-
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் தெலுங்கானாவில் பரபரப்பு
-
தாக்குதலில் சி-4 பெட்டியில் 34 மற்றும் 35 சீட் அருகே இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. இதே போல் சி-8 பெட்டியில் 40,41,42 ஆகிய இருக்கை ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தது
திருப்பதி, பிப். 11
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். இந்த ரெயில் குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லக்கூடியது. அதிவேகமாக செல்லும் இந்த ரெயிலில் பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் நேற்று செகந்திராபாத்திலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி வந்தே பாரத் ரெயில் சென்று கொண்டிருந்தது. குன்றத்திமடுகு என்ற இடத்தில் செல்லும்போது மாலை 5-40 மணி அளவில் சூர்யா தியேட்டர் அருகே மூடப்பட்ட ரெயில்வே கேட் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.
இந்த தாக்குதலில் சி-4 பெட்டியில் 34 மற்றும் 35 சீட் அருகே இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. இதே போல் சி-8 பெட்டியில் 40,41,42 ஆகிய இருக்கை ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியது.
இதில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. இருப்பினும் ரெயில் நிற்காமல் கம்மம் நோக்கி சென்றது. இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் காசி பேட்டை ரெயில் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் காசி பேட்டை உதவி பாதுகாப்பு ஆணையர் சீனிவாஸ் தலைமையில் வாரங்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.