரேமி பேசும்போது, சாலை போக்குவத்து பாதுகாப்பாக அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதனை முன்வைத்து நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்பு மேளாவால் பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், பொது மக்களும் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க கவுரவ தலைவர் பொன் பாஸ்கர், மிக குறுகிய காலத்தில் இந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ஓட்டுநர் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி இருக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
பாக்கியலட்சுமி டிராவல்ஸ் உரிமையாளரும், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க சேர்மனுமான டி. இளங்கோவன் பேசும்போது, இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படும் அனைத்து ஓட்டுநர்களுக்கு வேலையும், ராணுவத்துக்கு நிகரான சலுகைகளும் கிடைக்கும் என உறுதி அளித்தார்.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க நிறுவன தலைவர் ஜெயம் பாண்டியன் பேசும்போது, ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு ஒழுக்கம் மிக அவசியம். அது முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருக்கும் என நம்புகிறோம் என்றார்.
நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஐ.டி.கே. ஆட்டோமோடிவ் சொலுஷன்ஸ் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஜோசப் பேசும்போது, தமிழ்நாடு டான்சியா மூலம் 1000 பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் தருவதாக தெரிவித்திருப்பதாக கூறினார்.
மேலும் டான்சியாவுடன் இணைந்து ஓட்டுநர்களுக்கு எங்கள் ஐ.டி.சி. ஆட்டோமோடிவ் சொலுஷன்ஸ் பயிற்சி அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து டி.எப்.எஸ்.சி. தலைமை செயலர் செந்தில் உள்பட பலர் பேசினர்.
தமிழ் நாடு அரசு சார்பில் நடத்தபட்ட இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த LMV, MMV, HMV லைசென்ஸ் பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், மற்றும் பொது ஓட்டுனர்களும் பங்கேற்றனர்.
பயிற்சியை முடிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், பொது ஓட்டுநர்களுக்கும் சான்றிதழுடன், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க நிர்வாகிகளின் ஆம்னி பேருந்துகளில் ஓட்டுநராக பணியாற்ற பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசும், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கமும் இணைந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும்வகையில், சிறப்பு வேலை வாய்ப்பு மேளா நடத்துவது நாட்டிலேயே முதல் முறையாகும்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்