சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், மொத்தம் 42 பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.98.59 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதல் அமைச்சர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு
சென்னை, பிப். 11
சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், மொத்தம் 42 பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.98.59 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதல் அமைச்சர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கூடியசீக்கிரம், புதுப்பொலிவுடன் சென்னை தயாராகும் என்று நம்பப்படுகிறது.
உலகிலுள்ள பழம்பெரும் மாநகராட்சிகளில் ஒன்றுதான் சென்னை மாநகராட்சி.. கடந்த 20 ஆண்டுகளில், மேயர் என்றாலே டக்கென நம் கண்முன் வந்து நிற்பது ஸ்டாலின் பெயர்தான்
இதற்கு காரணம், ” மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்” என்ற பெருமையை பெற்றவர் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தான்
ஸ்டாலின் அன்று மேயராக இருந்த போது சென்னைக்கு செய்த சீர்திருத்தங்கள் ஏராளம்.. மேயராக அவர் பொறுப்பேற்றதுமே, சென்னையை “சிங்காரச் சென்னை”யாக மாற்றுவேன் என்று சொன்னார். அவர் சொன்னபடியே செய்தும்காட்டினார்.
ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஸ்டாலினின் சிங்காரச் சென்னை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அன்று மேயர் ஸ்டாலின் மட்டும் இல்லையென்றால், இன்று சென்னையில் இத்தனை பாலங்கள், மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல், சாலைப் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், கடற்கரை சீரமைப்பு இப்படி பல்வேறு பணிகள் நடந்திருக்காது என்பதை மறுக்க முடியாது. சென்னையும் பூத்து குலுங்கி இருக்காது.
ஸ்டாலினுக்கு அடுத்து, அன்று மேயராக இருந்த இன்றைய அமைச்சர் மா.சுப்பிரணியத்துக்கும் நாம் நன்றிகளை சொல்ல வேண்டி உள்ளது.. அன்று மா.சு. ஏற்படுத்திய பார்க்குகள், பாலங்கள் சென்னையை மேலும் பொலிவாக்கியது.
ஆனால், அதோடு சரி.. 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு மொத்த திட்டமும் அப்படியே அமுங்கிவிட்டது.. மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்ததுடன், மெட்ரோ ரயில் திட்டத்தையும் சேர்த்து அமலாக்கியது.. மறுபடியும் சென்னையை யாருமே கவனிக்கவில்லை என்றும் கடந்த 10 வருட ஆட்சியில், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளே மேலோங்கி எழுந்த நிலையில், சென்னையை கண்டுகொள்ளவே இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், மறுபடியும் “சிங்காரச் சென்னை திட்டம் 2.0” என்ற பெயரில் கையில் எடுத்தது.. சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் “புராஜக்ட் ப்ளூ” என்ற முக்கிய திட்டமும் செயல்படுத்தப்படவிருப்பதாகவும், அதன்படி, சென்னையிலுள்ள பீச்கள் மேம்படுத்தப்படவுள்ளன, பூங்காக்களை சீரமைப்பதும், புதிதாக பார்க்குகளை கட்டுவதும், அதிகமான மேம்பாலங்களை கொண்டு வருவது, ரயில் நிலையங்களை மேம்படுத்துவது இப்படி பல திட்டங்கள் கையில் உள்ளன, இது எல்லாவற்றையும்விட ஹைலைட், கூவத்தை சுத்தப்படுத்த போகிறார்கள் என்றெல்லாம் ஒரு வருடத்துக்கு முன்பே செய்திகள் இறக்கை கட்டி பறந்தன.
இதையும் படியுங்கள் : அமெரிக்கா மீது மீண்டும் பறந்த மர்ம பொருள் ; சுட்டு வீழ்த்திய ராணுவம்
இந்நிலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், “தமிழக முதல் அமைச்சர் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானபூமிகள், 16 பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் புராதன சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்..
சிங்கார சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு திட்ட அனுமதி மற்றும் கண்காணித்தலுக்காக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையாளர், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிங்கார சென்னைக்கான வேலைகள் விரைவில் ஆரம்பிமாகி, முதல் அமைச்சர் ஸ்டாலினின் நீண்ட நாள் கனவு திட்டம் விரைவில் கைகூட போவதாக தெரிகிறது.. அத்துடன், புதுப்பொலியுடன் சென்னை மிளிர போவதும் உறுதியாகி வருகிறது.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.