
குடும்பத்தலைவி ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Chief Minister M.K.Stalin launched Rs.1,000 magalir urimai thogai scheme
திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆவண சரிபார்ப்பில் தகுதியான பயனாளியாக இருந்தால், அவர்களும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
சென்னை, செப். 15
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் கடைசி பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்’ என்று அறிவிக்கப்பட்டது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை
அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைத்த நிலையில், பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தாலும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அந்த பட்டியலில் இடம் பெறாமலேயே இருந்து வந்தது.
தமிழக சட்டசபையில் தாக்கல்
இந்த நிலையில், தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி (இன்று) தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக பெண்கள் விண்ணப்பிக்கும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விரிவான வழிகாட்டு நெறிமுறை
இதற்காக தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தப் பணியில், 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது.
இந்த திட்டத்தில் சேர ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். இதில், தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக, தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதையும் படியுங்கள் : முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
ரூ.1,000 உரிமைத்தொகை
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார்.
நேற்று முதலே வரவு
இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள். தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
இது அந்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும், நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆவண சரிபார்ப்பில் தகுதியான பயனாளியாக இருந்தால், அவர்களும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.