
-
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியான பஷிர் அகமது பிர் எனும் இம்தியாஸ் ஆலம் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
-
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனுக்கு மிகவும் நம்பிக்கையான தளபதியாக இருந்தவர்
இஸ்லாமாபாத், பிப். 21
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியான பஷிர் அகமது பிர் எனும் இம்தியாஸ் ஆலம் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்தவர் இம்தியாஸ் ஆலம். ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கச் செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீருக்குள் பிற பயங்கரவாத அமைப்புகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும் ஒங்கிணைப்புப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்துள்ளார். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனுக்கு மிகவும் நம்பிக்கையான தளபதியாக இருந்து வந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டம் -அமைச்சர் துரைமுருகன் அழைப்பு
கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு இவரை சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவித்தது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதிக்கு பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதில் இவர் முக்கிய பங்கு வகித்து வந்ததை அறிந்த மத்திய அரசு, இவர், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் செயல் தளபதியாக இருந்து வந்ததையும் வெளிப்படுத்தியது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தின் ராவல்பின்டி பகுதியில் கடை ஒன்றின் வெளியே நின்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இம்தியாஸ் ஆலத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த இம்தியாஸ் ஆலம், பாகிஸ்தானின் ராவல்பின்டியில் வசித்து வந்தார். இந்தியாவுக்கு எதிராக ஆன்லைனில் பிரச்சாரம் செய்வது, பயங்கரவாதிகளாக செயல்பட்டு பிறகு விலகியவர்களை மீண்டும் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளில் சேர்ப்பது, அவர்களை குப்வாராவுக்கு ஊடுருவச் செய்வது, அங்கு அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கச் செய்வது ஆகிய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.