
கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் ; மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
kalakshetra college sexual abuse issue; state human rights commission
-
மகளிர் ஆணையம் விசாரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையமும் இன்று விசாரணை
-
பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபரி கண்ணன் முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் அடங்கிய விசாரணை குழு
சென்னை, ஏப்.11
மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில், இன்று மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவும் விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையமும் இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. தங்களுக்கு நீதி வேண்டும் என்ற மாணவிகளின் கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உள்ளிருப்பு போராட்டம்
உலக அளவில் புகழ் பெற்ற மிகப்பெரிய அறக்கட்டளை நிறுவனமான கலாஷேத்ராவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவ-மாணவிகள் 4 தினங்களுக்கு முன்பாக திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கல்லூரி விடுமுறை
இதனையடுத்து கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். 2 நாட்கள் போராட்டம் நீடித்தது. ஊடகங்களிலும் மாணவிகள் போராட்டம் குறித்த செய்திகள் வெளியானது. இரண்டு நாட்கள் இரவு பகலாக போராட்டம் நீடித்தது. எங்களுக்கு நீதி வேண்டும் எனவும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் கூறினர். மாணவிகளின் போராட்டம் தீவிரமடையவே கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை
கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கலாஷேத்ரா விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான புகார்கள் எதுவும் வரவில்லை. இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி நேரில் விசாரணை
இதைத்தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார். 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவி, மாணவிகள் நான்கு பேர் மேல் புகார் கூறியுள்ளனர். மாணவிகள் கட்டுக்கட்டாக புகார் அளித்துள்ளனர். நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப்-2023; 20 மாநில வீரர்கள் பங்கேற்பு
கல்லூரியில் சிறப்பு பயிற்சி என்ற பெயரில் இவர் உட்பட 4 பேர் தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக மாணவிகள் புகார்கள் அளித்தனர். இதை வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும், விசாரணை நடத்த வந்த மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர்.
ஹரிபத்மன் கைது
குறிப்பாக ஹரி பத்மன் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர். தன் மீது புகார் கூறிய அனைவரிடம் சகஜமாக மட்டுமே பழகினேன் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஹரிபத்மன் கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் டிஸ்மிஸ்
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபரி கண்ணன் முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் கோரிக்கையை ஏற்று பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர்களில் ஹரிபத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற மூன்று உதவி ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவித்தது.
கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம்
இதனையடுத்து கலாஷேத்ரா கல்லூரி கடந்த 5ஆம் தேதி திறக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பாலியல் தொல்லை குறித்த புகாரை தேர்வு முடிவதற்கு முன்பாக விரைந்து முடிக்க கோரி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று கலாஷேத்ரா கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவான்மியூர் எல்.பி. சாலையில் இருந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பேரணியாக கலாஷேத்ரா நோக்கி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
விசாரணை என்ற பெயரில் மிரட்டல்
புகார் கொடுத்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தனித்தனியாக அழைத்து மிரட்டியது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர், மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை என்ற பெயரில் மிரட்டி வருகின்றனர். தற்போது கல்லூரியில் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு முடிவதற்கு முன்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் அறிவித்தனர்.
மாநில மனித உரிமை ஆணையம்
பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேர் மீது மாணவிகள் கூறிய பாலியல் புகாரில், ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே மாநில மனித உரிமை ஆணையம் நாளிதழில் வெளியான செய்தியை பார்த்து தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்து இருக்கிறது. இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணைய துணை பதிவாளர் வெளியிட்டு இருக்கும் உத்தரவில், மாநில மனித உரிமை ஆணைய ஐஜி/இயக்குநர் இன்று கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் இது தொடர்பாக விசாரணை செய்து 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.