மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நவீன தலை சுற்றல் பரிசோதனை கருவி அறிமுகம்
Introduction of vertigo test equipment in Madurai Rajaji Govt Hospital
-
‘வெர்டிகோ’ வீடியோ நிஸ்டாக்மோகிராபி கருவி பரிசோதனையை மட்டும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் பார்க்க வேண்டி இருந்தது.
-
பரிசோதனை மூலம் தலைசுற்றல், சமநிலைக்குலைவு மற்றும் உட்புற காது நோய்களையும்(BPPV, Meniere disease, vestibular migraine, Vestibular neuritis) மிக துல்லியமாக கண்டறிந்து சிறப்பு சிகிச்சை
மதுரை, அக். 12
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நவீன தலை சுற்றல் பரிசோதனை கருவி அறிமுகம்:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழகத்தில் முதன் முறையாக, தலை சுற்றலுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்குவதற்காக வீடியோவுடன் கூடிய ‘வெர்டிகோ’ வீடியோ நிஸ்டாக்மோகிராபி ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட நோயாளிகளுக்கு, இந்த பரிசோதனை மற்றும் சிகிச்சை பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு அடுத்தப்படியாக, தமிழகத்தில் நோயாளிகள் அதிகம் வரக்கூடிய அரசு மருத்துவமனையாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இருக்கிறது. ஒரு நாளைக்கு 3,500 உள் நோயாளிகள், 15 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை சிகிச்சைப் பிரிவில் இதுவரை தலை சுற்றலுக்காக முழு காரணத்தை கண்டறிவதற்கான ‘வெர்டிகோ’ வீடியோ நிஸ்டாக்மோகிராபி கருவி மற்றும் சிகிச்சை வசதி இல்லாமல் இருந்து வந்தது. இந்த பரிசோதனையை மட்டும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் பார்க்க வேண்டி இருந்தது. இதற்கு நோயாளிகள் ரூ.4 ஆயிரம் வரை செலவிட்டு வந்தனர். மேலும், இதுதொடர்பான சிகிச்சை, பராமரிப்புக்காக ஏழை, அடித்தட்டு நோயாளிகள் ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து வந்தனர்.
இந்நிலையில், காது மூக்கு தொண்டை சிகிச்சைப்பிரிவு தலைவராக இருந்த அருள் சுந்தரேஷ்குமார், அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ ஆக பொறுப்பேற்றார். அவர், இந்த ‘வெர்டிகோ’ சிகிச்சை கருவி மற்றும் ஆய்வகத்தை நிறுவவதற்கு முயற்சி செய்தார்.
அதன் அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவில் தலை சுற்றலுக்கான உயர் தர பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்குவதற்காக தமிழகத்திலேயே முதல் முறையாக ‘வெர்டிகோ’ பரிசோதனை கூடம் மற்றும் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ லெ.அருள் சுந்தரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பொதுவாக தாங்க முடியாத தலைசுற்றல் உள்ள நோயாளிகளுக்கு மூளையில் கட்டி போன்ற பிற பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம் என்பதற்காக மூளை நரம்பியல் சிகிச்சைப்பிரிவுக்கு அனுப்பிவிடுவோம்.
மூளை நரம்பியல் சம்பந்தமான பிரச்சினைகள் இல்லாவிட்டால் அவர்களுக்கு ‘வெர்டிகோ’ தலைசுற்றல் முக்கிய காரணமாக இருக்கலாம். இதுவரை, இந்த தலைசுற்றலுக்கான காரணங்களை கண்டறிவதற்கு ‘வெர்டிகோ’ வீடியோ நிஸ்டாக்மோகிராபி ஆய்வுக்கூடமும், சிகிச்சையும் இல்லாமல் இருந்தது.
தற்போது இந்த கருவி நிறுவப்பட்டுள்ளதால் தலைசுற்றலுக்கான கண் அசைவுகளையும் வீடியோவிலே நேரடியாக பார்க்கலாம். இந்த பரிசோதனை மூலம் தலைசுற்றல், சமநிலைக்குலைவு மற்றும் உட்புற காது நோய்களையும்(BPPV, Meniere disease, vestibular migraine, Vestibular neuritis) மிக துல்லியமாக கண்டறிந்து சிறப்பு சிகிச்சை வழங்கலாம்.
இதையும் படியுங்கள் : சொத்து வரி தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி – மதுரை மாநகராட்சி
இந்த நோய்களில் தலைச்சுற்றல் நிவாரண மருந்தினை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து இந்த பரிசோதனை மூலம் தலைசுற்றலுக்கான அடிப்படை காரணிகளை விரைவில் கண்டறிந்து அதனை முழுவதுமாக சரி செய்யலாம்.
வெர்டிகோ என்பது தலைசுற்றல் அல்லது சுழல் உணர்வால் உண்டாகும் ஒரு பாதிப்பு. இது பொதுவாக காதின் உள் பகுதியில் உள்ள சமநிலை அமைப்பில் ஏற்படும் சிக்கல்களால் நிகழ்கிறது. இந்த அமைப்பு உடல் சமநிலையையும், நிலையான தகவல்களையும் பராமரிக்க உதவுகிறது. காது உள் பகுதி தொற்றுகள் சமநிலை செயல்பாட்டு குறைபாடுகள், தலையில் ஏற்பட்ட பாதிப்புகள் வெர்டிகோவுக்கு காரணமாக இருக்கலாம்.வெர்டிகோ எனும் தலைசுற்றல் நோய், உலக மக்கள் தொகையில் 15 சதவீதம் முதல் 20 சதவீதத்திற்கும் அதிகமான பெரியவர்களை பாதிக்கிறது. மேலும், இது 40 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளில் 40 சதவீதம் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 25 சதவீதம் பேரை பாதிப்படைய செய்கிறது.
இதுனால், மயக்கம், பார்வை சிக்கல், காதுகளில் சத்தம், குமட்டல், வாந்தி சமநிலை இழப்பு, தெளிவற்ற பேச்சு, கை கால் பலவீனம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.வெடிர்கோ வீடியோ நிஸ்டாக்மோகிராபி, என்பது கண்களின் சுயாதீன அசைவுகளை (நிஸ்டாக்மஸ்) பின்தொடரும் ஒரு பரிசோதனையாகும். இது தலைசாய்வு மாற்றங்கள் அல்லது காட்சி மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மாறுகிறது. சமநிலை அமைப்பு கண் அசைவுகளுடன், நெருக்கமாக தொடர்புடையதால் இந்த பரிசோதனை கண்களில் ஏற்படும் மாறுதல்களை கண்டறிந்து சமநிலை அமைப்பின் சிக்கல்களை பரிசோதிக்க முடிகிறது.
நோயாளிகள் மீண்டும் தலைசுற்றல் நீங்கி, சமநிலையை அடைவதற்கு உதவுகிறது. இந்த பரிசோதனை மேற்கொள்வதற்கு ஒரு நோயாளிக்கு 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகும். பெங்களூருவில் உள்ள மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து, அவர்கள் மூலம் பட்டமேற்படிப்பு மாணவர்கள் மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் டாக்டர் செந்தில், காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப்பிரிவு துறைத்தலைவர் பேராசிரியர் ஜெ.அழகுவடிவேல், இணைப்பேராசிரியர்கள் தி.சிவசுப்பிரமணியன், கே.எஸ்.ராஜாகணேஷ், உதவி பேராசிரியர்கள் பா.முத்துக்குமார், மு.நாகராஜகுருமூர்த்தி, ஜெ.பிரவீன்குமார், வினோத் கலந்து கொண்டனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்