
‘100 நாள் வேலைத்திட்ட நிலுவைத்தொகை ரூ.1,056 கோடியை விடுவிக்கவேண்டும்’- நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு வலியுறுத்தல்
‘100-day plan arrears of Rs. 1,056 crore should be released’ – Tamil Nadu government urges Nirmala Sitharaman
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 1,056 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது -பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
- 2024-2025ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போன்று ஒப்புதல் அளிக்க வேண்டும-பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜன. 27
‘100 நாள் வேலைத்திட்ட நிலுவைத்தொகை ரூ.1,056 கோடியை விடுவிக்கவேண்டும்’- நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு வலியுறுத்தல்: ‘100 நாள் வேலைத்திட்ட நிலுவைத்தொகை ரூ.1,056 கோடியை விடுவிக்கவேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற இந்தியாவுக்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும். இது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடங்கப்பட்ட நாள் முதல் தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழகம் எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பல்வேறு அளவுகோல்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டில் 06.01.2025 வரை 20 கோடி மனித உழைப்பு நாட்களாக இருந்த நிலையில், தமிழகம் ஏற்கனவே 23.36 கோடி மனித உழைப்பு நாட்களை எட்டியுள்ளது.
இதையும் படியுங்கள் : 2025-26 மத்திய பட்ஜெட் தயாரிப்பு : நிர்மலா சீதாராமன் அல்வா கொடுப்பது ஏன்? எதற்கு? சுவாரஸ்யமான தகவல் !
தமிழகத்துக்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாட்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கெனவே 23.11.2024 அன்று ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
தற்போது தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்து விட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 1,056 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை தாம் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் 2024-2025ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போன்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மனு அளித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.