
ஆன்லைன் ரம்மியால் பணமும் உயிரும் பறிபோகும் அவலம் ; ஆளுநர் ஆதரிப்பாரா தடை சட்ட மசோதாவை ?
MONEY & LIVES LOST BY ONLINE RUMMY; WILL GOVERNOR SUPPORT THE PROHIBITION BILL
திருச்சி, மார்ச்.25
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டத்தை விளையாடும் பலர் அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தினர் நிர்கதியில் நிற்கும் சூழலும் ஏற்படுகிறது.

லட்சக்கணக்கான ரூபாயையும் பறித்து உயிரையும் பறிக்கும் இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆன்லைன் ரம்மியால் இதுவரை 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கையும் எடுக்காத ஆளுநர்
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக சட்டசபையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆளுநர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டவரைவை தமிழக சட்டசபைக்கே திருப்பி அனுப்பினார்.
மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம்?
மேலும் ஆன்லைன் ரம்மி குறித்து மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த செயலை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்தன. இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க ஆளுநர் இவ்வாறு செய்கிறார் என கேள்வி எழுந்தது.
இதையும் படியுங்கள் : தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு
எனினும் மத்திய அரசோ அதிகாரம் உண்டு என கூறியிருந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் திடீரென காணவில்லை என அவருடைய மனைவி அம்மு கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் சுரேஷின் உடல் மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் இறந்த சுரேஷ் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட ரூ 16 லட்சத்தை இழந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலைக்கு முன் சுரேஷ் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.

கடிதம்
அதில் முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு தயவு செய்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யுங்கள். தங்கள் காலில் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன், என்னை போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டு செல்லக் கூடாது.

மசோதா
இத்தகைய நிலை யாருக்கும் வரக் கூடாது என கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து நேற்று முன் தினம் தமிழக சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் திருச்சியில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி திருவெறும்பை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அவ்வப்போது விளையாடி வந்துள்ளார்.

மேலும் ஒரு உயிரிழப்பு
இந்த விளையாட்டு நிறைய பணத்தை இழந்த ரவிசங்கர் மனவேதனை அடைந்தார். கடன் வாங்கி விளையாடிய நிலையில் அந்த கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்