புளூம்ஃபாண்டெய்னில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 343 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி 5 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா 102 பந்துகளில் 109 ரன்களையும், அய்டன் மார்க்ரம் 49 ரன்களையும் பின்னால் இறங்கிய மில்லர் 37 பந்துகளில் 58 ரன்களையும் விளாச தென் ஆப்பிரிக்கா அணி இலக்கை விரட்டத் தொடங்கியது முதலே வெற்றி பெறுவோம் என்ற உத்வேகத்துடன் விரட்டியது.
இந்த புளூம்ஃபாண்டெய்ன் மைதானத்தில் அதிகபட்ச இலக்கை விரட்டி வெற்றி பெறுவது இதுதான் முதல் முறை, இதற்கு முன்னர் 274 ரன்களைத்தான் இங்கு விரட்டியுள்ளனர்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் 3வது அதிக ரன் இலக்கை விரட்டலுமாகும் இது. இதன் மூலம் 10 உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகளாக 10 புள்ளிகளைப் பெற்ற தென் ஆப்பிரிக்கா 9வது இடத்தில் உள்ளது,
தானாகவே தகுதி பெறுவதற்கு சற்று வெளியே உள்ளது, தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் 4 ஒருநாள் போட்டிகளே உள்ளன. நெதர்லாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வென்றுவிட்டால் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று விடும்.
இந்த நிலையில்தான் பவுமாவின் சதம் முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. இது இவரது 3வது சதம். 33 சர்வதேச இன்னிங்ஸ்களுக்குப் பிறகு பவுமா சதமெடுத்துள்ளார்.
இங்கிலாந்து நேற்று 28/2 என்ற நிலையிலிருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் (94), ஹாரி புரூக் (80) மொயீன் அலி (51) ஆகியோரது
அதிரடி மூலம் 50 ஓவர்களில் 342/7 என்ற அதிகபட்ச ஸ்கோரை எட்டியது. இங்கிலாந்து அணி இதற்கு முன்னர் 5 ஒருநாள் போட்டிகளில் வரிசையாக உதை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய பிட்ச் வேகப்பந்துக்கு ஆரம்பத்தில் சாதகமாக இருந்தது. அதில் பார்னெல் (1/54), லுங்கி இங்கிடி (1/66) தொடக்கத்தில் அட்டகாசமாக வீசி இங்கிலாந்தை 28/2 என்று குறைத்தனர். முதல் போட்டியில் அதிரடி சதம் விளாசிய ஜேசன் ராய் இந்த முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் இங்கிடி இன்ஸ்விங்கரில் கிளீன் பவுல்டு ஆனார். டேவிட் மலான், பார்னெல் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆனார்.
பென் டக்கெட், ஹாரி புரூக் பயங்கரமான பந்து வீச்சைச் சந்தித்தனர், திணறினர். ஆனால் இதில் பென் டக்கெட் தாக்குப் பிடிக்கவில்லை கேசவ் மகராஜ் பந்தை தூக்கி அடித்து லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். இங்கிலாந்து 82/3 என்று தடுமாறியது. ஆனால் ஹாரி புரூக் சில அட்டகாசமான கிளாஸ் ஷாட்களை ஆடி 46 பந்துகளில் அரைசதம் விளாசினார். 75 பந்துகளில் 80 ரன்களை விளாசி, இவரும் பட்லரும் ஸ்கோரை 300க்கும் மேல் கொண்டு செல்வார்கள் என்று ஆட்டம் மாறிப்போனது. ஆனால் பவுமா அப்போது ஒரு ஸ்மார்ட் கேப்டன்சி செய்தார் பார்ட் டைம் ஸ்பின்னர் அய்டன் மார்க்ரமை வீச அழைக்க புரூக் கேட்ச் ஆகி வெளியேறினார்.
புரூக் ஆட்டமிழந்தவுடன் அதனால் என்ன அதான் நான் இருக்கேனே என்று பட்லர் தன் பங்குக்கு சிக்சர், பவுண்டரிகளை விளாசி 49 பந்துகளில் அரைசதம் கண்டார். மொயீன் அலியும் அட்டகாசமாக அடித்து ஆடினார்,
அதுவும் ஆன்ரிச் நார்க்கியாவை ஒரு ஓவரில் சாத்து சாத்தென்று சாத்தி அரைசதம் பூர்த்தி செய்தார். 36 ஓவர்களில் இங்கிலாந்து 200 ரன்களை எட்டியது. ஆனால் 45 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நார்க்கியா பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார் மொயின் அலி.
