ஹாமூன் புயல் : வங்கக்கடல் பகுதியில் கடும் சூறாவளி காற்று | துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
Hamoon storm: Strong cyclonic winds in the Bay of Bengal | Number 2 storm warning cage in ports
புதுடெல்லி, அக். 24
வங்கக்கடலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மிக குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மறுநாள் (சனிக்கிழமை) காற்றின் வேகம் மணிக்கு 49 கிலோ மீட்டராக இருந்ததால் அது குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது. ஞாயிற்றுக்கிழமை காற்றின் வேகம் 61 கிலோ மீட்டராக உயர்ந்ததால் தீவிர காற்றழுத்த மண்டலமாக உருவானது.
இந்த நிலையில் அந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அந்த புயலுக்கு ஹாமூன் என்று பெயரிடப்பட்டது. வானிலை ஆய்வு மையம் கணித்த படி ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த காற்றழுத்த மண்டலம் புயலாக உருவெடுத்தது.மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் அதன் நகர்வு இருந்தது.
வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி அந்த புயல் சின்னம் நகர்ந்தது. நேற்று அதன் திசை வங்கதேசம் நோக்கி இருந்தது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த புயல் சின்னம் தீவிர புயலாக மாறியது.
இதனால் வங்கக்கடல் பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசுகிறது. கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதையடுத்து வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஹாமூன் புயல் இன்று மேலும் வலுப்பெறும். அது மேலும் வடமேற்கு திசை நோக்கி நகரும். நாளை (புதன்கிழமை) மதியம் அந்த புயல் வங்கதேசத்தில் கரையை கடக்கும். இந்த புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளத்தில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்துக்கு இந்த புயலால் மிகப்பெரிய அளவுக்கு மழை வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் சில கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். தற்போது புயல் தாக்கம் காரணமாக வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்பகுதிக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சூறாவளி காற்றால் சாலைகள் முழுவதும் மணல் மூடியது. பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. புயல் மேலும் வலு பெற்றதையடுத்து இன்று இன்று அதிகாலை பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.