
சென்னையில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி – மாநகராட்சி அறிவிப்பு
Digital smart parking facility in Chennai – Corporation announcement
-
பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும்.
-
பொதுமக்கள் எளிய வழியில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், தற்போது கூடுதலாக QR Code வசதி ஏற்படுத்தித் தருதல். சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம் திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி
சென்னை, மார்ச். 19
சென்னையில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி – மாநகராட்சி அறிவிப்பு : சென்னை மாநகராட்சியில் டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். ஸ்மார்ட் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக ரூ.681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.4464 கோடிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் உருவாக்கப்பட்ட நிலையில், 2025-2026 நிதி ஆண்டிற்கு ரூ.5145.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வளர்ந்து வரும் மாநகரமாக உயர்ந்துள்ளது. மிகை அளவிலான வணிக நிறுவனங்கள், கடைகள் பெருகி வருவதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பேருந்து வழித்தடங்கள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், பாதசாரிகளுக்கு நடந்து செல்வதில் சிரமமும், பாதுகாப்பின்மையும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சாலையோரங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் வாகன நிறுத்துமிடத்தை (Smart Parking) கண்டறிவதற்கு செயலி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதனை பொது மற்றும் தனியார் பங்குதாரர்கள் (Public Private Partnership) முறையில் செயல்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்தை அறிந்து கொள்ளவும், முன்பதிவு செய்து உபயோகப்படுத்தவும் இயலும்.இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும். இதனால், வாகன நெரிசல்கள் குறைவதுடன் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி (மண்டலம் 2 வார்டு 21), IOCL (மண்டலம் 4 வார்டு 38), டோல்கேட் (மண்டலம் 4 வார்டு 39 மற்றும் சாலிகிராமம் (மண்டலம் 10 வார்டு 128) ஆகிய நான்கு இடங்களில் அமைந்துள்ள பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேம்பாலங்கள் மற்றும் இரயில்வே மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியினை அழகுபடுத்திட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூபாய் 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.அதேபோல, சென்னை மாநகராட்சிக்கு, பொதுமக்கள் எளிய வழியில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், தற்போது கூடுதலாக QR Code வசதி ஏற்படுத்தித் தருதல். சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம் திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி ஏற்படுத்தப்படும்.
இதனால், எவ்வித சிரமும் இன்றி உடனடியாக வரிகளை செலுத்த இயலும். வாட்ஸ் அப் சேவை பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை செய்யும் அலுவலர்கள் செயல்திறன் மிக்க வகையில் செயல்படவும், பொது மக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும், எளிதாக அணுகக்கூடிய வகையிலும் வழங்குவதில் மாநகராட்சி பல முக்கியமான சவால்களை எதிர்கொள்கின்றது. தற்போது இணையதளங்கள் மற்றும் பயன்பாட்டில் மொபைல் உள்ள செயலிகளை பயன்படுத்துவோர் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். உலகளவில் மிகப் பெரிய பயனர் அடிப்படையைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டு தளத்தைப் பயன்படுத்தி, இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி, ஒரு நவீன மற்றும் திறன்வாய்ந்த சேவைகளை செயல்படுத்தி அதற்கான தீர்வை வழங்க முடியும். இதற்கு 4.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற சுகாதார மற்றும் நல மையங்கள், 16 சமுதாய நல மையங்கள், 1 தொற்று நோய் மருத்துவமனை, 2 பகுப்பாய்வு மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் புளியந்தோப்பில் உள்ள 1 காச நோய் மருத்துவமனை ஆக மொத்தம் 303 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் தாய் சேய் நல சேவைகள், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை வசதிகள், தடுப்பூசி சேவைகள், அவசரகால சேவைகள் மற்றும் ஆய்வக சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது மூட்டு வலி, எலும்பு, தசை சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் மனநலம் சார்ந்த நோய்களுக்கான சிகிச்சை பெற வரும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆகவே, முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதியோர் நலப் பிரிவுகள் தொடங்குவது அவசியமாகிறது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்