
திமுக தற்கொலை முயற்சியில் நிச்சயம் ஈடுபடாது – விசிக தலைவர் திருமாவளவன்
DMK will definitely not engage in suicide attempts – Vck leader Thirumavalavan
-
இந்தியா கூட்டணி தான் ஏறுமுகத்தில் இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இப்போது சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் தயவில் தான் ஆட்சி நடந்து வருகிறது.
-
புகழின் உச்சியில் இருக்கும் விஜய் நல்ல எண்ணத்தில் மக்கள் பணிக்காக வருகிறார் என நம்புகிறேன். அவரை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.. அவரை வாழ்த்துகிறேன்.
சென்னை, ஆக. 22
விசிக சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக பாஜக உறவு குறித்த கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு அவர் முக்கிய பதிலை அளித்தார். மேலும், விஜய் அரசியல் குறித்த கேள்விக்கும் திருமாவளவன் அப்போது விரிவான பதிலை அளித்திருந்தார்.
சென்னை ராயப்பேட்டையில் விசிக சார்பில் கொடி ஏற்றும் நிகழ்வு நடந்து. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றினார். மேலும், அங்குத் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக திமுக- பாஜக உறவு குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்துப் பேசினார். மேலும், தீவிர அரசியலில் இறங்கியுள்ள விஜய் கட்சி குறித்தும் அவர் பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் நாணய வெளியீட்டு விழாவில் பாஜக கலந்து கொண்டது குறித்த கேள்வி, “இது கட்சி கூட்டணி அரசியலைத் தாண்டிய ஒரு நட்புறவு.. எல்லாவற்றையும் கூட்டணி கணக்குகளுடன் அணுக வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி இதுபோல நட்புறவு இருப்பது நல்லதுதான். கூட்டணிக் கட்சிகளுடன் மட்டுமே நல்லுறவு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
இதையும் படியுங்கள் : காவிரி பிரச்சினை : விரைவில் இரு மாநிலங்களுக்குள் ஒருமித்த கருத்து- முன்னாள் பிரதமர் தேவகவுடா பேச்சு
மேலும், பாஜக இப்போது இறங்கு முகத்தில் இருக்கிறது. இந்தியா கூட்டணி தான் ஏறுமுகத்தில் இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இப்போது சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் தயவில் தான் ஆட்சி நடந்து வருகிறது. அதேநேரம் இந்தியா கூட்டணி இன்று வலுவான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளது. இந்தச் சூழலில் திமுக தற்கொலை முயற்சியில் நிச்சயம் ஈடுபடாது” என்றார்.
நாணய வெளியிட்டு விழா
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியிட்டு விழா நடந்தது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எனப் பலரும் கலந்து கொண்டனர். திமுக பாஜக இடையே கள்ள உறவு இருப்பதையே இது காட்டுவதாக அதிமுக கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் அரசியல்
அதேபோல விஜய் அரசியல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “புகழின் உச்சியில் இருக்கும் விஜய் நல்ல எண்ணத்தில் மக்கள் பணிக்காக வருகிறார் என நம்புகிறேன்.
அவரை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.. அவரை வாழ்த்துகிறேன். மக்கள் தொண்டு செய்வதற்காக தன்னுடைய கலைத்துறை பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார்.
அவரால் பல ஆண்டுகள் திரைத்துறையில் மிளிர முடியும். சினிமாவில் அவருக்கான செல்வாக்கு இருக்கிறது. சினிமாவில் செல்வாக்கு இழந்த பிறகு அவர் அரசியலுக்கு வரவில்லை. நல்ல புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அதை விட்டு விட்டு அரசியலுக்கு வருகிறார் என்பது ஒரு நல்லெண்ணத்தோடு சமூக பொறுப்புணர்வுடன் பொது வாழ்க்கைக்கு வருகிறார் என்பதையே காட்டுகிறது. எனவே, அவரது நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்” என்றார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்