Home தமிழகம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு கட்டண வார்டு – திறந்து வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு கட்டண வார்டு – திறந்து வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

0
அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு கட்டண வார்டு – திறந்து வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

 

  • மதுரை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 8 வார்டுகளும், அரசு புதிய மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 8 வார்டுகளும் உள்பட மொத்தம் 16 கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • அரசு மருத்துவமனை கட்டண வார்டில் குளிர்சாதன வசதி, கழிவறை, ஹீட்டர், தொலைக்காட்சி, நோயாளிகள் படுக்கை, உதவியாளர் படுக்கை ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,200 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். சொகுசு அறைகளுக்கு ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படும்.

மதுரை, மார்ச் 02

தமிழக அரசு, அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு கட்டண வார்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. நவீன வசதிகளுடன் இங்கு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி மதுரை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 8 வார்டுகளும், அரசு புதிய மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 8 வார்டுகளும் உள்பட மொத்தம் 16 கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை திறந்து வைத்து மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் மதுரை, கோவை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் கட்டண வார்டுகள் திறந்து வைக்கப்பட்டன. மதுரையில் இன்றைக்கு 16 வார்டுகளை திறந்து வைத்துள்ளேன்.

அரசு மருத்துவமனை கட்டண வார்டில் குளிர்சாதன வசதி, கழிவறை, ஹீட்டர், தொலைக்காட்சி, நோயாளிகள் படுக்கை, உதவியாளர் படுக்கை ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,200 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். சொகுசு அறைகளுக்கு ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படும்.

3-ம் பாலின அறுவை சிகிச்சையில் மதுரை அரசு மருத்துவமனை சாதனை படைத்து வருகிறது. தென்னிந்தியாவில் அதிகப்படியான ஆபரேஷன்கள், மதுரை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளது

. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச கருத்தரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் மற்றும் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது

. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஜெய்கா பங்களிப்புடன் அமைய உள்ள மருத்துவ கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சிதிலம் அடைந்த நிலையில் உள்ளன. ஒருசில ஆஸ்பத்திரிகள், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. எனவே தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்தியாகராஜ பாகவதர் வாழ்க்கை கதை : தயாரிப்பாளருக்காக காத்திருக்கும் பார்த்திபன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஆஸ்பத்திரிகளுக்கான புதிய கட்டிடம் இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு கட்டிட பணிகள் தொடங்கும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமாக கடந்த மாதம் ஜப்பான் சென்று ஜெய்கா நிறுவன துணைத்தலைவரை சந்தித்தோம். அப்போது போதிய நிதி ஆதாரங்களை வழங்குவது தொடர்பாக பேசி உறுதிப்படுத்தி வந்துள்ளோம். இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டபோது மதுரைக்கு மட்டும் ஜெய்கா நிதி உதவியுடன் கட்டிடம் எழுப்பப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசி நிதி ஆதாரங்களை பெற வேண்டியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய மந்திரியை 30 முறைக்கும் மேலாக சந்தித்து பேசியுள்ளோம்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் அடுத்த ஆண்டு டிசம்பரில் விடப்படுகிறது. அதன் பிறகு அங்கு பணிகள் தொடங்கும். வருகிற 2028ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கட்டுமான பணிகள் முடியும். அரசு மருத்துவமனை கட்டண வார்டுகள் குளிர்சாதன வசதியுடன் கூடியவை. தனியார் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால் மதுரை மருத்துவமனையில் ரூ. 1,200 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து அவர், ராஜாக்கூர் துணை சுகாதார மையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ரூ.1.33 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராஜாக்கூர், குமாரபுரம், எஸ்.கீழப்பட்டி, பெரிய பூலான்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். பின்னர் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.