
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு | முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் கட்டுரை
kalaingar karunanithi | actor rajinikanth essay on murasoli
-
தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கலைஞர்.
-
எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா? நடக்காத காரியம்… இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம்.
சென்னை, அக். 04
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு | முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் கட்டுரை : முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:- தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கலைஞர். அவர் எழுதிய “பராசக்தி” படத்தின் அற்புதமான, சமுதாய சீர்திருத்தும், புரட்சிகரமான வசனங்களை உணர்ச்சிகரமாக பேசி, நடித்து சிவாஜி கணேசன் ஒரே நாளில் உச்ச நட்சத்திரம் ஆனார்.
எம்.ஜி.ஆருக்கு “மருதநாட்டு இளவரசி”,”மந்திரிகுமாரி”, “மலைக்கள்ளன்” போன்ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்களை மிகப்பெரிய வெற்றிப்படங்களாக்கி எம்.ஜி.ஆரை நட்சத்திரமாக மாற்றினார்.
1977-ம் ஆண்டு என்னுடைய பியட் காரை மியூசிக் அகாடமி பக்கம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வண்டி வந்துகொண்டிருந்தது. வண்டியில் வந்துகொண்டிருந்தவரை என் கார் கண்ணாடி மூலம் உற்றுப்பார்த்தேன். நன்கு தெரிந்த முகம். கண்ணில் கருப்புக்கண்ணாடி. கலைஞர் என்று தெரிந்தது. நான் அப்படியே இடது பக்கமாக ஒதுங்கி வழி விட்டேன். எனது காரை கடக்கும் போது அவர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுதான் நான் கலைஞரை முதல் முதலில் பார்த்தது.
நான் 1980-ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைஞரின் நண்பர் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை.
படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் தயாரிப்பாளர் என்னிடம் வந்து “நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன்… நம் படத்துக்கு கலைஞர் வசனம் எழுத ஒப்புக் கொண்டார்” என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நான் கலைஞரின் வசனங்களை பேசி நடிப்பதா? நடக்காத காரியம்… இதற்கு நான் கர்நாடகாவிற்கே ஓடிப்போய் மறுபடியும் பேருந்தில் டிக்கெட் விற்க ஆரம்பித்து விடலாம். தயாரிப்பாளரிடம் முடியவே முடியாது என்று கூறினேன். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு இடி விழுந்த மாறி ஆயிற்று.
அவர் வசனம் எழுத சம்மதித்ததே நமக்கு கிடைத்த பாக்கியம். அவர் வசனம் எழுதினால் நம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் இல்லையென்றால் அவர் எழுத சம்மதித்த பிறகும் நீங்கள் வேண்டாம் என்று கூறியதை அவரிடம் நான் எப்படி சொல்வது என்று திண்டாடினார்.
நான் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன் என்று கூறினேன். அவரும் வேண்டா வெறுப்பாக சரி என்று சொல்லி கலைஞரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
கலைஞரை சந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சென்றேன். வாங்க என்று அவருக்கே சொந்தமான அந்த கரகரப்புக் குரலில் என்னை அழைத்து நலம் விசாரித்தார். பின்பு “கதையைக் கேட்டேன்… நன்றாக இருக்கிறது. சிறப்பாக வசனங்களை எழுதிடலாம்” என்றார். நான் அவரிடம் “சார் உங்கள் வசனங்களை நான் பேச முடியாது. எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை எப்படி நான் பேசுவது? என்னால் முடியாது. தவறாக நினைக்க வேண்டாம்” என்றுகூறினேன்.
அதற்கு அவர் சிரித்து “எனக்கு யாருக்கு எப்படி எழுதவேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு எழுதுவது போல எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டேன்… அதே போல எம்.ஜி.ஆருக்கு எழுதுவதைப்போல சிவாஜிக்கு எழுதமாட்டேன். உங்கள் படங்களை நான் பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுகிறேன்” என்று சர்வ சாதாரணமாக கூறினார்.
எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனை அந்த நொடியில் எனக்கு தோன்றியதற்கு நீ கெட்டிக்காரன்டா என்று நானே மகிழ்ந்து “சார் படப்பிடிப்பில் நாங்கள் சில வசனங்களை மாத்துவோம் சில சில வசனங்களை நீக்குவோம். அப்படி இருக்கும் போது உங்கள் வசனங்களை மாத்தவும் முடியாது நீக்கவும் முடியாது. அது சரியானதாகவும் இருக்காது” என்று கூறினேன்.
அதற்கு அவர் “மாற்றுங்கள்.. ஒன்றும் தவறில்லை, அது என்ன திருக்குறளா?” என்று கூறினார். அவர் அப்படி சொல்லுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் நொடியில் சாம்பல் ஆகி விட்டது. எனக்கு ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தேன்.
