-
சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் சீமான் பேசி இருப்பதாக புகார் வந்தது. எனவே இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு நோட்டீஸ் .
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு, பிப் .22
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த வாரம் முதல் கட்ட பிரசாரம்செய்தார். கடந்த 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 18-ந் தேதி இரவு நாம் தமிழர் கட்சியினர் ராஜாஜிபுரம் பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்களை வாக்கு கேட்டு வரக்கூடாது என்று பொதுமக்கள் தடுத்தனர்.
இதில் நாம் தமிழ் கட்சி நிர்வாகி அன்பு தென்னரசு என்பவரது மண்டை உடைந்தது. இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மறுநாள் (19-ந்தேதி) சீமானை கைது செய்யக்கோரி திருநகர் காலனியில் சாலை மறியல் செய்தனர்.
தொடர்ந்து சீமானுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சீமான் மீது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் புகார் செய்தனர்.
இந்நிலையில் சீமான் பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தேர்தல் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி தேர்தல் அதிகாரி ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் சீமான் பேசி இருப்பதாக புகார் வந்தது. எனவே இது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
அவர் பதில் அனுப்பவில்லை என்றாலோ அல்லது பதில் திருப்தியாக இல்லை என்றாலோ அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள் : குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்க எதிர்பார்ப்பு
சுயேட்சையோடு சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 20ம் தேதி அனுமதியின்றி ஆலமரத் தெருவில் பிரச்சாரம் மேற்கொண்டதாக புகாரை அடுத்து மேனகா உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி பேரணி நடத்தியதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல், அனுமதி பெறாமல் பேரணி செல்லுதல், கட்சியின் சின்னத்தை கையில் ஏந்தி பேரணி என மூன்று பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.