
ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள்; அச்சுறுத்தும் அரசு
Farmers protesting democratically; A threatening government
-
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் விதியை அரசாங்கம் ரத்து செய்யும் என்றும், அது விவசாயம் கார்ப்பரேட்மயமாவதை ஊக்குவிக்கும் என்றும் விவசாயிகள் அஞ்சினார்கள்.
-
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் விவசாயிகளுக்கு பயிர்ச் செலவை விட ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருகிறது.
டெல்லி,
ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர்.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் டெல்லி எல்லைக்குள் வர முடியாதபடி காவல்துறையினர் பல்வேறு வகையான தடுப்புகளை வைத்திருக்கின்றனர்.
ஹரியாணா – பஞ்சாப் எல்லையில் பேரணியாக வந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.
அரசுடனான பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும்,தங்களது கோரிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை ‘டெல்லி நோக்கி அணிவகுப்போம்’ என்ற முழக்கத்தில் உறுதியாக உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் நரேந்திர மோதி அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்த உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்தது.
இந்தச் சட்டங்களின்படி, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் விதியை அரசாங்கம் ரத்து செய்யும் என்றும், அது விவசாயம் கார்ப்பரேட்மயமாவதை ஊக்குவிக்கும் என்றும் விவசாயிகள் அஞ்சினார்கள். அப்படி நடந்தால், அவர்கள் பெருநிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்று கூறினர்.
இந்த விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை திரும்பப்பெற்றனர்.
அப்போது அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதாக அரசு உறுதியளித்தது. அவர்களது கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றுவதாகவும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.
தற்போது அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பிப்ரவரி 13-ஆம் தேதி ‘தில்லி சலோ’ என்ற முழக்கத்துடன் கூடிய போராட்டம் அதன் ஒரு பகுதியாகும்.
சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பேசுகையில், “எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ‘தில்லி சலோ’ கோஷத்தை நாங்கள் கொடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெற அரசு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறோம்,” என்றார்.
மேலும் பேசிய தலேவால், “அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசு உறுதியளித்தது. இதனுடன், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கூறியது. லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும், என்று கூறியிருந்தது,” என்றார்.
2021-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்புர்-கேரி என்ற இடத்தில் அரசாங்கத்தின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய நான்கு சீக்கிய விவசாயிகள், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் எஸ்.யூ.வி. வாகனத்தால் மோதப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு சட்டங்களிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் கூறியதாக டலேவால் கூறினார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு பயிர் விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
சுவாமிநாதன் கமிஷன்
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் விவசாயிகளுக்கு பயிர்ச் செலவை விட ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருகிறது.
முந்தைய போராட்டம் திடீரென முடிவுக்கு வரவில்லை என்று விவசாயிகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் அப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகள் இப்போது அழுத்தம் கொடுக முடிவெடுத்திருக்கின்றனர்.
விவசாயிகள் உரிமை
விவசாயிகள் உரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான மந்தீப் பூனியா அதுபற்றிக் கூறுகையில், “நான்கு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை உருவாக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகின்றனர்,” என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை ஃபார்முலா மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் விலை, அவர்களின் செலவுகளைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, அதாவது ஒன்றரை மடங்கு செலவில் குறைந்தபட்ச ஆதரவு விலை கோருகின்றனர். தற்போது உள்ளீட்டுச் செலவின் அடிப்படையில் மட்டுமே அரசு இதை முடிவு செய்கிறது. இதில் ஊதியம் கூட சேர்த்து கொள்ளப்படுவதில்லை, என்றார்.
தலேவால் கூறுகையில், “அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நாங்கள் நினைவூட்டுகிறோம். தேர்தல் வந்துவிட்டது, புதிய அரசு வந்தால் நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று சொல்ல வாய்ப்புண்டு. எனவே இதுவே சரியான தருணம் என்று அரசு கொடுத்த வாக்குறுதிகளை நினைவூட்ட நினைக்கிறோம்,” என்றார்.
எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்த அரசு, அவரது பெயரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்தாதது முரணானது என்றார் தேலேவால். “விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க வேண்டாம் என்று அவர் பரிந்துரைத்திருந்தார், ஆனால் அரசாங்கம் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது,” என்றார்.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். வீடுவீடாகச் சென்று பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. டிராக்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
பிப்ரவரி 12-ஆம் தேதி அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், பிப்ரவரி 13-ஆம் தேதி அவர்கள் தில்லியை நோக்கிப் பேரணியாகச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
மறுபுறம், விவசாயிகள் பேரணியை நிறுத்த அரசு தயாராகி வருகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கிடையேயான ஷம்பு எல்லை சிமெண்ட் தடுப்புகள் மற்றும் கம்பிகளால் அடைக்கப்படுவதைக் காட்டும் படங்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன.
ஹரியாணாவில் காகர் ஆற்றின் மீதுள்ள பாலத்தையும் அங்குள்ள நிர்வாகம் மூடியுள்ளது. ஆறு வறண்டிருக்கும் இடம் வழியே விவசாயிகள் டிராக்டர் மூலம் ஹரியாணாவில் இருந்து டெல்லி நோக்கிச் செல்லாமல் இருக்க, ஜே.சி.பி மூலம் தோண்டும் பணி நடந்து வருகிறது.
கடந்த முறை விவசாயிகள் போரட்டத்தின் போது, பாலம் மூடப்பட்ட போது, விவசாயிகள் அங்கிருந்து டிராக்டர்கள் மூலம் தில்லி எல்லைக்குச் சென்றனர்.
விவசாயிகள் இயக்கத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்படுவதாக தலேவல் மற்றும் பூனியா இருவரும் தெரிவித்தனர். காவல்துறை வாகனங்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களை எச்சரிப்பது போன்ற வீடியோக்களும் வெளியாகியுள்ளன. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் எச்சரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தலேவால் செய்தியாளர்களிடம் , “ஹரியாணாவில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்கக் கூடாது என்று போலீஸ் வாகனங்கள் அறிவிக்கின்றன. வீடுகளில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மக்களிடம் வங்கிக் கணக்குகள் மற்றும் நிலங்கள் குறித்த பதிவுகள் கேட்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு டீசல் வழங்க வேண்டாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் டிராக்டர்களுடன் வெளியே சென்றால் பறிமுதல் செய்யப்படும், அவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும், என்று எச்சரிக்கப்படுகிறது,” என்றார்.
மேலும், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோதி கூறுகிறார், மறுபுறம் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். நாங்கள் புதிய கோரிக்கைகளுடன் வரவில்லை. பழைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்,” என்றார் அவர்.
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் அடங்கிய குழுவை அரசு அமைத்திருக்கிறது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
இதையும் படியுங்கள் : புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் செத்த ஆடுகள் விற்பனையா ? -உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பிப்ரவரி 8-ஆம் தேதி, இந்த அமைச்சர்கள் அரசாங்கத்தின் சார்பில் விவசாயிகளுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தலேவால் கூறினார்.
ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன் விவசாயிகளிடையே அமைதியான சூழலை உருவாக்க விவசாயிகளுக்கு எதிரான இந்தக் கடுமையான சூழலை உருவாக்குவதை அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
“தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி குஜராத் முதல்வராக இருந்த போது, நுகர்வோர் விவகாரங்கள் குழுவின் தலைவராகவும் இருந்தார். 2011-12-ஆம் ஆண்டு இதே கமிட்டியின் அறிக்கையில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள் இப்போது அமல்படுத்தப்படவில்லை. அமைச்சர்கள் பிப்ரவரி 8-ஆம் தேதி, முதல் முறையாக விவசாயிகளுடன் பேசியபோது, அரசாங்கம் தங்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தது என்பது எங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினார்கள். அரசாங்கத்தின் வாக்குறுதிகள் குறித்து அரசாங்க அமைச்சர்களே கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையானது,” என்றார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்