பிளஸ் 2 கணிதத் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் -தேர்வுத் துறை
Plus two maths exam grace mark for wrong question – tn examination department
-
கருணை மதிப்பெண் அறிவிப்பு மாணவர்கள் மகிழ்ச்சி
-
நாளை (ஏப்.10) முதல் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி
சென்னை, ஏப் . 09
பிளஸ் 2 கணிதத் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற 47-பி
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்.3-ம் தேதி நிறைவு பெற்றது. இதில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாளில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற 47-பி கேள்வி தவறானதாக இருந்தது. அதாவது பொருத்தமற்ற வகையில் ‘ஒரு நீள்வட்டத்துக்கும், கோட்டுக்கும் பொதுவான பரப்பினைக் காண்க’ என்று கேட்கப்பட்டிருந்தது. இதற்கு கருணை மதிப்பெண்
வழங்க ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு தேர்வுத் துறை மறுப்பு தெரிவித்தது.
கருணை மதிப்பெண்
அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன. தமிழக அரசின் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை தற்போது முன்வந்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட விடைக்குறிப்பில், ‘பிளஸ் 2 கணிதப் பாடத்தேர்வில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற தவறான 47-பி கேள்வியை மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 கணிதப்பாட வினாத்தாள் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் அறிவிப்பு மாணவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலை தளங்களில் விடைக்குறிப்புகள்
இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைக்குறிப்புகள் சமூகவலை தளங்களில் வெளியானது. இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நாளை (ஏப்.10) முதல் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தேர்வுத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகம் முழுவதும் 80 முகாம்களில், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்துதல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதையும் படியுங்கள் : சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்
விடைக்குறிப்புகள் (கீ ஆன்சர்)
விடைத்தாளை திருத்துவதற்காக ஆசிரியர்களுக்கு விடைக்குறிப்புகள் (கீ ஆன்சர்) வழங்கப்படும். அதன் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்க வேண்டும். இந்நிலையில் திருத்துதல் பணிகள் தொடங்கும் முன்னரே விலங்கியல், தாவரவியல் உட்பட சில பாடங்களின் விடைக்குறிப்புகள் சமூக வலை தளங்களில் வெளியானதாகக் கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வித் துறை
இதையடுத்து விடைக்குறிப்புகள் வெளியானது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க தேர்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்