
மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து வரும் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
Protest on the 8th to condemn the central government’s amendment to the Waqf Board Act – Liberation Tigers of Tamil Nadu leader Thirumavalavan
-
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று சொல்ல கூடிய அளவுக்கு வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது பாஜக அரசு
-
வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பிஹாரில் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்
திருச்சி, ஏப். 05
“வக்பு வாரிய சட்டம் நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கண்டித்து வரும் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், காட்டத்தூரில் உள்ள பள்ளி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று சொல்ல கூடிய அளவுக்கு வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.
இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. ஆளும் பாஜக அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இதனை அரங்கேற்றி உள்ளது. வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களிலும் தலையிடாத மத்திய அரசு, வக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது. வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதற்கு பாஜக வெளிப்படைத் தன்மை எனக் கூறுகின்றனர். பவுத்த மதத்தில்,புத்த விகாரில் பவுத்தர் அல்லாதவர்களை நியமித்து இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இதனை எதிர்த்து புத்த பிட்சுகள் போராடி வருகின்றனர். மத்திய அரசின் மத விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து, வரும் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர உள்ளோம். மக்களவையில் 232 பேர் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம். மாநிலங்களவையில் 95 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளோம்.
தமிழகத்தில் அதிமுகவும் எதிர்த்து வாக்களித்தது ஆறுதல் அளித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பாஜக இதனை சாதித்திருக்கிறார்கள் . அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. பிரதமர் மோடியின் இலங்கை பயணம் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மோடி இதுகுறித்து பேசுவார் என எதிர்பார்க்கிறோம்.
நீட் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. இந்த சூழலில் 9-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை தமிழக முதல்வர் கூட்டி உள்ளார். அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல் அனைத்து கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும். திமுக அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது.
அவ்வாறு முயற்சி எடுக்காமல் இருந்தால், வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார்கள் என்று கூறலாம். விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் மத்திய ஆட்சியாளர்கள் தான். தமிழக ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் பள்ளிக் கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. மரத்தடி வகுப்புகள் இன்றும் நடக்குமானால் அதற்கு உடனடியாக உரிய தீர்வு காணப்பட வேண்டும். பள்ளி வகுப்பறை எண்ணிக்கைகளை பெருக்க வேண்டும்.
வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பிஹாரில் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர். ஆதாய அரசியல் செய்யும் கூட்டணி கட்சிகளுக்கு இது பெரிய சவுக்கடி. பாஜக கூட்டணிக்கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக செயல்படக் கூடாது. மக்களின் விருப்பத்தை கொண்டே செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். பேட்டியின்போது, திருச்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றல் அரசு, குரு அன்புச்செல்வன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்