
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு ; மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது உச்ச நீதிமன்றம்
Doctor Subbiah murder case; The Supreme Court takes up the case again
-
டாக்டர் சுப்பையா மரண வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தீர்ப்பு அளித்தது
-
‘அப்ரூவராக’ மாறிய அய்யப்பன், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலமும், மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலமும் முரண்பாடு
புதுடெல்லி, நவ .14
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது பட்ட பகலில் மிகப் படு பயங்கரமாக நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். அங்கு சுப்பையாவுக்கு ஏராளமான சொத்துகள் இருக்கின்றன. இந்த சொத்து தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி குடும்பத்தினருக்கும், டாக்டர் சுப்பையாவுக்கும் பெரும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் டாக்டர் சுப்பையாவை கடந்த 2013-ம் ஆண்டு மர்ம நபர்கள் சிலர் பட்டபகலில் நடுரோட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஆசிரியர் பொன்னுசாமி உள்பட 10 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அதில் அய்யப்பன் என்பவர் ‘அப்ரூவராக’ மாறியதால் வழக்கு விரைவில் முடிந்தது.

டாக்டர் சுப்பையா மரண வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தீர்ப்பு அளித்தது. இதன்படி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வக்கீல் பாசில், என்ஜினீயர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, வழக்கு ஆவணங்களை செசன்சு நீதிமன்றம் அனுப்பி வைத்திருந்தது.
இதனிடையே தண்டனை பெற்றவர்கள் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்கள்.
இந்தநிலையில், இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறுகையில், இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சிகளிடம் போலீசார் உடனே விசாரணை நடத்தவில்லை. காலதாமதமாக விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றிருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற குற்ற வழக்குகளில் கண்ணால் கண்ட சாட்சிதான் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
எனவே அவர்களிடம் தான் முதலில் போலீசார் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இந்த வழக்கில் விசாரிக்கப்படவில்லை. எனவே, இவர்களது சாட்சியத்தை ஏற்க முடியாது. அதேபோல, இந்த வழக்கில் ‘அப்ரூவராக’ மாறிய அய்யப்பன், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலமும், மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலமும் முரண்பாடாக உள்ளது. இவற்றை எல்லாம் கீழ்கோர்ட்டு சரியாக பரிசீலிக்காமல் தண்டனை வழங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்: ‘மாணவர்கள் இனி இளங்கலை பட்டப்படிப்பை முன் கூட்டியே படித்துமுடிக்கலாம்’- யுஜிசி அடுத்த ஆண்டு அமல்
எனவே இந்த வழக்கில் குற்றச்சாட்டை போலீசார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்று முடிவு செய்கிறோம். இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்கிறோம். பொன்னுசாமி உள்பட 9 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையையும், ஆயுள் தண்டனையையும் ரத்து செய்கிறோம். இவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லையென்றால், 9 பேரையும் உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்” இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பின் காரணமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பொன்னுச்சாமி உள்பட 7 பேரும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும் தப்பித்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய 9 பேரும் விடுவிக்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. அப்போது பட்ட பகலில் மிகப் படு பயங்கரமாக நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை உயர்நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் இது போன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பட்டப்பகலில் ஒரு மருத்துவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அனைத்து விசாரணைகளையும் நடத்திய கீழமை நீதிமன்றம், தகுந்த ஆதாரங்களில் தான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அனைவருமே விடுதலை செய்தது என்பதை எப்படி நாங்கள் பார்ப்பது என்றே தெரியவில்லை. இது கொடூரமான கொலை வழக்கு என்பதை நாங்கள் தெள்ளத்தெளிவாக பார்க்கின்றோம். ஆனால், குற்றவாளிகளை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்ததை புரிந்து கொள்ள முடியவில்லை’ என்று கூறி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.