
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி; தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
PM MODI INAUGRATES NEW INTEGRATED TERMINAL OF CHENNAI AIRPORT
- சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பச்சைக்கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்
சென்னை, ஏப். 08
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.2,467 கோடி மதிப்பிலான புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பச்சைக்கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதையும் படியுங்கள் : சூரியின் நடிப்பு -பிரமிப்பு-விடுதலை படத்தை பார்த்த ரஜினி பாராட்டு
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புதிய திட்ட பணிகளை பிரமதர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து இன்று மதியம் தமிழ்நாடு வருவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஹைதராபாத்தில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டார். மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.
விமான முனையம் திறப்பு
விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்தார். இந்த விழாவை முடித்து கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3.30 மணியளவில் புறப்பட்டு நேப்பியர் பாலம் அருகே ஐஎன்எஸ். அடையார் ஹெலிபேட் தளத்துக்கு சென்றார்.
வந்தே பாரத் ரயில் சேவை
அங்கிருந்து மதியம் 3.55 மணியளவில் கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.. அப்போது பாஜகவினர் சாலையோரம் நின்று உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடியின் கார் மீது பூக்கள் தூவினர். இதில் மகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி காரில் இருந்தபடியே கையசைத்தார். அதன்பிறகு சென்னை-கோவை ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விவேகானந்தர் இல்லம்
பிறகு மாலை 4.25 மணியளவில் காரில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் புறப்பட்டு சென்றார். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஒருமணிநேரம் வரை அங்கு இருப்பார். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து காரில் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார்.
அகல ரயில்பாதை திட்டம்
தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 2 வழித்தட பயணிகள் ரயில் 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரயில்பாதை திட்டத்தை திறந்து வைக்கிறார்.
மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச் சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.40 மணியளவில் கர்நாடக மாநிலம் மைசூரு சென்றடைகிறார். இரவு அங்கு தங்கும் பிரதமர் மோடி நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.