இதை கவனித்த கலைஞர் சிரித்துக்கொண்டே “முன்னால் யார் வசனங்களை எழுதினாரோ அவரே எழுதட்டும்… நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன்… நீங்கள் கவலைப்பட வேண்டாம்…” என்று கூறி தன் உதவியாளரிடம் தயாரிப்பாளரை அழைக்கும் படி கூறினார்.
தயாரிப்பாளரிடம் “என்னுடைய வசனங்களை பேசுவதற்கு தனக்கு கஷ்டமாக இருக்கும் என்று ரஜினி கூறுகிறார். நான் அவருடைய பாணியிலேயே எழுதித் தருகிறேன் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார்.
ஆனால் இந்த மாதம் 10-ந்தேதி படப்பிடிப்பு என்று ரஜினி கூறுகிறாரே… நான் அடுத்த மாதம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்… காலம் மிகவும் கம்மியாக இருக்கின்றது. எனக்கு ஏற்கனவே முன் நிர்ணயிக்கப்பட்ட வேலைகள் நிறைய இருக்கின்றன.
ஆகையால் இந்தப் படத்திற்கு என்னால் வசனங்கள் எழுத முடியாது. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி தயாரிப்பாளரை அனுப்பி வைத்தார். பிறகு என்னைப் பார்த்து “என்ன ரஜினி இப்போ உங்களுக்கு திருப்தியா?” என்று கேட்டார்.
தயாரிப்பாளரின் மனதையும் துன்புறுத்தாமல், என்னையும் திருப்திபடுத்திய அவருடைய செய்கையால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பும், மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் அவருடைய வசனங்களை பேசி நடித்திருக்கலாமோ? தவறு செய்து விட்டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது.
பல நேரங்களில் நான் அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவர் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் அவரை கவனித்துப் பார்த்ததில் எந்த ஒரு முடிவையும் எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எடுக்கமாட்டார். அதற்கு சம்மந்தப்பட்டவர்களில் பல பேருடன் விசாரித்து, பேசி, விவாதித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார்.
அப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கும் முக்கியமான முடிவை நிச்சயம் கலைஞர் பல பேரின் ஆலோசனைகளை கேட்டுதான் எடுத்திருப்பார்.
எனக்கு தெரிந்த ஒருவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து “இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம். நீங்கள் மட்டும் கேட்டு பிறகு என்னிடமே திருப்பிக்கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்.
அது 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு அவருக்கும் எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கும் நடந்த தொலை பேசி உரையாடல் ஆகும். அதில் எஸ்.எஸ்.ஆர். “அண்ணே… ஏதோ கெட்ட நேரம் அவசர அவசரமாக என்னென்னமோ நடந்து விட்டது. வருங்காலத்தில் கழகத்திற்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும்.
வேறு யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் ஒரு பொது இடத்தில் சந்தித்து மனம் விட்டுப்பேசினால் எல்லாம் சரி ஆகிடும். கலைஞரிடம் நான் பேசுகிறேன். எனக்காக இதை செய்யுங்கள்” என்று கூறுவார்.
அதற்கு எம்.ஜி.ஆர். “இல்லை தம்பி.. என்னுடைய விசுவாசிகள் எனக்கு ஆதரவாக போராட்டங்கள் செய்து என்னுடைய அபிமானிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள். நான் திரும்பி கட்சியில் சேர்ந்தால் என்னுடைய அபிமானிகளை
கட்சியில் உள்ளவர்கள் முந்தைய மாதிரிப் பார்க்க மாட்டார்கள்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு | குமரகுரு பொது கூட்டத்தில் மன்னிப்பு கேட்க உயர் நீதி மன்றம் உத்தரவு
அவர்களைத் தனிமைப்படுத்துவார்கள் அவர்கள் எல்லாம் உதிரிப்பூக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகவே நான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வேறு வழியில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதே” என்று அந்த உரையாடல் முடிந்திருக்கும்.
அதன் பின் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கினார். அதன் பின் யார் யார் எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சொன்னார்களோ.. அதில் பல பேர் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்கம் போனார்கள்.
அதனால் கலைஞரின் இதயம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்? எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்னாரோ? எவ்வளவு வேதனைகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி தொண்டர்களுக்கு அவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், கட்டுரைகள், சினிமாவில் எழுதிய வசனங்கள், அவர் செய்த சுற்றுப்பயணங்கள், மேடைப்பேச்சுகள், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்டுக் கோப்பாக, ஒரு தனி ஆளாக கட்சியை வழி நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சி.
கலைஞர் வாழ்ந்த அதே காலத்தில் நானும் வாழ்கிறேன், அவருடைய இதயத்தில் எனக்கென்று ஒரு தனி இடம் இருந்தது. அதனால்தான் எந்த ஒரு விழாவிலும் என்னை அவர் அருகில் அமர வைத்து மகிழ்வார் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. இவ்வாறு கலைஞரை பற்றி உணர்ச்சிபொங்க நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.