கிறிஸ் வோக்ஸ் இறங்கி பேட்டிங் மறந்தது போல் ஆடி 16 பந்துகளில் 14 ரன்களை எடுத்து பட்லரை வெறுப்பேற்றினார். ஆனால் சாம் கரண் இறங்கி சிக்சர்களை விளாச 17 பந்துகளில் 28 ரன்கள் நொறுக்கினார், அதில் நேராக அடித்த ஒரு சிக்ஸ் பின் காலில் சென்று அடித்த அற்புதமான சிக்ஸ். இருவரும் சேர்ந்து கடைசி 4 ஓவர்களில் 60 ரன்களை விளாசித்தள்ளினர். பட்லர் 94 ரன்களில் வெளியேறினார் அடித்திருந்தால் இது இவரது 11வது சதமாகியிருக்கும்.
குவிண்டன் டி காக், பவுமா தொடக்கத்தில் இறங்கினர். இங்கிலாந்தின் இடது கை பவுலர் ரெலி டாப்லி, வோக்ஸ் பந்துகளை பவுமா பவுண்டரிகளாக விளாசித்தள்ளினார். எடுத்த எடுப்பிலேயே 36 ரன்களுக்கு வந்தார் பவுமா, அப்போது டி காக் 4 ரன்களில்தான் இருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் டி காக் தன் வேலையைக் காட்டினார், ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார். தென் ஆப்பிரிக்கா 7 ஓவர்களில் 54/0 என்று அதிமேல் தொடக்கம் கண்டது. ஆலி ஸ்டோன் என்ற வேகப்புயல் வந்தவுடன் ரன் ரேட் குறைந்தது, டி காக் 31 ரன்களில் இவர் பந்தை டக்கெட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கடந்த போட்டியில் அருமையான சதம் எடுத்த வான் டெர் டசன் பவுமாவுடன் இணைந்தார். இவர் 38 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு டவரிங் சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆதில் ரஷீத் பந்தில் காலியானார்.
தெம்பா பவுமா தன் போக்கில் நன்றாக ஆடினார், ஒன்று, இரண்டு ரன்களை பயங்கரமாக ஓடி 90களில் வந்து தசைப்பிடிப்பினால் அவதியுற்றார், ஆனாலும் ஆதில் ரஷீத்தை பவுண்டரி விளாசி சதமெடுத்தார்.
பவுமா 109 பந்துகளில் ஆட்டமிழந்த போது தென் ஆப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 174/2 என்று இருந்தது. வான் டெர் டசனும் உடனேயே ஆட்டமிழக்க இங்கிலாந்து வெற்றி வாய்ப்பை ருசிக்கத் தயாரானது.
ஆனால், கிளாசன் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 27 ரன்கள் எடுக்க மார்க்ரம் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 49 ரன்களை விளாசி ஆட்டத்தை தொய்ய விடாமல் 7 ஓவர்களில் 55 ரன்களைச் சேர்த்தனர்.
கிளாசன் ஸ்டோனின் அதிவேக அவுட் ஸ்விங்கரை துரத்தி விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆக, மார்க்ரம் விக்கெட்டை ஆதில் ரஷீத் கூக்ளியில் பவுல்டு முறையில் கைப்பற்ற 282/5 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.
ஆனால், வெற்றி பெறுவதற்கு மில்லர், யான்சென் நிலைத்து ஆட வேண்டியிருந்தது, இருவரும் அதைச் செய்தனர், மில்லர், 37 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தனர். மார்க்கோ யான்சென் 29 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 32 நாட் அவுட். 49.1 ஓவர்களில் 347/5 என்று மிக முக்கியமான வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. ஆட்ட நாயகன் கேப்டன் தெம்பா பவுமா. 3வது மற்றும் இறுதி போட்டி புதன் கிழமை நடைபெறுகிறது.