Home செய்திகள் தமிழகத்துக்கு வெறும் கையால் முழம் போடுகிறார் மோடி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாடல்

தமிழகத்துக்கு வெறும் கையால் முழம் போடுகிறார் மோடி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாடல்

0
தமிழகத்துக்கு வெறும் கையால் முழம் போடுகிறார் மோடி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாடல்

தமிழகத்துக்கு வெறும் கையால் முழம் போடுகிறார் மோடி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாடல்

Modi gives thumbs to Tamil Nadu with bare hands – Chief Minister M.K. Stalin’s slams

  • மாநிலங்களை அழிப்பதன் மூலமாக நமது மொழியை, இனத்தை, பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது.

  • 10 ஆண்டுகளாக ரூ.500-க்கு மேல் உயர்த்திவிட்டு, இப்போது ரூ.100 குறைக்கின்றனர். இது அப்பட்டமான மோசடி வேலை. இதைவிட மக்களை ஏமாற்றும் செயல் இருக்க முடியாது.

தருமபுரி, மார்ச். 11

“பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாகதான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். தேர்தல் வரும்போது மட்டும் பிரதமருக்கு தமிழக மக்களின் மீது பாசம் பொங்குகிறது.” என முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சாடியுள்ளார்.
தருமபுரியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர். 2 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 16 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். மத்திய பாஜக அரசு மாநிலங்களை சமமாக நடத்துவது இல்லை.

மத்திய அரசு மாநிலங்களையே அழிக்க நினைக்கிறது. மாநிலங்களை அழிப்பதன் மூலமாக நமது மொழியை, இனத்தை, பண்பாட்டை அழிக்கப் பார்க்கிறது மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. மாநில அரசின் ஆக்சிஜனான வரி வருவாயை நிறுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு.

சிலிண்டர் விலை 

மத்திய அரசுக்கு வருவாய் என்பது மாநில அரசு கொடுப்பது தான்.தேர்தல் வருவதால் சிலிண்டர் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. 10 ஆண்டுகளாக ரூ.500-க்கு மேல் உயர்த்திவிட்டு, இப்போது ரூ.100 குறைக்கின்றனர். இது அப்பட்டமான மோசடி வேலை. இதைவிட மக்களை ஏமாற்றும் செயல் இருக்க முடியாது.

அதிமுக ஆட்சியில் மக்கள் வேதனை

ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியதே அதிமுக ஆட்சியின் சாதனை. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவால் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்று திட்டங்களை பட்டியலிட முடியுமா? அதிமுக ஆட்சியில் மக்கள் வேதனைதான் பட்டனர்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர்

மாநில அரசு அளிக்கும் நிதியில் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவது சுற்றுப்பயணம் அல்ல. பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாகதான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.

பிரதமர் மோடியின் வருகை

தேர்தல் வரும்போது மட்டும் பிரதமருக்கு தமிழக மக்களின் மீது பாசம் பொங்குகிறது. 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கே இப்போதான் கட்டுமான பணியை தொடங்குவதாக நாடகம் நடத்துவார்கள். தேர்தல் முடிந்ததும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணியை நிறுத்தி விடுவார்கள். பிரதமர் மோடியின் வருகையால் தமிழகத்துக்கு ஏதேனும் பயன் உண்டா?

நிதி கொடுக்காத மத்திய அரசு

சென்னையில் வெள்ளம் வந்தபோது, மக்களைப் பார்க்க வராத மோடி, தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது மக்களை பார்க்க வராத மோடி, தேர்தல் வருவதால் தற்போது ஓட்டு கேட்டு அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். தமிழக மக்களின் வளர்ச்சி நிதியை நான் கொள்ளை அடிக்க விடமாட்டேன் என பிரதமர் கூறியிருக்கிறார். தமிழகத்துக்கு என்ன வளர்ச்சி நிதியை கொடுத்திருக்கிறார்?. வெள்ள நிவாரண நிதியாக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுக்கவில்லை.

மக்களின் நலனுக்காக நடக்கிற ஆட்சி

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு பணம் தரவில்லை, ஒப்புதலும் தரவில்லை, பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு முக்கால்வாசி பணம் தருவது மாநில அரசுதான். தமிழகத்துக்கு வெறும் கையால் முழம் போடுகிறார் மோடி. மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள். மக்களும். அரசும். திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருகிறது இதைத்தான் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் நடப்பது கோடிக்கணக்கான மக்களின் நலனுக்காக நடக்கிற ஆட்சிதான்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்