திருப்பூர் மாமன்ற நிதி நிலை கூட்டத்தில் அதிமுக ரகளை -வெளிநடப்பு
Aiadmk leaders walk out in tirupur cabinet finance status meeting
-
மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை
-
அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.
திருப்பூர், ஏப்.10
திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் 2023-2024 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது.
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி பேசினார். அவர் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. குறிப்பாக அம்மா உணவகத்தால் ஏராளமான ஏழை பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் அதற்கான போதிய நிதி ஒதுக்கவில்லை.
அதேபோல் குப்பை வரியை குறைக்க வேண்டும் என பல கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறோம். குப்பை வரிவிதிப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கான வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த குறைபாடுகளை களைய வேண்டும் என்று பேசினார். அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் செல்வராஜ், கடந்த ஆட்சியின்போது தான் வரி உயர்த்தப்பட்டது என்று தெரிவித்தார்.
இதனால் கூட்டத்தில் அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் மேயர் முன்பாக நின்று குப்பை வரி பிரச்சனையை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர். அப்போது மேயர், கவுன்சிலர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து பேசும்படி கூறினார்.
அப்போது விவாதத்தின் போது நீங்கள் பதில் கூறுங்கள். உறுப்பினர்கள் பதில் கூறக்கூடாது என்றனர். இதனால் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய மேயர் தினேஷ் குமார், அவையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் இருக்கையை விட்டு எழுந்து வந்து பேசக்கூடாது.
அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே வெளிநடப்பு செய்கிறார்கள் என்றார். தொடர்ந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மீண்டும் உள்ளே வந்தனர். அப்போது அ.தி.மு.க.வை குறை கூறுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகுதி இல்லை என்றனர். இதனால் மீண்டும் இரு தரப்பு கவுன்சிலர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.