-
கொல்லம் பகுதியில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் கேரள உணவு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை
-
பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால் உடலில் கல்லீரல் பாதிப்பு அல்லது புற்றுநோய் ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை
கொல்லம், பிப். 09
பள்ளி மற்றும் கோவில் விழாக்களில் அதிகம் விற்பனையாகும் மிட்டாய் வகைகளில் முக்கியமானது பஞ்சு மிட்டாய். தற்போது வீதிகளில் அன்றாடம் கிடைகிறது இந்த மிட்டாய். கேரளாவில் பஞ்சு மிட்டாய் அமோகமாக விற்பனை ஆகி வருகிறது.
இதனை வாங்கி உண்ட குழந்தைகள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக கேரள மாநில உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றது.
அதன் அடிப்படையில் கொல்லம் பகுதியில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் கேரள உணவு கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பஞ்சு மிட்டாயில் நிறம் சேர்க்க ஆபத்தை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. இந்த வகை ரசாயனம் ஜவுளி ஆலைகளில் பயன்படுத்தும் ரோட்டமைன் வகை ரசாயனம் ஆகும்.
இதையும் படியுங்கள் : மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 15 தேதி வரை ரத்து
இதனை சாப்பிட்டால் உடலில் கல்லீரல் பாதிப்பு அல்லது புற்றுநோய் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கொல்லத்தில் செயல்பட்டு வந்த பஞ்சு மிட்டாய் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் அங்கு தயாரிக்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்துக்கு அனுப்பினர். இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:-
கேரளாவில் உணவு பொருட்களில் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொல்லத்தில் உள்ள பஞ்சு மிட்டாய் நிறுவனத்தில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் தயாரித்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அங்கு பறிமுதல் செய்யப்பட்ட மிட்டாய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்ததும் இதில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.