
வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் ; விசாரணைக்கு இன்று நேரில் ஆஜர்
Vellore DMK MP Kathir Anand’s property documents worth Rs. 13.70 crore seized; to appear in person for questioning today
-
கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் உள்ள நிர்வாக அலுவலகம் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் கட்டிடத்தில் 3 நாட்கள் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை
-
கதிர் ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் இருந்து ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
வேலூர், ஜன. 22
வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரி மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. மேலும், அவர் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராவார் என்றும் தெரிகிறது.
திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு, வேலூர் அருகேயுள்ள காட்பாடி காந்தி நகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கதிர் ஆனந்தின் அறக்கட்டளை சார்பில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் நடத்தப்பட்டு வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
இதில், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் உள்ள நிர்வாக அலுவலகம் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் கட்டிடத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.
சோதனையின் முடிவில் அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கம்யூட்டரில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவணங்கங்கள், சொத்து தொடர்பான பத்திரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சில ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து அமலாக்கத் துறை சார்பில் அதிகாரப்பூவமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும், கதிர் ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் இருந்து ரூ.13.70 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.