Home தமிழகம் சுதந்திர தின விழா : தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கினார் முதல் அமைச்சர்

சுதந்திர தின விழா : தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கினார் முதல் அமைச்சர்

0
சுதந்திர தின விழா : தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கினார் முதல் அமைச்சர்
76 th independence day celebration

சுதந்திர தின விழா : தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கினார் முதல் அமைச்சர்

independence day : chief minister distributes tamilnadu government awards

  • தகைசால் தமிழர் விருது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்பட்டது.

  • பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்க்கும் வகையிலும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 165 அடி உயரத்தில் இருந்து 55 வினாடிகளில் இறங்கி சாதனை

சென்னை, ஆக. 15

சென்னையில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்தார். தமிழ்நாட்டுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியதற்காக 2023-ம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு வழங்கப்பட்டது. அந்த விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கி.வீரமணிக்கு வழங்கினார்.

டாக்டர் அப்துல்கலாம் விருது

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் முனைவர் டபிள்யூ. பி.வசந்தா கந்தசாமிக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. அறிவியல் ஆராய்ச்சி துறையில் அவரது சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

நா.முத்தமிழ்செல்விக்கு கல்பனா சாவ்லா விருது

துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நா.முத்தமிழ்செல்விக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற முத்தமிழ்செல்வி ஜப்பானிய மொழி பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். இவர் நேபாளத்தில் அமைந்துள்ள லொபுட்சே சிகரத்தை ஏறியுள்ளார். மேலும் இமாச்சலபிரதேசம் லடாக்கில் உள்ள “கங்கியாட்சே” மலையில் ஏறியுள்ளார்.

அத்துடன் 26.1.2022 அன்று வீரமங்கை வேலுநாச்சியாரை நினைவு கூறும் விதமாக சென்னை வண்டலூர், மண்ணிவாக்கம் அரசு பள்ளி மைதானத்தில் வேலு நாச்சியார் அவதாரமேற்று, குதிரை மீது அமர்ந்து சுமார் 3 மணி நேரம் 1,389 அம்புகள் எய்து 87 சதவீத புள்ளிகள் பெற்று சாதனை செய்துள்ளார். முத்தமிழ்செல்வி இமாச்சலபிரதேசம், குலாங்க் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் இருந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்க்கும் வகையிலும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் 2-வது மகள் வித்திஷா (வயது9)வை தன் முதுகில் கட்டிக் கொண்டு, மூத்த மகள் தக்ஷாவை (வயது13) உடன் அழைத்துக் கொண்டு கண்களை கட்டிக் கொண்டு 165 அடி உயரத்தில் இருந்து 55 வினாடிகளில் இறங்கி சாதனை செய்துள்ளார்.

மேலும் இவர் மகளிர் தினத்தன்று பெண்களை ஊக்கப்படுத்தவும் பெண்கள் சாதனைகளை செய்ய ஊக்கப்படுத்த தவறும் ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 155 அடி உயர மலைப்பட்டு மலையின் உச்சியில் இருந்து 58 வினாடிகளில் கண்களை கட்டிக்கொண்டு இறங்கி சாதனை செய்துள்ளார்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு நல்ஆளுமை விருது வழங்கப்பட்டது. ஆதரவற்ற நோயாளிகளுக்கான உரிய சிகிச்சை மேற்கொண்ட சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணிராஜனுக்கும் விருது வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்ததற்காக சென்னை டாக்டர் செல்வ குமாருக்கு சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டது. சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது-கன்னியாகுமரி மாவட்டம் சாந்தி நிலையத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் விருது கோவை மாவட்டம் மயிலேரிபாளையம் உதவும் கரங்கள் நிறுவனத்தை சேர்ந்த ரத்தன் வித்யாகருக்கு வழங்கப்பட்டது.

டெடி எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு விருது

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்ததற்காக மதுரையை சேர்ந்த டெடி எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சிறந்த தனியார் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி அளிப்பதில் முன்னணியில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேவையினை பாராட்டி சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டான்லி பீட்டருக்கு மகளிர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த கிராமத்தின் ஒளி என்ற நிறுவனத்தின் சமூக சேவையை பாராட்டி சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா | வரும் 25-ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை துவக்கம்

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் குமார், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கோ.கோபி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ராஜ சேகர் (சாகச விளையாட்டு) மற்றும் பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த சந்திரலேகா, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கவிதா தாந்தோணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க சிறப்பாக பணியாற்றிய தெற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றிய அஸ்ராகார்க் (வடசென்னை கூடுதல் கமிஷனர்) கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், ஆகியோருக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் காவல் பதக்கம்

மேலும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு டோங்கரே பிரவின் உமேஷ், கோவை மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் குணசேகரன், நாமக்கல் மாவட்ட போலீஸ் உதவி ஆய்வாளர் முருகன், புதுச்சத்திரம் போலீஸ் ஏட்டு குமார் ஆகியோருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.