-
உச்ச நீதி மன்ற உத்தரவையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
-
தீர்ப்பு வந்ததுமே அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர்… அங்கு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
மதுரை,பிப். 23
உச்ச நீதி மன்ற தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், எடப்பாடி தரப்பு அதனை திருவிழாவாக கொண்டாடி வருகிறது.
ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருக்கும் நிலையில், அந்த பொதுக்குழுவின் போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கமும் உறுதியாகி இருக்கிறது.
உச்ச நீதி மன்ற உத்தரவையடுத்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள், வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தீர்ப்பு வந்ததுமே அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். அங்கு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர். எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்திற்கு பால் அபிஷேகம் செய்து வருகிறார்கள்.
குடம் குடமாக பாலை கொண்டுவந்து எடப்பாடியின் கட்அவுட்களில் ஊற்றி மகிழ்ந்து வருகிறார்கள்.. பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி வருகிறார்கள். மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகள் அருகே போட்டோக்களை எடுத்து கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். தீர்ப்பு எப்படியும் எடப்பாடிக்கு சாதகமாக வரும் என்ற அதீத நம்பிக்கையினால், அதிமுக அலுவலகத்தில் முன்கூட்டியே பால்குடங்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தது போலும். தீர்ப்பு வந்த அடுத்த செகண்டே, உற்சாகம் பாலாக கரைபுரண்டோடியது.
இன்றைய தினம் தீர்ப்பு வெளியான அதேசமயம், எடப்பாடி பழனிசாமி மதுரையில் திருமண வைபவத்தில் பங்கேற்றிருந்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மகள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சென்றிருக்கிறார்.
இதையும் படியுங்கள் : எடப்பாடி பழனிசாமியே அதிமுக பொது செயலாளர் – உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
மேலும், 51 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் நடைபெறும் திருமணத்தையும் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்ப்பு வந்ததுமே, கல்யாண மேடையிலேயே தீர்ப்பு மைக்கில் அறிவிக்கப்பட்டது.
“அண்ணன் எடப்பாடிக்கே வெற்றி வெற்றி” என்று மைக்கில் சொன்னதுமே, மண்டபத்தில் இருந்தோர் ஒட்டுமொத்த பேரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. குஷியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை சொல்லி கொண்டனர். சில தொண்டர்கள் மண்டபத்திலேயே டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டனர். வாத்தியங்களும், மேளதாளங்களும் முழங்கின.
தீர்ப்பை அறிந்ததுமே, எடப்பாடி பழனிசாமியின் முகமெல்லாம் ஒரே சிரிப்பும் மகிழ்ச்சியுமாக காணப்பட்டது. வெற்றிகளிப்பு அவரது முகத்தில் தென்பட்டது.. நிர்வாகிகள் ஒவ்வொருவராக வந்து எடப்பாடிக்கு சால்வை அணிவித்து, வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்று மதியம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார். இதையடுத்து, அதிமுக தன்வசம் வந்ததையடுத்து, புதிய அறிவிப்புகளை எடப்பாடி விரைவில் அறிவிக்ககூடும் என்கிறார்கள்.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.