
தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 36 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Flood warning for 36 villages along the banks of Thenpennai River
-
அணையின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக நேற்றும் வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
-
வெள்ளிக்கிழமை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றைக் கடக்க வேண்டாம் என அப்பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, அக். 14
திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அதன் மொத்த கொள்ளளவான 119 அடியில் 116.55 அடியை எட்டியுள்ளது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக நேற்றும் வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது மழை காரணமாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து 1,250 கனஅடியாக உள்ளது. இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-
கடந்த 1958-ம் ஆண்டு கட்டப்பட்ட அணையின் நீர்மட்டம் பல ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக 119 அடியை எட்டியது.
கடந்தாண்டு செய்யப்பட்ட அணையின் மறு சீரமைப்பிற்குப் பிறகு இது சாத்தியமாகியுள்ளது.முன்னதாக 99 அடி வரை மட்டுமே நீரை சேமிக்க முடியும். தற்போது அணையின் கொள்ளளவான 7.32 டி.எம்.சி. யில் நேற்று 7.22 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது.
இதையும் படியுங்கள் : இந்தியா – இலங்கை இடையேயான பயணியர் கப்பல் சேவை | பிரதமர் மோடி துவங்கி வைத்தார்
இந்த அணையில் இருந்து 88 குளங்களுக்கு நீர் அளிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும் வரை சாத்தனூர் அணையில் இருந்து ஆற்றில் நீர் தொடர்ந்து வெளியேற்றப்படும்.
இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 36 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றைக் கடக்க வேண்டாம் என அப்பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.