-
துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்களில் 3 மாத காலத்துக்கு அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.
-
சிரியாவின் மக்களுக்கு உதவும் வகையில் 6 டன் அத்தியாவசியப் பொருட்களை அந்நாட்டு பிரதிநிதிகளிடம் இந்திய அரசு நேற்று ஒப்படைத்தது. இதற்காக சி-17 ரக ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது.
துருக்கி, பிப். 09
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000 தாண்டியுள்ளது. இதனால் துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்களில் 3 மாத காலத்துக்கு அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 20,000-மாக அதிகரிக்கலாம். 2 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்படலாம். உலக நாடுகள் துருக்கிக்கு விரைந்து உதவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிரியாவின் மக்களுக்கு உதவும் வகை யில் 6 டன் அத்தியாவசியப் பொருட்களை அந்நாட்டு பிரதிநிதிகளிடம் இந்திய அரசு நேற்று ஒப்படைத்தது. இதற்காக சி-17 ரக ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அண்டை நாடான துருக்கிக்கு, இந்தியா நிவாரண பொருட்களை விமானத்தில் அனுப்புவது தெரிந்தும் பாகிஸ்தான் வான்வழியை கடந்து இந்திய விமானப்படை ஜம்போ விமானங்கள் துருக்கி செல்ல பாகிஸ்தான் அனுமதி வழங்கவில்லை. இதனால் துருக்கிக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் இந்திய விமானப் படை விமானங்கள் ஈரானை சுற்றி செல்கின்றன.
இதையும் படியுங்கள் : பிஞ்சு குழந்தைகளின் பிரியமான பஞ்சு மிட்டாயில் நஞ்சு -வஞ்சகர்கள் யார் ?
அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் சாலைகள் வழியாக உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப இந்தியா விரும்பிய போதும், நீண்ட தாமதத்துக்குப்பின், ஆப்கானிஸ்தானிலிருந்து காலி லாரிகள் வந்து இந்தியாவிலிருந்து பொருட்கள் எடுத்துச் செல்ல பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. இதனால் மனிதாபிமான உதவிகளுக்கு இந்தியாவின் செலவு இரட்டிப்பாகியது.
சிரியா உள்நாட்டு போர் காரணமாக ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ளது. அதிபர் பஷர் அல் அசாத் அரசு மீது மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்நாட்டுக்கு சர்வதேச உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்க வேண்டும் என சிரியாவில் உள்ள செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு சிரியாவில் உள்ள பலபகுதிகள், உள்நாட்டு போர் காரணமாக ஏற்கெனவே சேதமடைந்தநிலையில் உள்ளன. சிரியா மற்றும் ரஷ்ய படைகளின் குண்டு வீச்சால், இங்கிருந்த வீடுகள், மருத்துவமனைகள் தரைமட்டமாகின. தற்போது இங்கு சேதம் மேலும் அதிகரித்துள்ளது. சிரியாவின் ஜன்டைரிஸ் நகரில் இடிபாடுகளை அகற்றுவதற்கு இயந்திரங்கள் இல்லாததால், மக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றுகின்றனர்.
சிரியாவில் நடந்த மீட்பு பணியில் பல அதிசய சம்பவங்களும் நடந்துள்ளன. இங்குள்ள கட்டிட இடிபாடுகளை உறவினர்கள் அகற்றி கொண்டிருந்தபோது, ஒரு குழுந்தையின் அழுகுரல் கேட்டது. அந்த குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இருந்துள்ளது. தாய் பூகம்பத்தில் சிக்கி இறந்துவிட்டார். குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது. அந்த குழந்தையை தொப்புள் கொடியை வெட்டி, மருத்துவமனையில் சேர்த்ததாக அதன் உறவினர் கலீல் அல் சுவாதி என்பவர் கூறினார். அந்த குடும்பத்தில் இந்த குழந்தையை தவிர யாரும் உயிர் பிழைக்கவில்லை.
சிரியாவின் ஜன்டைரிஸ் நகரில் வசிக்கும் 60 வயது முதியவர் அலி பத்தல் கூறுகையில், ‘‘எனது குடும்பத்தினர் இந்த இடிந்த கட்டிடத்துக்கு கீழே உள்ளனர். அவர்களை மீட்க யாரும் இல்லை. அவர்களின் குரல்களை என்னால் கேட்க முடிகிறது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை மீட்க யாரும் இல்லை’’ என்றார்.
சிரியாவின் அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ்மாகாணங்கள் முழுவதும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் பூகம்பத்தில் தரைமட்டமான இடிபாடுகளில் 7 வயது சிறுமியும், அவரது தம்பியும் உயிருடன் சிக்கியிருந்த காட்சி சமூக ஊடகத்தில் உலகளவில் வைரலாக பரவியது. தம்பியின் தலையில் அடிபடாதவாறு, தனது கைகளால் அந்த சிறுமி இடிபாடுகளை தாங்கிய நிலையில் உள்ளார். சுமார் 17 மணி நேரமாக இவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அதன்பின்பு இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த போட்டோவை ஐ.நா பிரதிநிதி முகமது சபா என்பவர் பகிர்ந்திருந்தார்.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.