
அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
chief minister mk stalin announces DA hike for govt employees,teachers
-
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில அரசும் 4 சதவீத உயர்வு
-
இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடிகள் செலவினம்
சென்னை, மே. 17
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயரும்.
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில அரசும் 4 சதவீத உயர்வினை இன்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயரும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
இந்த முடிவால் தமிழக அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு கடந்த மார்ச் மாதம் 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.
இன்றைய தினம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றம்
இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த அரசு விட்டுச்சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையை கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றிற்கு இடையேயும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
அகவிலைப்படி உயர்வு
அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து இந்த உத்தரவினை 1.4.2023 முதல் செயல்படுத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.4.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
2,366.82 கோடிகள் செலவினம்
இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடிகள் செலவினம் ஏற்படும். எனினும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலம் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
தமிழ்நாடு அரசு
மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை கனிவுடன் பரிசளித்து எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும் என்று கூறப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.