
-
மண்டாலா மலைப்பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
-
அருணாச்சல பிரதேசத்தில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்
புதுடெல்லி, மார்ச். 17
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து புறப்பட்டது.
ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி ஆகியோர் அந்த ஹெலிகாப்டரில் அசாமின் மிஸ்ஸாமாரி பகுதிக்கு செல்ல இருந்தனர். அவர்களே விமானிகளாக ஹெலிகாப்டரை இயக்கி சென்றனர். காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 9.15 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
மேற்கு பூம்டிலா மாவட்டம் மன்டலா பகுதியில் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதையடுத்து கடைசியாக தகவல் வந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதற்கிடையே அந்த பகுதி கிராமத்தினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் விழுந்து கிடந்த இடம் கண்டறியப்பட்டபோது, ஹெலிகாப்டர் எரிந்து புகைந்து கொண்டிருந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ அதிகாரிகளும் கருகி இறந்தனர்.
இதையும் படியுங்கள்: பிரெட்டி புயல் : மலாவி கடும் பாதிப்பு, 326 பேர் பலி-உதவி கோரிய அதிபர்
அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் பெயர்கள் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் என்று தெரியவந்தது. இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மண்டாலா மலைப்பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. மேஜர் ஜெயந்தின் உடல், சொந்த ஊரான தேனி ஜெயமங்கலம் பகுதிக்கு இன்று கொண்டு வரப்படுகிறது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.