
மேற்கு வங்கத்தில் பந்த் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு ; பந்த்தை முழு வீச்சில் அமல்படுத்த முயற்சி செய்யும் பாஜக
Bandh in West Bengal: Normal life is affected; BJP trying to implement the bandh in full swing
-
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குகின்றன. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தல்
-
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. மாநிலத் தலைநகரில் கடைகளை மூட வலியுறுத்திய பாஜக தொண்டர்கள் பலரையும் போலீஸார் கைது செய்தனர்.
கொல்கத்தா, ஆக.28
பாஜக அழைப்பு விடுத்துள்ள 12 மணி நேர பந்த் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பகுதியாக முடங்கியுள்ளது. நாடியாவில் திரிணமூல் – பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆங்காங்கே ரயில் மறியல், சாலை மறியல், கடைகளை மூட வற்புறுத்தல் என பாஜகவினர் பந்த்தை முழு வீச்சில் அமல்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
பந்த் காரணமாக தலைநகர் கொல்கத்தாவில் வழக்கமான வார நாட்களை ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே பேருந்துகள், வாடகை வாகனங்கள் ஓடுகின்றன. இருப்பினும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. மாநிலத் தலைநகரில் கடைகளை மூட வலியுறுத்திய பாஜக தொண்டர்கள் பலரையும் போலீஸார் கைது செய்தனர்.
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குகின்றன. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தியுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக உள்ளது.
பங்காவோன் – சீல்டா இடையே ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள்ன. முர்ஷிதாபாத், பாரக்போரிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் மாநில அரசின் வடக்கு பெங்கால் நில போக்குவரத்துக்கு கழகப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்குவதைக் காண முடிந்தது.
நந்திகிராமில் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பங்குரா பேருந்து நிலையத்திலும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
பபானிபூரில் பாஜக எம்எல்ஏ அக்னிமித்ர பால், பந்த்துக்கு மக்கள் ஆதரவு தரும் வகையில் வாகனங்களை வெளியே எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மாநில அரசை சாடிய அவர், அரசாங்கம் முதுகெலும்பு இல்லாமல் போய்விட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை போலீஸ் மதிக்கவில்லை. போராட்டக்காரர்கள் மீது ரசாயனம் சேர்த்த தண்ணீரை பயன்படுத்தினர். மாநிலத்தின் பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. ஆனால் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களை விரட்டியடிக்கின்றனர்” என்று காட்டமாகக் கூறியிருந்தார்.
முன்னதாக பாஜக பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பணியை புறக்கணிக் கூடாது என்று எச்சரித்திருந்தார். பணிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கூறியிருந்தது.

முன்னதாக, பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (செவ்வாய்க் கிழமை) ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக மாறின. இதில் 100 மாணவர்களும், 15 போலீஸாரும் காயமடைந்தனர்.
இரு தரப்பு மோதல் காரணமாக, கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக காணப்பட்டன. போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக 220 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து 28-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்துக்கு மேற்கு வங்கம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் சுகாந்த் மஜும்தார் நேற்று அறிவித்தார். அதன்படி இன்று (ஆக.28) காலை 6 மணிக்கு பந்த் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஹூக்லியில் ரயில் மறியலில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதேபோல் பதற்றம் நிறைந்த ஹவுரா பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மட் அணிந்து வாகனங்களை ஓட்டி வருகின்றனர். தற்காப்புக்காக ஹெல்மட் அணிந்து பேருந்து ஓட்டுவதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். கூச் பெஹாரில் 2 பாஜக எம் எல் ஏ.,க்கள் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பந்த் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர் தலைவர் சயான் லஹிரி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்