
அச்சுறுத்தல், பதவிநீக்கம், கைது நடவடிக்கைக்கு நான் அஞ்சமாட்டேன்- ராகுல் காந்தி
I will not fear threats impeachment arrest Raghul gandhi
-
பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொழில் அதிபர் கவுதம் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அதன்பிறகு நான் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை.
-
நான் நிரந்தரமாகவே தகுதி நீக்கப்பட்டாலும் நான் எனது வேலையை தொடர்ந்து செய்வேன். நான் நாடாளுமன்றத்திற்குள் பேசுகிறேனா அல்லது வெளியே பேசுகிறேனா என்பது அல்ல முக்கியம். நாட்டுக்காக தொடர்ந்து போராடுவேன்.
புதுடெல்லி, மார்ச்.25
அரசுக்கு எதிரான தனது கேள்விகளும், ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எம்.பி.பதவி
குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் எம்.பி.பதவியை இழந்துவிட்டதாக மக்களவை செயலர் நேற்று (மார்ச் 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
இந்நிலையில், பதவி இழப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக நான் ஏற்கனவே பலமுறை கூறி இருக்கிறேன். இதற்கான உதாரணங்களை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
விளக்கம் அளிக்க வாய்ப்பு இல்லை
பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொழில் அதிபர் கவுதம் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அதன்பிறகு நான் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற வெளிநாட்டு சக்திகளின் உதவியை நான் கோருவதாக என் மீது சில அமைச்சர்களே குற்றம் சாட்டினார்கள்.
இதையும் படியுங்கள் : மதுரை நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழா; முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு
உண்மையில் அதுபோன்ற எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்குமாறு மக்களவை சபாநாயகருக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால், எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

போராட்டம் தொடரும்
இதுபோன்ற நடவடிக்கைகள் என்னை தடுத்து நிறுத்தாது. கேள்வி கேட்பதை நான் நிறுத்தமாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். நாட்டின் ஜனநாயகத்திற்கான எனது போராட்டமும் தொடரும்.
நான் அஞ்சமாட்டேன்
அதானியின் மறைமுக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட ரூ. 20 ஆயிரம் கோடி யாருடைய பணம் என்ற எளிய கேள்வியைத் தான் நான் கேட்டேன். இந்த விவகாரத்தில் பிரதமரை பாதுகாப்பதற்காக எனக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட நாடகம் தான் இது. அச்சுறுத்தல், பதவிநீக்கம், கைது நடவடிக்கை போன்றவற்றுக்கு நான் அஞ்சமாட்டேன்.
உண்மை எனது கடமை
உண்மையைத் தவிர வேறு எதன் மீதும் எனக்கு விருப்பம் இல்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன். இது எனது கடமை. எனது பதவி பறிக்கப்பட்டாலும், நான் கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து உண்மையை பேசுவேன். இந்த நாடு எனக்கு எல்லாம் கொடுத்தது. அதனால்தான் நான் இதை செய்கிறேன்.
அதானி குறித்த எனது உரை பிரதமருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனை நான் அவரது கண்களில் பார்த்தேன். அதன் காரணமாகவே முதலில் திசை திருப்பல்களை செய்தார்கள். அடுத்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன்.
நாட்டுக்காக தொடர்ந்து போராடுவேன்
நான் நிரந்தரமாகவே தகுதி நீக்கப்பட்டாலும் நான் எனது வேலையை தொடர்ந்து செய்வேன். நான் நாடாளுமன்றத்திற்குள் பேசுகிறேனா அல்லது வெளியே பேசுகிறேனா என்பது அல்ல முக்கியம். நாட்டுக்காக தொடர்ந்து போராடுவேன்.

எனது பணி
நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதுகாப்பதே எனது பணி. அதாவது, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உள்ள அமைப்புகளை பாதுகாப்பது, ஏழைகளுக்காக குரல் கொடுப்பது, பிரதமர் மோடி உடனான உறவை தவறாகப் பயன்படுத்தும் அதானி போன்றவர்கள் குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது ஆகியவையே எனது பணி.”
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.