கரையை கடந்தது டானா புயல் : மதுரை மாவட்டத்தில் கனமழை – நாளை தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு
Cyclone Dana has crossed the shore: Heavy rain in Madurai district – Chance of continuous rain in Tamil Nadu tomorrow
சென்னை, அக்.25
தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.26) தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேற்று (அக்.24) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர புயல் (டானா) வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.25) அதிகாலை 1.30 -3.30 மணிக்கு இடையே வடக்கு ஒடிசா கடற்கரையில், பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒடிசா) பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது.
தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (அக்.25) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று (அக்.25) பகல் 2.45 மணி முதல் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்.26ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்.27ம் தேதி முதல் அக்.31ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று (அக்.25) மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 115 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குவங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில், இன்று (அக்.25) மாலை வரை சூறாவளிக்காற்று வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில், மணிக்கு 80 முதல் 90 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 100 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும்.
இன்று (அக்.25) மாலை வரை தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும். மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், இன்று (அக்.25) மாலை வரை சூறாவளிக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், இன்று (அக்.25) மாலை வரை சூறாவளிக்காற்று, மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும்.
அரபிக்கடல் பகுதிகளில், இன்று (அக்.25) மற்றும் நாளை (அக்.26), கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று, மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.